ஒரு தோழன் ஒரு தோழி - விமர்சனம்

05 Jul 2015
தமிழ் சினிமாவில் பணம் இருக்கிறவர்கள் மட்டுமே படம் எடுக்க முடியும் என்பது ஒரு புறமிருக்க, அதிகப் பணம் இருப்பவர்கள் மட்டுமே விளம்பரம் செய்து படத்தை ஓட வைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. நல்ல படங்களை சில முன்னணி நிறுவனங்கள், சினிமா ஆர்வம் கொண்ட சில தயாரிப்பாளர்கள் கண்டு கொள்வதில்லை என்பது வருத்தமான விஷயமே. ‘காக்கா முட்டை’ படத்தைக் கூட வியாபாரமாக்க தனுஷ் என்ற பெயர் தேவைப்படுகிறது. ஆனால், கடைசி நேரத்தில் தயாரிப்பாளர் அன்பு  தோள் கொடுத்து இந்தப் படத்தை வெளியிட உதவி செய்திருக்கிறார். ஒரு யதார்த்தமான திரைப்படத்தை எந்த சினிமாத்தனமாக முகங்கள் இல்லாமல், சினிமாத்தனமான காட்சியமைப்புகள் இல்லாமல் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மோகன். மீனேஷ் கிருஷ்ணா, மனோதீபன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் ஊரிலேயே கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கம் அஸ்தராவை மனோதீபன் விரட்டி விரட்டி காதலிக்கிறார். ஆனால், தன்னுடைய குடும்ப சூழ்நிலையைச் சொல்லி மனோவைக் காதலிக்க மறுக்கிறார் அஸ்தரா. ஆனால், ஒரு கட்டத்தில் அவர்களுக்குள்ளும் காதல் மலர்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் அஸ்தரா உடை மாற்றுவது அவருடைய மொபைலிலேயே தெரியாமல் பதிவாகி விடுகிறது. அதைப் பார்க்க மனோதீபன் ஆசைப்பட அப்போது காதலர்களுக்கிடையில் நடக்கும் சண்டையில் மொபைல் உடைந்து விடுகிறது. அதை ரிப்பேருக்காகக் கொடுக்கும் இடத்தில்தான் பிரச்சனையே எழுகிறது. மொபைல் ரிப்பேர் பார்க்கம் கடையில் இருப்பவர்கள் அந்த நிர்வாண வீடியோவை காட்டி மிரட்டி அஸ்தராவை அலங்கோலமாக்க முடிவு செய்கின்றனர். இதனால் அவமானப்படும் அஸ்தரா தற்கொலை செய்து கொள்கிறார். அதன் பின் ஒரு தோழனுக்காகவும் தோழிக்காகவும் ஒரு தோழன் என்ன செய்கிறார் என்பதுதான் நட்பின் உயரத்தை விளக்கும் ‘ஒரு தோழன் ஒரு தோழி’ படத்தின் கதை. இந்தப் படத்தில் நடித்துள்ள மனோ தீபன், மீனேஷ் கிருஷ்ணா, அஸ்தரா மூவருமே சினிமாத்தனமே இல்லாத முகங்களாக இருக்கிறார்கள். மூவருடைய நடிப்பையும் நடிப்பு என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அந்தந்த கதாபாத்திரங்களாக மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். ஆடை, தோற்றம், பேச்சு என அனைத்திலுமே அப்படி ஒரு எளிமை, இனிமை. முகப்பூச்சுக்குக் கூட முக்கியத்துவம் தராமல் முத்திரை பதிக்கும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் இந்த மூன்று முகங்கள். படத்தில் நடித்துள்ள அனைவருமே புதுமுகங்கள்தான். ஹலோ கந்தசாமி மட்டுமே ஓரளவிற்குத் தெரிந்த முகம். அவருடைய நகைச்சுவை கூட மிகவும் யதார்த்தமாக அமைந்துள்ளது. சைக்கிள் பந்தயத்தில் ஆரம்பமாகும் நண்பர்களின் இனிய பயணத்தை, அதே சைக்கிள் பயணத்தில் வைத்து காதலுக்கும், கிளைமாக்சக்கும் பயன்படுத்தியிருப்பது இயக்குனரிடன் ‘டச்’. ஒளிப்பதிவில் மட்டும் ஆங்காங்கே வெயிலின் தாக்கம் அதிகம் வெளிப்படுகிறது. அது மட்டுமே குறையாகத் தெரிகிறது. மற்றபடி தமிழ் சினிமாவில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு யதார்த்தப் படைப்பை இந்தக் குழுவினர் கொடுத்திருக்கிறார்கள். ஒரு தோழன் ஒரு தோழி – தோள் கொடுங்கள் சினிமா ரசிகர்களே…

Tags: oru thozhan oru thozhi

Share via: