பேபி - விமர்சனம்
05 Jul 2015
தமிழ்த் திரையுலகத்தை பிடித்துள்ள பேய் இன்னும் விடவில்லைதான் என்றாலும் வரும் ஒரு சில பேய்ப் படங்களும் திகிலைக் கிளப்பி ரசிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.
முன்னணி நட்சத்திரங்களே பேய்ப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது, பேய்ப் படங்கள் வருவதில் கூட தவறில்லை என்றேதான் தோன்றுகிறது. இது ஒரு சீசன் அவ்வளவே, திடீரென இந்த சீசன் மாறிவிடும். அதுவரையில் இது போன்ற படங்கள் வந்து கொண்டுதானிருக்கும். தமிழ் சினிமாவே சீசனுக்கு உட்பட்டதுதானே.
மனோஜ், ஷிரா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால், இருவரும் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீவர்ஷினி, சதன்யா என இரண்டு பெண் குழந்தைகள். ஸ்ரீவர்ஷினி அம்மா ஷிராவிடமும், சதன்யா அப்பா மனோஜிடமும் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு முறை ஷிராவின் தோழி ஒருவர் ஸ்ரீவர்ஷினியைப் பார்க்க அம்மா போலவும் இல்லை, அப்பா போலவும் இல்லை என சந்தேகத் தீயைப் பற்ற வைக்கிறார். அதன் பின் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துப் பார்க்கும் ஷிராவிற்கு அது உண்மைதான் எனத் தெரிய வருகிறது. கணவன் மனோஜிடம் இருந்து சண்டை போட, அவர் அது உண்மைதான் என்கிறார். தன்னிடம் வளரும் சதன்யாதான் நமக்குப் பிறந்த குழந்தை என்றும், ஸ்ரீவர்ஷினி தத்தெடுத்த குழந்தை என்ற உண்மையைச் சொல்கிறார்.
இதனிடையே, ஸ்ரீவர்ஷினியை ஆரம்பத்திலிருந்தே ஒரு பெண் உருவம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனுடன் அவளும் விளையாடிக் கொண்டிருக்கிறாள். இந்த சூழ்நிலையில் பிரிந்த மனோஜ், ஷிரா இருவரும் மீண்டும் ஒன்றாக வசிக்க ஆரம்பிக்கிறார்கள். அதன் பின் தனது சொந்த மகளான சதன்யாவிடம் அதிகப் பாசம் காட்டுகிறார் ஷிரா. இதனால், ஸ்ரீவர்ஷினி மனமுடைந்து போகிறாள். அப்போது ஸ்ரீவர்ஷினியைத் தொடரும் அந்த உருவம் சதன்யாவை பயமுறுத்துகிறது. ஸ்ரீவர்ஷினியைத் தொடர்வது இறந்து போன அவள் அம்மாவின் ஆவிதான் என்ற உண்மைத் தெரிய வரும் மனோஜ், தனது மகளான சதன்யாவைக் காப்பாற்ற மீண்டும் மனைவியை விட்டுப் பிரிகிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் பரபரப்பான மீதிக் கதை.
மனோஷ், ஷிரா ஆகிய இருவரையும்தான் நியாயமாக படத்தின் நாயகன், நாயகி எனக் குறிப்பிட வேண்டும். ஆனால், அவர்களை விட சிறுமிகளாக நடித்துள்ள ஸ்ரீவர்ஷினி, சதன்யா இருவருக்கும்தான் படத்தில் முக்கியத்துவம். அவர்களைச் சுற்றியேதான் கதை நகர்கிறது. சிறுமிகள் இருவருமே நுணுக்கமான முகபாவனைகளைக் கூட அனுபவசாலிகள் போல வெளிப்படுத்தியுள்ளார்கள். முழுப்படத்தையும் தங்கள் மீது தாங்கியுள்ளார்கள். அதிலும் ஸ்ரீவர்ஷினி, பாசம், ஏக்கம், தவிப்பு என அனைத்தையும் யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஜோன்ஸ் ஆனந்தின் ஒளிப்பதிவு, பக்தா சிங்கின் படத் தொகுப்பு, சதீஷ் – ஹரீஷின் இசை அனைத்துமே படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது.
ஸ்ரீவர்ஷினியின் அம்மா ஆன்னியாக நடித்திருக்கும் அஞ்சலி ராவுக்கு எதற்கு அப்படி ஒரு பேய் மேக்அப்.
இரண்டு சிறுமிகளின் பாசத்தைக் காட்டுகிறேன் என அதையே கொஞ்சம் ஓவராகக் காட்டியிருப்பது ஒரு கட்டத்தில் அச்சச்சோ...என பாவத்தை வரவழைக்கிறது. அதைத் தவிர்த்திருக்கலாம்.
பேபி - பெட்டர்...
Tags: Baby