பரஞ்சோதி - விமர்சனம்
05 Jul 2015
எத்தனையோ காதல் கதைகளைப் பார்த்த தமிழ் சினிமா இன்னும் பல விதமான காதல் கதைளைப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறது. இந்தப் படமும் ஒரு காதல் கதைதான், சாதி சார்ந்த காதல் கதை.
ஒரு சாதியைச் சேர்ந்த ஒரு பையன், வேறொரு சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலிக்கிறான் என காலம் காலமாக நாம் பல படங்களில் பார்த்து வரும் காதல் கதைதான். ஆனாலும், கிளைமாக்சில் ஒரு நெகிழ வைக்கும் முடிவைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
விஜயகுமார், கீதா தம்பதியினரின் மகன் சாரதி. சாதி வெறி பிடித்தவர் விஜயகுமார். ஆனால், இவரின் மகனான சாரதி வேறொரு சாதியைச் சேர்ந்த அன்சிபாவைக் காதலிக்கிறார். வழக்கம் போல இந்த சாதி மாறிய காதலுக்கு விஜயகுமார் எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஒரு நாள் திடீரென சாரதி, அன்சிபாவைக் கல்யாணம் செய்து கொண்டு வந்து நிற்கிறார். மகனை வீட்டை விட்டு துரத்துகிறார் விஜயகுமார்.
தனது தாத்தாவின் நிலத்தில் வந்து ஒரு குடிசையைக் கட்டி மனைவியுடன் புது வாழ்க்கையை ஆரம்பிக்கிறார் சாரதி. இதனிடையே ஜெயிலில் இருந்து வெளிவரும் அன்சிபாவின் சித்தப்பா போஸ் வெங்கட்டுக்கு அன்சிபாவின் காதல் திருமண விவகாரம் தெரிய வருகிறது. ஒரு சாதி மோதலில் ஜெயிலுக்குள்ளேயும் கொலை செய்யும் அளவிற்கு சாதி வெறி உள்ள போஸ் வெங்கட் அண்ணன் மகளின் காதல் திருமணத்தைக் கண்டு கோபமடைகிறார். அதன் பின் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
புதுமுகம் சாரதி, கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். முதல் படம் என்றாலும் அவர் முகத்தில் எந்தப் பயமும் தெரியவில்லை. சாதித் தீ எறியும் கிராமத்தில் காதல் தீ பற்றிக் கொள்ள பரபரப்பாகவே நடித்திருக்கிறார்.
நாயகியாக அன்சிபா. இவர்தான் மலையாள ‘த்ரிஷ்யம்’ படத்தில் மோகன்லாலின் மூத்த மகளாக நடித்தவர். இந்தப் படத்தில் கிளாமரை அள்ளி வீசியிருக்கிறார். அவருடைய இரண்டு கண்களும் ஏதோ சொல்லத் துடிப்பது போலவே உள்ளது. முயற்சித்தால் தமிழில் முக்கிய இடத்தைப் பிடிக்கலாம்.
கஞ்சா கருப்புதான் படத்தின் நகைச்சுவைக்குச் சொந்தக்காரர். வழக்கமான தாய்மாமன்கள் செய்யும் உதவியை நாயகனுக்குச் செய்கிறார். விஜயகுமார், கீதா என சீனியர் நட்சத்திரங்களும் படத்தில் இருக்கிறார்கள். விஜயகுமாருக்கு இம்மாதிரியான கேரக்டர் எல்லாம் அல்வா சாப்பிடுவது போல. போஸ் வெங்கட் சாதிக் கட்சித் தொண்டராக நடித்திருக்கிறார்.
படத்தில் உள்ள கொடுமையே சிங்கமுத்து, மயில்சாமி, முத்துக்காளை இடையிலான நகைச்சுவைதான். அதிலும் சிங்கமுத்துவுக்கு பெண் வேடம் போட்டு நடிக்க வைத்திருப்பதெல்லாம் கொடுமையின் உச்சக்கட்டம்.
இம்மாதிரி கிராமத்துக் காதல் கதைகளில் பாடல்கள் சிறப்பாக இருந்தால் படத்திற்கு பக்கபலமாக இருக்கும்.
பரஞ்சோதி – பரஞ்’சாதீ…’ என தலைப்பு வைத்திருக்கலாம்.
Tags: paranjothi