ராக்கி - விமர்சனம்
27 Dec 2021
அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன், ஒரு மாறுபட்ட ‘கேங்ஸ்டர்’ படத்தைக் கொடுத்திருக்கிறார். இப்படி ஒரு ‘ரா’வானா படத்தை தமிழ் சினிமாவில் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது.
அதிக வசனங்கள் இல்லாமல் காட்சியின் ஊடாகவே படத்தின் உணர்வுகளைக் கடத்தியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் படமாக்கியிருக்கும் விதம், அதன் கோணம் பார்க்கப் புதிதாக உள்ளது.
பல வருட சிறைவாசம் முடிந்து விடுதலையாகி வருகிறார் வசந்த் ரவி. நேராக தனது அம்மா, தங்கையைப் பார்க்கச் செல்கிறார். ஆனால், அவர்கள் வீட்டில் இல்லை. அம்மா கொல்லப்பட்டு இறந்த தகவலும், தங்கை காணாமல் போன தகவலும் கிடைக்கிறது. தங்கையைத் தேடிக் கண்டுபிடிக்கிறார். ஆனால், அவரையும் வில்லன் பாரதிராஜா கொன்றுவிடுகிறார். தங்கை மகள் வசந்த் ரவியிடம் கிடைக்க, அம்மாவின் சொந்த ஊரான இலங்கைக்கு போய்விட நினைக்கிறார் வசந்த் ரவி. அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
அறிமுகமான ‘தரமணி’ படத்திலேயே வித்தியாசமான நடிப்பால் கவர்ந்த வசந்த் ரவி, இந்தப் படத்திலும் மீண்டும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்து பெயர் வாங்கிவிட்டார். அவரது எதிரிகளை ஒரே ஒரு சுத்தியல் வைத்து துவம்சம் செய்வதில் மிரள வைக்கிறார்.
வசந்த் ரவியின் முக்கிய எதிரியாக பாரதிராஜா. இருவருக்கும் பல கால பகை. பாரதிராஜாவின் மகனைக் கொன்றதால்தான் வசந்த் ரவி சிறைக்குச் சென்று திரும்பி வந்துள்ளார். வசந்த் ர்வி குடும்பத்தினர் அனைவரையுமே கொல்லத் துடிப்பவர்தான் பாரதிராஜா. இத்தனை வயதிலும் பாரதிராஜாவின் வில்லத்தனம் பதைபதைக்க வைக்கிறது.
தர்புகா சிவாவின் பின்னணி இசை, ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, நாகூரானின் படத்தொகுப்பு, ராமு தங்கராஜின் படத்தொகுப்பு படத்திற்கு சரியான பக்கபலமாக அமைந்துள்ளது.
கொலை செய்யும் காட்சிகளை அத்தனை கொடூரமாகக் காட்டாமல் இருந்திருக்கலாம். நம் மீதே ரத்தம் தெறிக்கும் உணர்வு ஏற்படுகிறது.
ராக்கி - ‘ரா’
Tags: Rocky, Vasanth Ravi, Bharathiraja, Raveena Ravi, Rohini, Arun matheswaran, Darbuka Siva