தமிழ் சினிமாவில் எத்தனையோ போலீஸ் கதைகள் வந்துள்ளது. அனைத்துமே இளம் ஹீரோக்களை அதிரடி போலீஸ் ஹீரோவாக மட்டுமே காட்டியிருக்கும். ஆனால், இந்தப் படத்தில் முதல் முறையாக ஒரு ‘ரைட்டர்’ பற்றிய யதார்த்தமான படமாகக் கொடுத்திருக்கிறார்கள். அறிமுக இயக்குனர் பிராங்க்ளின் ஜேக்கப், இது வரை வந்த போலீஸ் படங்களில்  இந்தப் படத்தை தனி முத்திரை பதிக்கும் படமாகத் தந்திருக்கிறார்.

போலீஸ் சங்கம் கேட்டதற்காக திருவெறும்பூரிலிருந்து, திருவல்லிக்கேணிக்கு மாற்றப்படுகிறார் ரைட்டர் சமுத்திரக்கனி. அந்த காவல்நிலைய இன்ஸ்பெக்டரால், எந்தக் காரணமும் இல்லாமல் கல்லூரி மாணவரான ஹரிகிருஷ்ணன் பிடித்து வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது பொய் வழக்கு ஒன்றையும் போடுகிறார்கள். அது பற்றித் தெரிய வரும் சமுத்திரக்கனி, ஹரிக்கு உதவ நினைக்கிறார். அதனால், ஏற்படும் பிரச்சினைகளை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகராக படத்திற்குப் படம் தன்னுடைய திறமையை வளர்த்து வருகிறார் சமுத்திரக்கனி. இந்தப் படத்தில் ‘ரைட்டர்’ தங்கராஜ் கதாபாத்திரத்தில் தன்னை அப்படியே மாற்றிக் கொண்டிருக்கிறார். எதுவுமே செய்யாமல் போலீஸ் காவலில் சிக்கித் தவிக்கும் பி.எச்டி மாணவராக ஹரிகிருஷ்ணன். தன்னை விடுவிக்குமாறு அவர் கதறும் போதெல்லாம் நமக்கும் என்னவோ போல் ஆகிறது. கொஞ்ச நேரமே வந்தாலும் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார் இனியா.

டி.சி.யாக நடித்திருக்கும் கவின் ஜெய் பாபு, இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கவிதாபாரதி, காவல் துறை மீதான பயத்தை ஏற்படுத்துகிறார்கள். காவல் நிலையத்தில் எடுபிடி வேலைகளைச் செய்யும் ஆண்டனி அடிக்கடி கலகலப்பூட்டுகிறார்.

கோவிந்த் வசந்தா பின்னணி இசை, பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு இயக்குனருக்கு சரியாகக் கை கொடுத்திருக்கிறது.

ஒரு காவல் நிலையத்தையே கதை சுற்றி வருவது விறுவிறுப்பைக் குறைக்கிறது. படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் கொடுத்துள்ள முக்கியத்துவம் காரணமாக முதன்மைக் கதாபாத்திரங்களின் முக்கியத்துவம் சற்றே குறைகிறது.

ரைட்டர் - அழு