ஹாலிவுட்டில் வந்து பெரும் வரவேற்பைப் பெற்ற வித்தியாசமான படங்களில் ‘டைம் லூப்’ வகைப்படங்களும் உண்டு. ஒரு நாளில் அல்லது குறிப்பிட்ட மணி நேரங்கள் திரும்பத் திரும்ப வருவதே ‘டைம் லூப்’ எனப்படும்.

தமிழ் சினிமாவில் வந்துள்ள இரண்டாவது டைம் லூப் படம் ‘மாநாடு’. கடந்த வாரம் வந்த  ‘ஜாங்கோ’  படம்தான் முதல் டைம் லூப் படம். 

இந்த ‘மாநாடு’ படத்தை பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். அவருக்கு உற்ற துணையாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, எடிட்டர் பிரவீண் ஆகியோரும் இருந்துள்ளனர்.

நண்பனின் திருணத்தை நடத்தி வைக்க துபாயிலிருந்து விமானத்தில் வருகிறார் அப்துல் காலிக் (சிலம்பரசன்). நண்பனின் காதலியைக் கடத்தும் போது, வேறு ஒரு விவகாரத்தில் போலீசிடம் சிக்குகிறார் அப்துல். அவரை வைத்து மாநில முதல்வரை சுட வைக்கிறார் போலீஸ் அதிகாரி தனுஷ்கோடி (எஸ்ஜே சூர்யா). தொடர்ந்து அப்துல் காலிக்கும் போலீசாரால் சுடப்பட்டு இறக்கிறார். திடுக்கிட்டு எழுகிறார் விமானத்தில் பயணிக்கும் அப்துல் காலிக். அந்த சம்பவம் ‘டைம் லூப்’ ஆக தொடர்ந்து நடக்க முதல்வரைக் காப்பாற்ற முயற்சிக்கிறார் அப்துல் காலிக். அதில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

அப்துல் காலிக் கதாபாத்திரத்தில் தனது வழக்கமான நடிப்பை விட்டு விலகி புதிய கதை, புதிய கதாபாத்திரம் என உணர்ந்து நடித்து வியக்கவும், ரசிக்கவும் வைக்கிறார் சிம்பு. 

தனுஷ்கோடி என்ற கெட்ட போலீசாக எஸ்ஜே சூர்யா. படத்தில் சிம்பு சொல்வதைப் போலவே நடித்துத் தள்ளுகிறார் சூர்யா. டயலாக் டெலிவரி, நடை, உடை, பாவனை என பல காட்சிகளில் அவருடைய நடிப்பிற்கு கைத்தட்டல் கிடைக்கிறது.

படத்தின் கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷன். ஆனாலும், படத்தில் காதலும் இல்லை, டூயட்டும் இல்லை. நாயகன் சிம்புவுக்கு உதவி செய்வதுதான் அவருடைய வேலை, அதைச் செவ்வனே செய்திருக்கிறார். 

எஸ்ஜே சூர்யாவை ஆட்டிப் படைக்கும் அதிகாரம் பிடித்த அரசியல்வாதியாக ஒய்ஜி மகேந்திரன். அந்தக்கால நகைச்சுவை நடிகரிடம் இப்படி ஒரு வில்லத்தனமா என ஆச்சரியப்பட வைக்கிறார். எஸ்ஏ சந்திரசேகரன் பேசிய வசனங்களையே திரும்பத் திரும்ப டைம் லூப்பில் பேசுகிறார். 

சிம்புவின் நண்பர்களாக கருணகாரன், பிரேம்ஜி, வழக்கமான நண்பர்கள் என்ன செய்வார்களோ அதைச் செய்கிறார்கள்.

யுவனின் பின்னணி இசைதான் படத்தின் டாப் கிளாஸ் அம்சம். சிம்புக்குத் தனி, எஸ்ஜே சூர்யாக்குத் தனி, மிரட்டலான காட்சிகளுக்குத் தனி என விதவிதமான பின்னணி இசையில் மிரட்டுகிறார்.

மாநாட்டுக் காட்சிகள், பரபர ஆக்ஷன் காட்சிகளில் ரிச்சர்ட் எம் நாதன் கடுமையாக உழைத்திருக்கிறார். எந்தக் குழப்பமும் இல்லாமல், அவ்வளவு தெளிவாக படத்தை எப்படி தொகுத்தார் எடிட்டர் பிரவீன் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். 

டைம் லூப்பில் வந்த காட்சிகளே திரும்பத் திரும்ப வருவது சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்துகிறது. கற்பனை மிஞ்சிய காட்சிகள் என்பதால் லாஜிக்கைப் பற்றியும் பெரிதாகக் கவலைப்படவில்லை.

ஆரம்பம் முதல் இறுதி வரை அடுத்து என்ன அடுத்த என்ன என திரைக்கதை விறுவிறுப்பாக நகர்வதால் வேறு எதுவும் நமக்குத் தெரியவில்லை.

மாநாடு - நாடே ரசிக்கும்...