குடும்பம், உலக வெப்பமயமாதல், கார்ப்பரேட் அரசியல் என ஒரே படத்தில் சில பல விஷயங்களை சேர்த்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கதிர்வேலு.

கிராமத்திலேயே மிகப் பெரிய குடும்பம் நாயகன் சசிகுமார் குடும்பம். அப்பா, அம்மா, அக்காக்கள், மாமாக்கள், அண்ணன்கள், அண்ணிகள், அவர்களது மகன், மகள்கள் என 44 பேர் கூட்டுக்குடும்பமாக வசிக்கிறார்கள். குடும்பத்தினர் தனக்காகப் பார்த்த பெண்ணைத் தவிர்க்க உடன் வேலை பார்க்கம் நிக்கி கல்ரானியை தனது காதலி என அறிமுகப்படுத்துகிறார். அது கடைசியில் திருமணத்தில் முடிய சில பல சிக்கல்கள். அதன் தீர்வு என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஐ.டி.கம்பெனி, கார்ப்பரேட் மோதல் என சென்னையில் ஆரம்பமாகும் கதை அப்படியே பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்திற்கு ஷிப்ட் ஆகிறது. அங்கேயே மீதிக் கதை தொடர, மீண்டும் கிளைமாக்சில் கார்ப்பரேட் மோதல் எட்டிப் பார்க்கிறது. எதை மையப்படுத்தி திரைக்கதை சொல்ல வேண்டும் என்பதில் இயக்குனர் கொஞ்சம் குழம்பிவிட்டார்.

இந்தப் படத்திலும் சசிகுமாருக்கு கிராமத்து இளைஞர் கதாபாத்திரம்தான். ஆனால், ஐ.டி.கம்பெனியில் வேலை பார்ப்பவர். எம்மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் சசிகுமாரிடம் ஒரே மாதிரியான நடிப்புதான். நிக்கி  கல்ரானி கதாபாத்திரத்தில் மட்டும் ஒரு சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார் இயக்குனர். காதலியாக நடிப்பதில் குறைவைக்கவில்லை நிக்கி. 

படத்தில் நிறைய நடிகர்கள், அனைவருக்கும் காட்சிகளை வைக்க வேண்டும். மற்றவர்களை விட தம்பி ராமையாவுக்கும் யோகி பாபுவுக்கும் கூடுதல் காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர்.

சாம் சிஎஸ் இசையில் பாடலும், பின்னணி இசையும் சுமார் ரகம்தான். கிராமத்துக் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்கிறார்.

சென்டிமென்ட் காட்சிகள் மட்டும் ரசிக்க வைக்கிறது. மையக் கதைக்குத் தேவையற்ற பல காட்சிகள் இடம் பெற்று படத்தின் தடத்தை மாற்றிவிடுகிறது.

ராஜவம்சம் - காவலாளி