நகைச்சுவைப் படங்களாக, நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சந்தானம் இந்த ‘சபாபதி’ படத்தில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படமும் முழு நகைச்சுவைப் படமாக இல்லாமல் அப்பா, மகன் சென்டிமென்ட் படமாக அமைந்து ஆச்சரியப்பட வைக்கிறது.

சந்தானம் திக்கித் திக்கிப் பேசுபவர். அதனால் அவருக்கு சிறு வயதிலிருந்தே ஒரு ‘காம்ப்ளக்ஸ்’ உண்டு. ஓய்வு பெற்ற ஆசிரியரான அப்பா எம்எஸ் பாஸ்கர், சந்தானத்தை ஏதாவது வேலைக்குச் செல்ல வற்புறுத்துகிறார். நேர்முகத் தேர்வுகளில் சந்தானம் அவமானப்படுகிறார். இந்நிலையில் அவரிடம் 20 கோடி ரூபாய் பணத்துடன் ஒரு சூட்கேஸ் கிடைக்கிறது. அதை வைத்து அவர் என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நிறைய சென்டிமென்ட், கொஞ்சம் காதல், கொஞ்சம் நகைச்சுவை என படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் சீனிவாச ராவ்.

சந்தானம் திக்கிப் பேசும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது. இதற்கு முன்பு இவ்வளவு சீரியசான கதாபாத்திரத்தில் அவர் நடித்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சென்டிமென்ட் நடிப்பில் கண் கலங்க வைக்கிறார். அதே சமயம் அவருக்கே உரிய நக்கல், கிண்டல் ஆகியவையும் படத்தில் உண்டு. 

கதாநாயகி ப்ரீத்தி வர்மாவுக்கு அதிக வேலையில்லை. சில காட்சிகளில் வந்து சந்தானம் மீது இருக்கும் காதலை ‘சைட்’ அடித்து தெரியப்படுத்துகிறார். இரண்டொரு காட்சிகளில் மட்டுமே வருகிறார் புகழ். 

சந்தானத்திற்கு ஈடாக படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் எம்எஸ் பாஸ்கர். நடிப்பில் அவருடைய அனுபவம் பேசுகிறது. சந்தானத்திற்கும் இவருக்கும் இடையிலான காட்சிகளில் இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.

வில்லன்களாக சாயாஜி ஷின்டே, வம்சி. அரசியல்வாதிகளாக ஏற்கெனவே அவர்கள் நடித்து பழக்கப்பட்ட கதாபாத்திரங்கள்தான். 

சாம் சிஎஸ் இசையில் கொலு பாடல் ரசிக்க வைக்கிறது. 

உடலில் குறை உள்ளவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை சென்டிமென்ட்டாக கொடுத்து ரசிக்க வைக்கிறார் இயக்குனர். சந்தானம் படம் என்பதால் முழு காமெடி படத்தை எதிர்பார்க்காமல் வருபவர்களுக்கு படம் பிடிக்கும்.