காட்டின் வளம், மர்ம மரணம், மறுபிறவி, மாயக் கண்ணாடி என பொறுப்பாகவும், பரபரப்பாகவும் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த்.
மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ள சிற்பம் மற்றும் ஓவியம் கற்றுத்தரும் தனியார் கவின் கலைக்கல்லூரியின் ஹாஸ்டர் அறை ஒன்றில் அடுத்தடுத்து இரண்டு மாணவர்கள் மர்ம மரணம் அடைகிறார்கள். அதற்கான காரணம் என்னவென்பதை அந்த அறையில் தங்கியிருக்கும் மாணவர் வெற்றி கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அவருக்கு உதவியாக டாகுமென்டரி படத் தயாரிப்பாளர் ஸ்முருதி வெங்கட்டும் இணைகிறார். அந்த மர்மத்தை அவர்கள் எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
காட்டை அழிக்கக் கூடாது, மரங்களை அழிக்கக் கூடாது, வன விலங்குகளை அழிக்கக் கூடாது என இயற்கையும், அதன் சார்ந்த தாவரம், உயிரினங்களைப் பற்றியும் அழுத்தமாய் சொல்லியிருக்கிறது இந்த ‘வனம்’. அதையே மையமாக வைத்தால் டாகுமென்டரி ஆகிவிடும் என்பதால் அதற்கு ஒரு த்ரில்லர் கதையைச் சேர்த்து பரபரப்பாக்கி இருக்கிறார்கள்.
கல்லூரி மாணவராக வெற்றி, அடுத்தடுத்து நண்பர்களின் மரணத்தால் ஒரு தவிப்பில் இருக்கும் கதாபாத்திரம். இயல்பாய் நடித்திருக்கிறார். அவருடைய பள்ளிப் பருவத் தோழியான ஸ்முருதி வெங்கட் கல்லூரியில் யதேச்சையாய் சந்திப்பதாகக் காட்டப்பட்டாலும் சினிமாத்தனமாக உள்ளது. இருப்பினும் ஸ்முருதியும் யதார்த்தமாய் நடித்திருக்கிறார்.
பிளாஷ்பேக் காட்சிகளில் வேலராமமூர்த்தி வில்லத்தனத்தில் உருட்டி, மிரட்டுகிறார். அவருக்கு எதிராய் மலைவாழ் பெண்ணாக அனு சித்தாரா. தான் சார்ந்த காட்டைக் காப்பாற்றத் துடிக்கிறார். கல்லூரி முதல்வராக அழகம் பெருமாள். கிளைமாக்ஸ் காட்சியில் திடீர் வில்லனாய் அவதாரம் எடுக்கிறார்.
மலையும் மலை சார்ந்த இடம் என்பதால் அழகுணர்ச்சியைக் கூட்ட ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன் தனி கவனம் செலுத்தியிருக்கிறார். ரோன் எதான் யோஹன் பின்னணி இசையும் படத்திற்கு பலம்.
மாணவர்களின் மரணங்கள் நமக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மர்ம முடிச்சுக்களை அதிகம் இணைத்து அதை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் விதத்தில் திரைக்கதை அமைத்திருந்தால் இன்னும் சுவாரசியமாக அமைந்திருக்கும்.
இருப்பினும் மாறுபட்ட படமாகக் கொடுக்க முயற்சித்ததற்குப் பாராட்டி படத்தைப் பார்க்கலாம்.
வனம் - அழகும் ஆபத்தும்...