தங்களது மண்ணை அன்னியர்களிடமிருந்து காக்க போராடி தன்னுயிர் இழந்த மரைக்காயர் என்ற வீரரரின் கதைதான் இந்தப் படம்.
400 வருடங்களுக்கு முன்பு மலையாளக் கரையோரம் போர்த்துகீசிய படைகளை எதிர்த்து போர் புரிந்து வீர மரணம் அடைந்தவர்தான் மரைக்காயர் என்றழைக்கப்பட்ட குஞ்சாலி. படத்தில் நான்காவது குஞ்சாலியான முகம்மது அலி என்பவரின் வாழ்க்கை வரலாற்றை கருவாக வைத்து கதையமைத்துள்ளார்கள்.
1500 முதல் 1600 கால கட்டங்கள் வரையில் கேரளக் கரையோரம் கோழிக்கோடு உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளை சாமுத்ரி மன்னன் ஆட்சி புரிந்து வந்தார். அப்போது கடல் வணிகத்தில் அந்தப் பகுதிகளில் அரபு முஸ்லிம்கள்தான் மலையாள வணிகர்களுடன் இணைந்து நடத்தி வந்தனர். அந்த வணிகத்தைக் கைப்பற்ற போர்த்துகீசியர்கள் முயன்றனர். அதனால், ஏற்படும் சண்டையில் சாமுத்ரி மன்னனுக்காக கடற் கொள்ளையனாக இருந்த மரைக்காயர் போர்த்துகீசியர்களை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுகிறார். அதன்பின் சூழ்ச்சி மூலம் மரைக்காயரை போர்த்துகீசியர்கள் எப்படி வென்று சிறை பிடித்து கொன்றார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை.
இயக்குனர் பிரியதர்ஷன் அந்தக் கால கட்டங்களை அப்படியே கண்முன் நிறுத்தியுள்ளார். படம் பார்க்கும் போது அந்தக் காலத்திற்கே நம்மை அழைத்துச் சென்றுவிட்ட ஒரு உணர்வு. அதிலும் போர்த்துகீசியர்களை எதிர்த்து மரைக்காயர் படைகள் போரிடும் கடற் போர் காட்சிகள் பிரம்மாண்டமாக அமைந்துள்ளன. படத்திற்காக அமைக்கப்பட்ட அரண்மனை, மரைக்காயர் படைகள் தங்கும் கோட்டை மற்ற இடங்களில் கலை இயக்குனர் சாபு சிரில், ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.
மரைக்காயர் ஆக மோகன்லால். எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதில் தன்னை அப்படியே பொருத்திக் கொள்வதில் சிறந்தவர் மோகன்லால். இந்தப் படத்திலும் மரைக்காயராகவே வாழ்ந்திருக்கிறார். அவருடைய வீரமான பேச்சு, நடை, உடை, பாவனை என மரைக்காயர் இப்படித்தான் இருந்திருப்பாரோ என்று எண்ண வைக்கிறார்.
மோகன்லாலுக்கு மட்டும் படத்தில் முக்கியத்துவம் கொடுக்காமல் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களுக்கும் பெயர் வரும் அளவிற்கு காட்சிகளைக் கொடுத்திருக்கிறார்கள்.
சாமுத்ரி மன்னராக நெடுமுடி வேணு, அவரது அமைச்சராக ஹரிஷ் பெரடி, அமைச்சரின் மகன்களாக படைத் தளபதிகள் அர்ஜுன், அசோக் செல்வன், மோகன்லாலின் நண்பன் பிரபு, மோகன்லாலின் சித்தப்பா சித்திக் ஆகியோரது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அதிகம்.
சிற்றரசர் மகளாக வரும் கீர்த்தி சுரேஷ், மோகன்லாலுடன் இருக்கும் சீன இளைஞன் ஒருவரைக் காதலிப்பதால் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார். ஆனால், இருவரும் சூழ்ச்சியால் மரணமடைகிறார்கள். இதுதான் படத்தின் திருப்புமுனை. இவர்களது காதல் எல்லை கடந்த காதலாக அமைந்து ரசிக்க வைக்கிறது. மோகன்லாலுக்கு ஆதரவு தரும் சிற்றரசராக சுனில் ஷெட்டி குறைவான நேரம் என்றாலும் மனதி
ஒரு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர். குறைவான காட்சிகளில்தான் வருகிறார். இளம் வயது மோகன்லாலாக அவரது மகன் பிரணவ் மோகன்லால். பிரணவ்வின் மனைவியாக கல்யாணி பிரியதர்ஷன். கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.
ராகுல் ராஜ், அன்கித் சூரி, லியெல் எவன்ஸ் ரோடர் ஆகியோர் பின்னணி இசை அமைத்திருக்கிறார்கள். சில காட்சிகளில் மிரட்டலாகவும், சில காட்சிகளில் மிதமாகவும் இருக்கிறது பின்னணி இசை. ரோனி ரபெல் இசையில் படம் பார்க்கும் நேரத்தில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது.
நீளமான கதை, சில கதாபாத்திரங்களின் எதிர்பாராத முடிவுகள், ஒன்றுக்கொன்று அதிக ஒருங்கிணைப்பில்லாத காட்சிகள் படத்தின் மைனஸ் பாயின்ட்.
ஆனாலும், ஒரு வரலாற்றுப் படத்தை அதன் பிரம்மாண்டத்தின் மூலம், உருவாக்கத்தின் மூலம் ரசிக்க வைத்திருக்கிறார்கள். அதனால், தாராளமாகப் பார்க்கலாம்.