பாபநாசம் - விமர்சனம்
03 Jul 2015
மலையாளத்தில் மோகன்லால் நடித்து 2013ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம். அடுத்து கன்னடம், தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது. ஹிந்தியிலும் விரைவில் வெளியாக உள்ளது. மலையாளத்தில் படத்தை இயக்கிய ஜீது ஜோசப் இந்த தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்தை இயக்கியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன், கௌதமி ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்கள். பாபநாசம் என்ற சிறிய ஊரில் கேபிள் டிவி வைத்து நடத்தி வரும் கமல்ஹாசனுக்கு மனைவி கௌதமி, மகள்கள் நிவேதா தாமஸ், எஸ்தர் என அன்பான, அழகான குடும்பம். மிகவும் சிக்கனக்காரரான கமல்ஹாசன் இரவில் கூட வீட்டுக்குள் வராமல் கேபிள் அலுவலகத்திலேயே இரண்டு படங்களைப் பார்க்கும் அளவிற்கு சினிமா பைத்தியம். அவருடைய மூத்த மகள் கல்விச் சுற்றுலா சென்ற இடத்தில் ஐ.ஜி. ஆஷா சரத் மகனால் குளிக்கும் போது நிர்வாணமாக படம் பிடிக்கப்படுகிறாள். அந்த வீடியோவை வைத்துக் கொண்டு நிவேதாவிடமும், அவரது அம்மாவான கௌதமியிடமும் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறான். அப்போது நடக்கும் கைகலப்பில் நிவேதா, ஐ.ஜி.யின் மகனை கொன்று விடுகிறார். அதன் பின் கமல்ஹாசன் குடும்பத்தினர் அந்தக் கொலையை காவல் துறையிடமிருந்து புத்திசாலித்தனமாக மறைக்க முயற்சிக்கிறார்கள். தன் மகனைக் காணாமல் தவிக்கும் ஐ.ஜி. ஆஷா சரத், கமல்ஹாசன் குடும்பத்தினரிடமிருந்து உண்மையைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார். இதன் முடிவு என்ன என்பதுதான் படத்தின் கதை. கமல்ஹாசன் படம் என்றால் அவருடைய நடிப்பைப் பற்றிக் கேட்க வேண்டுமா என்ன?. ஆனாலும், ஒரே ஒரு உறுத்தல், கமல்ஹாசனின் ஒட்டு மீசை. இந்தியத் திரையுலகத்திற்கே மேக்கப் என்றால் எப்படியிருக்க வேண்டும் என்று வெளிச்சம் போட்டுக் காட்டியவர் இப்படி ஒட்டு மீசை வைத்து அவரது தீவிர சினிமா ரசிகர்களை ஏமாற்றியிருக்க வேண்டாம். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அப்படியே மாறிவிடும் கமல்ஹாசன், நடுத்தரக் குடும்பத்துத் தலைவனாக, தன் குடும்பத்தின் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளவராக பெண் பிள்ளைகள் ஏங்கும் அளவிற்கு நடித்திருக்கிறார். இப்படி ஒரு அப்பா நமக்கு இருக்க மாட்டாரா என்று கண்டிப்பாக ஏங்குவார்கள். கமலுக்கும், கௌதமிக்கும் இடையிலான அந்த ரொமான்ஸ் காட்சி கூட சிம்ப்ளி சூப்பர்ப். கிளைமாக்ஸ் காட்சியில் ஆஷா சரத்திடமும், அவர் கணவரிடமும் பேசும் அந்தக் காட்சியில் கண்ணீர் விடாமல் இருக்க முடியாது. இந்த மாதிரி குடும்பப் படங்களிலும் அவ்வப் போது நடியுங்கள் மிஸ்டர் கமல்ஹாசன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கௌதமி. ‘த்ரிஷ்யம்’ படத்தில் மீனாவைப் பார்த்தவர்களுக்கு கமல் ஜோடியாக கௌதமி இந்தப் படத்தில் பொருத்தமாக இருப்பாரா என்ற கேள்வி ஆரம்பத்தில் இருந்தது. அந்த சந்தேகங்களையெல்லாம் தவிடு பொடியாக்கியிருக்கிறார் கௌதமி. கமல் சாவி என்றால் இவர் பூட்டு, இவர் பூட்டு என்றால் கமல் சாவி. அந்த அளவிற்கு இவர் இல்லாமல் அவர் இல்லை, அவர் இல்லாமல் இவர் இல்லை என ஜோடிப் பொருத்தம் அவ்வளவு பிரமாதம். கமல்ஹாசனின் மகள்களாக நிவேதா தாமஸ், பேபி எஸ்தர். நிவேதாவிற்கு நடிக்க நல்ல வாய்ப்பு. கமல்ஹாசனுடன் நடிக்கிறோம் என்ற எந்த வித பயமும் இல்லாமல் இவரும் மிகவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார். இதற்கு முன் சில படங்களில் நாயகியாக நடித்தும் கவனிக்கப்படாதவர் இந்தப் படத்தில் நிச்சயம் கவனிக்கப்படுவார். பேபி எஸ்தர், பெரிய நடிப்புப் புலிகளுக்கு மத்தியில் எலியாக இல்லாமல் இவரும் புலியாகவே தெரிகிறார். கமல்ஹாசன் படத்தில் அவர் மட்டும் நடித்துப் பெயர் வாங்காமல் மற்றவர்களும் பெயர் வாங்கியிருக்கும் படம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். ஐ.ஜி.யாக நடித்துள்ளா ஆஷா சரத், அவரது கணவராக நடித்திருக்கும் ஆனந்த் மகாதேவன், இன்ஸ்பெக்டர் அருள்தாஸ், கான்ஸ்டபிள் கலாபவன் மணி, டீக்கடை ஓனர் எம்.எஸ்.பாஸ்கர், கேபிள் டிவி ஊழியர் பசங்க ஸ்ரீராம் என நடித்திருக்கும் அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையில் இரண்டு பாடல்கள்தான், இருந்தாலும் இரண்டுமே இனிப்புதான். சுஜித் வாசுதேவ் இசையில் பாபநாசம் ஆக காட்டப்படும் அந்த மலை சார்ந்த பிரதேசமும் கதை நடக்கும் இடங்களும் இயல்பாக ரசிக்க வைத்துள்ளன.