எல்கேஜி - விமர்சனம்
24 Feb 2019
அரசியல் படம் என்றால் அதில் மக்களுக்கு பல விஷயங்களைப் புரிய வைக்கும் விதத்தில் கருத்துள்ள படமாக எடுக்க வேண்டும். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் நல்ல வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று கிளைமாக்சில் சொல்வது மட்டும்தான் கருத்து.
மற்றபடி படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை வெறும் கிண்டல், கேலி ஆகியவற்றுடன் மட்டுமே படம் நகர்கிறது.
துண்டு துண்டாக காட்சிகளை வைத்துள்ளதால் இது என்ன மாதிரியான படம் என புரிந்து கொள்வதற்கே குழப்பமாக இருக்கிறது. திடீரென நகைச்சுவையாக நகர்கிறது, திடீரென சீரியசாக நகர்கிறது, திடீரென காதலை நோக்கி நகர்கிறது. இலக்கில்லாமல் பயணிக்கும் திரைக்கதைதான் படத்தின் பலவீனம். அதை முடிந்தவரையில் சில சமகால அரசியல் கிண்டல் வசனங்களை வைத்து சமாளித்துள்ளார்கள்.
லால்குடியில் ஆளும் கட்சியின் வார்டு கவுன்சிலராக இருப்பவர் பாலாஜி. அவருக்கு அப்பா நாஞ்சில் சம்பத்தைப் போல பிழைக்கத் தெரியாத அரசியல்வாதியாக இருக்கக் கூடாது என்பது கொள்கை. அப்பாவை அதிகம் வெறுப்பவர். அவர் வசிக்கும் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் முதல்வர் இறந்து போவதால் அங்கு இடைத் தேர்தல் வருகிறது. ஒரு அரசியல் ஸ்டன்ட் செய்து அங்கு எம்எல்ஏ சீட் வாங்கி விடுகிறார் பாலாஜி. ஆனால், அங்கு சீட் கிடைக்காததால் அதே கட்சியைச் சேர்ந்த ஜேகே ரித்தீஷ், பாலாஜியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றே தீருவேன் என கட்சித் தலைவரிடம் சவால் விடுகிறார். அதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் கிளைமாக்ஸ்.
மூச்சு விடாமல் பேசுவதும் நகைச்சுவை என நினைத்துக் கொண்டிருக்கிறார் பாலாஜி. படத்தின் திரைக்கதை போலவே காட்சிக்குக் காட்சி அவருடைய கதாபாத்திரம் மாறிக் கொண்டே இருக்கிறது. திடீரென நகைச்சுவை நடிகராகிறார். திடீரென சீரியசான நாயகனாகிறார். சமீப காலங்களில் நடந்த தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகளை அநியாயத்திற்குக் கிண்டலடிக்கிறார். ஒரு படம் இப்படி செய்துவிடலாம். ஆனால், தொடர்ந்து நாயகனாக நடிக்க வேண்டும் என்றால் வெவ்வேறு விதமாக யோசிக்க வேண்டும்.
வழக்கமான கதாநாயகி கதாபாத்திரம் பிரியா ஆனந்திற்கு இல்லை என்பது மிகப் பெரும் ஆறுதல். பணம் கொடுத்தால் யாருக்கு வேண்டுமானாலும் வேலை செய்வோம் என்ற கார்ப்பரேட் கம்பெனியின் நிர்வாகி. அரசியல்வாதிகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் எதைச் செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்று ஆலோசனை சொல்லும் கம்பெனியில்தான் அவர் வேலை பார்க்கிறார். பாலாஜியும் இவரும் காதலித்து விடுவார்களோ என எதிர்பார்த்தால் காதலை விட அரசியல்தான் முக்கியம் என்று சொல்லிவிடுகிறார்கள். அதனால், படத்தில் டூயட்டுகளுக்கும் வேலை இல்லை.
கதை, திரைக்கதை, வசனத்தை பாலாஜியே எழுதியிருப்பதால், அவருடைய கதாபாத்திர இமேஜை காப்பாற்றிக் கொள்வதில் கவனமாக இருந்திருக்கிறார். ஆனால், மற்ற கதாபாத்திரங்களில் பிரியா ஆனந்த் கதாபாத்திரத்தைத் தவிர அனைத்து கதாபாத்திரங்களையும் கொஞ்சம் கேவலமான எண்ணம் கொண்டவர்களாகவே சித்தரித்திருக்கிறார். அவர்களுக்கெல்லாம் கதாபாத்திரங்களாக சரியான இமேஜ் கிடைத்துவிடக் கூடாது என்பதைப் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு அரசியலில் மேடைப் பேச்சில் வல்லவரான நாஞ்சில் சம்பத் கதாபாத்திரத்தை இப்படி மோமசமாக உருவாக்கியிருக்கக் கூடாது. அவர் பேசுவது, அடிக்கடி திருக்குறள் சொல்வது ஆகியவற்றைக் கிண்டலடித்திருக்கிறார்கள். ஜேகே ரித்தீஷ் கதாபாத்திரப் பெயரை ராமராஜ் பாண்டியன் என வைத்து முதல் காட்சியிலேயே அவருடைய இமேஜைக் காலி செய்து ஜோக்கர் ஆக்கியிருக்கிறார்கள். முதல்வர் ராம்குமார் கதாபாத்திரம் கூட சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.
லியோன் ஜேம்ஸ் இசையில் பழைய பாடலான ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்’ பாடல் மட்டும் கணீரென்று ஒலிக்கிறது.
‘அமைதிப்படை’ போன்ற அரசியல் படங்களை இன்று வரை கொண்டாடும் நமக்கு ‘எல்கேஜி’ படத்தையெல்லாம் அரசியல் படம் என்றே சொல்ல வராது. இது ஒரு ஸ்பூப் காமெடிப் படம் அவ்வளவுதான்.
எல்கேஜி - கத்துக்குட்டி
Tags: lkg