இளம் வயதில் ஏற்படும் ஆசைகள், உணர்வுகள், தடுமாற்றங்கள் ஆகியவற்றை மையமாக வைத்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர்  சதீஷ் செல்வகுமார். 

இந்தக் கால இளைஞர்களிடம் எல்லாவற்றிலும் ஒரு அவசரம் இருக்கிறது. தங்களது குடும்பங்களைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் அவர்கள் எடுக்கும் சில அவசர முடிவுகள் அவர்களது குடும்பத்தை எப்படி பாதிக்கிறது என்பதை இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

பெங்களூருவில் படத்தின் கதாநாயகன் ஜிவி பிரகாஷ்குமாரும், கதாநாயகி திவ்யபாரதியும் ஒரே வீட்டில் தங்கி ஐ.டி. வேலைக்குச் செல்பவர்கள். முதலில் அந்த வீட்டில் தங்கியிருந்த ஜிவியின் நண்பரும், அந்த நண்பரின் தோழியும் வெளிநாடு சென்றுவிட நண்பனை வற்புறுத்தி அந்த வீட்டில் தங்குகிறார் ஜிவி. அதிக அறிமுகமில்லாத ஜிவியும், திவ்யபாரதியும் முதலில் பேசாமலும், பழகாமலும்தான் இருக்கிறார்கள். ஆனால், சமய சந்தர்ப்பங்கள் அவர்களை நெருங்கிப் பழக வைத்து திருமணத்திற்கு முன்பே படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு வளர்கிறது. இதனால், கர்ப்பமடைகிறார் திவ்யபாரதி. கருவைக் கலைக்கச் சொல்கிறார் ஜிவி, குழந்தைப் பெறப் போகிறேன் என்கிறார் திவ்யா. ஏட்டிக்குப் போட்டியாய் இருவரும் நிற்க முடிவு என்னவென்பதுதான் கிளைமாக்ஸ்.

முதலில் ஜாலியாக நண்பர்களின் கொண்டாட்டம், குடி, கும்மாளம் என நகரும் படம் இடைவேளைக்குப் பின் அப்படியே தடம் மாறுகிறது. நீதிமன்ற வழக்கு, அலைச்சல், ஜிவி - திவ்யா இருவரின் மனப் போராட்டம் என அப்படியே திரைக்கதை தாவுகிறது. 

உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தில் ஜிவியும், திவ்யாவும் யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக இருவருக்கும் உள்ள நெருக்கமான காட்சிகள் ஏதோ பல வருடம் ஒன்றாக வாழ்ந்த ‘லிவிங் டு கெதர்’ ஜோடி போல இருக்கிறது. இருவருக்குமே ‘மேட்டர்’ பற்றிய நினைப்பு அதிகமாகவே இருக்கிறது. ஆனால், இடைவேளைக்குப் பின் ஜிவி பிரகாஷ் மட்டும்தான் தவறிழைத்தவர் போல காட்டப்படுகிறது. முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தில் திவ்யபாரதி நடித்துப் பெயர் வாங்குகிறார்.

ஜிவி பிரகாஷ் உடன் வேலை பார்க்கும் பகவதி பெருமாள் அடிக்கடி கலகலப்பூட்டுகிறார். இடைவேளைக்குப் பின் என்ட்ரி ஆகும் முனிஷ்காந்தும் அழுத்தமாக நகரும் கதையில் ஆங்காங்கே ரிலாக்ஸ் வர வைக்கிறார். படத்தில் நண்பர்கள் என எப்போதும் ஒரு பத்து பேர் ஜிவியுடன் இருக்கிறார்கள். அவர்களில் அருண்குமாருக்கு மட்டும் கூடுதல் முக்கியத்துவம் தந்திருக்கிறார் இயக்குனர்.

படத்தில் எதிர்பாராத ஒரு கதாபாத்திரம் மிஷ்கின். அவரது கதாபாத்திரம் சீரியசான ஒன்றா, நகைச்சுவையானதா என்பதில் சற்றே குழப்பம். ஆனால், தியேட்டர்களில் சிரிப்பலைகள்தான் அதிகம் கேட்கிறது. 

பட்சிகளாம்…பறவைகளாம்…பாடல் வித்தியாசமான தாளத்துடன் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையமைத்துள்ள சித்து குமாருக்கு நிறையவே வேலை கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதில் சித்துவும் தன் திறமையை நிரூபித்திருக்கிறார்.

படத்தின் நீளம்தான் அதிகம். இரண்டாவது பாதியில் சில காட்சிகளை நீக்கியிருந்தால் இன்னும் விறுவிறுப்பு கிடைத்திருக்கும்.

பேச்சுலர் - பெயரைப் போலவே பேச்சுலர்களுக்கான படம்.