இன்று நேற்று நாளை - விமர்சனம்
26 Jun 2015
தமிழ் சினிமாவில் அறிவியல் சம்பந்தப்பட்ட கதைகள் வருவதேயில்லை. எப்போது பார்த்தாலும் காதல், ஆக்ஷன் தவிர தற்போது யாருமே எதைப் பற்றியும் யோசிப்பதில்லை. ஆனால், அறிமுக இயக்குனரான ரவிக்குமார் தன்னுடைய முதல் படத்திலேயே இப்படி ஒரு ‘ரிஸ்க்’கான கதையைத் தேர்வு செய்திருந்தாலும் படத்தை மிகவும் ‘பிரிஸ்க்’ ஆகவே கொடுத்திருக்கிறார். எத்தனையோ ஹாலிவுட் படங்கள் டைம் மிஷின் சம்பந்தப்பட்டு வந்திருந்தாலும் ஒரு தமிழ்ப் படத்தில் இப்படி ஒரு கதையை நமது வட்டத்துக்குள் கொடுத்திருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இந்த மாதிரிப் படங்களுக்கு எவ்வளவு பட்ஜெட் கொடுத்தாலும் போதாது. அதிகமான கிராஃபிக்ஸ் காட்சிகள் இல்லாமல், பிரம்மாண்டமான அரங்குகள் இல்லாமல் எளிமையாக இப்படி ஒரு ரசிக்கும்படியான படமா என்பது ஆச்சரியம்தான். படித்து விட்டு சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று நினைக்கும் விஷ்ணு விஷாலுக்கு பணக்காரப் பெண் மியா ஜார்ஜுடன் காதல். ஒரு நாள் விஷ்ணுவும், அவருடைய நண்பர் கருணாகரனும் குடித்துவிட்டுச் செல்லும் போது ஒரு சிறிய விபத்தில் அவர்கள் சென்ற காரும், எதையாவது கண்டுபிடித்துக் கொண்டேயிருக்கும் கார்த்திக்கின் காரும் சிக்கிக் கொள்கிறது. அப்போது அந்த இடத்தில் ஒரு டைம் மிஷின் வந்து இறங்குகிறது. அதைப் பயன்படுத்தும் முறைய கார்த்திக், விஷ்ணுவிடமும், கருணாகரனிடமும் சொல்கிறார். ஆனால், திடீரென மின்சாரம் தாக்கி காத்திக் கோமாவில் சென்று விடுகிறார். அந்த டைம் மிஷினை விளையாட்டாக சோதித்துப் பார்க்கும் விஷ்ணு அதை செயல்படுத்தும் முறையைக் கற்றுக் கொள்கிறார். அதன் பின் அவருடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்கிறது. அவை என்ன என்பதை இப்போதே சொல்லிவிட்டால் படம் பார்க்கும் சுவாரசியம் குறைந்துவிடும். விஷ்ணு புதுப் புதுக் கதைகளைத் தேடிச் செல்கிறாரா அல்லது அவரைத் தேடிப் புதுப் புதுக் கதைகள் வருகிறதா என்பது தெரியவில்லை. முந்தைய படங்களை விட இந்தப் படத்தில் இளங்கோ கதாபாத்திரத்தில் மேலும் இளமையாகத் தெரிகிறார். நேற்றைய நடிப்பை விட இன்றைய நடிப்பில் மெருகு கூடியுள்ளது. அது நாளையும் அதிகமாகும் என எதிர்பார்க்கலாம். காதல், காமெடி, சென்டிமென்ட் எல்லாவற்றிலும் பயணிக்கும் கதாபாத்திரம். இந்த டைம் மிஷின் கதையிலும் அவருடைய டைம் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. படத்தில் ஏறக்குறைய படம் முழுவதும் வருகிறார் கருணாகரன். சந்தானம் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொல்லிவிட்டதால், கருணாகரன் கொஞ்சம் முயன்றால் சந்தானத்தின் இடத்தை நெருங்கலாம். ஜோதிடர் புலி வெட்டி ஆறுமுகம் கதாபாத்திரத்தில் காமெடியைப் பலி கொடுக்காமல் புலியாக பாய வைத்திருக்கிறார். கேரளாவிலிருந்து வரும் நடிகைகள் அழகாக இருக்கிறார்களா, அல்லது அழகான நடிகைகள் அனைவருமே கேரளாவில் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. மியா ஜார்ஜ் பேசி நடிப்பதை விட அந்தக் கண்களிலேயே ஆயிரம் அர்த்தங்களைக் காட்டி விடுகிறார். டைம் மிஷின் என்றால் என்ன என்பதை விளக்கிச் சொல்லும் அளவிற்கு விஞ்ஞானியாக இருக்கும் ஒரு எலெக்ட்ரிக்கல் மெக்கானிக்காக கார்த்திக். அலட்டல் இல்லாத கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கும் வில்லன் ரவிசங்கர், பணக்கார பிஸினஸ்மேன் ஜெயப்பிரகாஷ் அனைவருமே அவரவர் கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்திருக்கிறார்கள். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையெல்லாம் படத்திற்கு முக்கியமாகத் தெரியவில்லை. அந்த அளவிற்கு படத்தின் கவனத்தை திரைக்கதை ஈர்த்து விடுகிறது. வசந்த்தின் ஒளிப்பதிவும் லியோ ஜான் பாலின் குழப்பமில்லாத, தெளிவான படத்தொகுப்பும் படத்திற்கு மிகவும் பக்கபலம். இம்மாதிரியான படங்களுக்கு படத் தொகுப்புதான் மிகவும் முக்கியம். அதை சரியான டைமிங்கில் கட் செய்திருக்கிறார் லியோ ஜான் பால். திரைக்கதைதான் இந்தப் படத்தின் ஜீவன். அதை எங்குமே தொய்வில்லாத அளவிற்கு தெளிவாக எழுதியிருக்கிறார் ரவிக்குமார். எந்த ஒரு காட்சியிலுமே குழப்பமில்லை. இன்றையும் நேற்றையும் தொடர்புப்படுத்தியிருக்கும் விதம் மிகவும் கவனமாகக் கையாளப்பட்டுள்ளது. காபி குடிக்கக் கூட எழுந்து வெளியில் போக முடியாது. அந்த அளவிற்கு படத்தின் ஒரு காட்சியைத் தவற விட்டால் கூட படம் புரியாது.