திருமணம் - விமர்சனம்

02 Mar 2019
தமிழ் சினிமாவில் குடும்பத்துடன் மக்கள் வந்து பார்க்கக் கூடிய படங்களைக் கொடுக்கும் இயக்குனர்கள் ஒரு சிலரே இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் சேரன். அவருடைய பல படங்கள் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய படங்களாகவும் அமைந்த படங்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு அழுத்தமான குடும்பக் கதையுடன் இந்தத் ‘திருமணம்’ படம் மூலம் களம் இறங்கியிருக்கிறார். தங்கை காவ்யாயின் காதலுக்கு குறுக்கே நிற்காமல் சம்மதம் சொல்கிறார் அண்ணன் சேரன். காவ்யாவைக் காதலிக்கும் தம்பி உமாபதியின் காதலுக்கு சம்மதம் சொல்கிறார் அக்கா சுகன்யா. காவ்யாவின் குடும்பம் நடுத்தரக் குடும்பம். உமாபதியின் குடும்பன் ஜமீன் குடும்பம். இவர்களது திருமணத்தை நடத்தி வைக்க சேரன், சுகன்யா இடையில் பேச்சு வார்த்தை ஆரம்பமாகிறது. முதலில் சரியாகச் செல்வது, பின்னர் பிரச்சினையில் போய் முடிய, உமாபதி, காவ்யா திருமணம் தடைபடுகிறது. அதன் பின் அவர்களது திருமணம் நடந்ததா இல்லையா என்பதுதான் திருமணச் செலவுகள் பற்றிய பல உண்மைகளை நமக்கு உணர்த்தும் கதை. இயக்குனராக சேரன் எப்போதுமே சரியான கருத்துக்களைச் சொல்வார். அது இந்தத் திருமணம் படத்திலும் தொடர்கிறது. அருமையான கதாபாத்திரங்கள், கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்கள், அழுத்தமான வசனங்கள் என இயக்குனர் சேரனின் இந்தத் திருமணத்தைப் பாராட்ட பல விஷயங்கள் உள்ளன. இந்தக் காலத்தில் துளி கூட கிளாமர் காட்டாத நடிகைகள், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத ஒரு படம், காமெடி என்ற பெயரில் கிண்டல் செய்வது ஆகியவை இல்லாமலும் ஒரு படத்தைக் கொடுக்க முடியும் என நிரூபித்திருக்கிறார். ஒரு அண்ணன் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அந்தக் கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியிருக்கிறார் சேரன். அப்பா இல்லாத ஒரு குடும்பத்தைத் தாங்கிச் சுமக்கும் பொறுப்பில் அண்ணனாக அவ்வளவு அம்சமாய் நடித்திருக்கிறார். பாசம் காட்ட வேண்டிய இடத்தில் பாசம், கோபம் காட்ட வேண்டிய இடத்தில் கோபம். பரிவு காட்ட வேண்டிய இடத்தில் பரிவு. தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ அண்ணன், தங்கை பாசக் கதைகளைப் பார்த்திருக்கிறோம். அதில் இந்தத் திருமணமும் பெயர் சொல்லும் படமாக இருக்கும். பணக்காரத் தோரணை, தம்பி மீது அதீத பாசம், இப்படித்தான் வாழ வேண்டும் என்ற எண்ணம், தமிழ் சினிமாவில் கம்பீரமான கதாபாத்திரங்களில் நடிக்க சுகன்யாவை யாரும் இதுவரை சரியாகப் பயன்படுத்தவில்லை என்று இந்தப் படத்தைப் பார்த்த பிறகு நினைக்கத் தோன்றும். அவருடைய பார்வை, உடல் மொழி, வசன உச்சரிப்பு அனைத்திலும் அவ்வளவு தெளிவு. இந்தப் படத்திற்குப் பின் சுகன்யாவை தமிழ் சினிமா மேலும் பயன்படுத்திக் கொள்ளும். சினிமாத்தனமில்லாத யதார்த்தமான தோற்றத்தில் உமாபதி, காவ்யா சுரேஷ். இந்தக் கதாபாத்திரங்களுக்கு முன்னணி நட்சத்திரங்களை நடிக்க வைத்தால் கூட பொருத்தமாக இருந்திருக்காது. இவர்கள் இருவருமே அவரவர் கதாபாத்திரங்களில் காதலுக்கான எல்லை தாண்டாமல் அவ்வளவு கண்ணியமாக நடித்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் தற்போதைய சிறந்த குணச்சித்திர நடிகர்களில் தம்பி ராமையா, எம்எஸ் பாஸ்கர் இருவரும் முக்கியமானவர்கள். தங்கள் குடும்பங்களைப் பற்றி இருவரும் சொல்லும் அந்தக் காட்சியில் யாரும் கண் கலங்காமல் இருக்க முடியாது. நகைச்சுவைக்கு பால சரவணன். சேரனுக்கு ஆலோசனை சொல்ல மேலதிகாரி ஜெயப்பிரகாஷ். சேரனின் அம்மாவாக சீமா நாயர். அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவு. சேரனின் படங்கள் என்றாலே ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலாவது காலத்திற்கும் கேட்கும்படியான பாடலாக இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் அது இல்லை. சித்தார்த் விபின் ஏமாற்றிவிட்டார். பின்னணி இசையில் சபேஷ் முரளி காட்சிகளின் உணர்வை தங்கள் பின்னணி இசையால் மேலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். ராஜேஷ் யாதவ்வின் ஒளிப்பதிவு கதைக்கு என்ன தேவையோ, உணர்வுகளை எப்படி ரசிகர்களுக்கு உணர வைக்க வேண்டுமோ அவற்றோடு காட்சிப்படுத்தியிருக்கிறது. நம் குடும்பத்தில் நாம் என்னதான் பார்த்துப் பார்த்து ஒரு திருமணத்தை நடத்தி வைத்தாலும், நாம் சரியாகச் செய்து விட்டோமே என்ற பொறாமையில் சிலர் வேண்டுமென்றே சில குற்றங்களைச் சொல்வார்கள். அது அனைவரது வீட்டிலும் நடக்கும். குறையில்லாமல் ஒரு திருமணத்தை நடத்த முடியாது. இந்தத் திருமணத்திலும் சில குறைகள் இருக்கின்றன. ஆனால், அவற்றைவிட அதிகமான நிறைகள் உள்ளன. திருமணச் செலவுகள் ஒவ்வொரு குடும்பத்தையும் எப்படி பாதிக்கிறது, அதை எப்படி தவிர்க்கலாம் என்ற சிறந்த ஆலோசனையை வெறும் 100 ரூபாய் செலவில் இந்தப் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதற்காக இயக்குனர் சேரனுக்கு இந்தப் படத்தைப் பார்ப்பதன் மூலம் நாம் ‘மொய்’ வைத்து வாழ்த்தலாம். திருமணம் - நறுமணம்

Share via: