திறந்திடு சீசே - விமர்சனம்

24 May 2015
குடிப்பழக்கத்தின் தீமையைப் பற்றி பிரச்சார நெடி இல்லாமல் திகில் படமாக வந்திருக்கும் படம்தான் ‘திறந்திடு சீசே’. நிமேஷ் வர்ஷன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் மூன்றே மூன்று கதாபாத்திரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படம். அதிலும் படம் முழுவதும் ஒரு ‘பப்’புக்குள்ளேயே நகர்கிறது. அது வித்தியாசமாக இருந்தாலும் ஒரே இடத்தில் நகர்வது கொஞ்சம் போரடிக்கவும் வைக்கிறது. வார இறுதி நாளில் தன்ஷிகா ஒரு ‘பப்’புக்கு குடிக்க வருகிறார். அவருடைய அழகில் அந்த பப்பில் வேலை பார்க்கும் (?)  வீரவன் ஸ்டாலின், நாராயண் இருவரும் மயங்கிப் போகிறார்கள். தன்ஷிகாவை எப்படியாவது அடைய வேண்டும் எனத் துடிக்கிறார்கள். பப்பை மூடிய பிறகு பாத்ருமிற்குச் சென்று பார்த்தால் தன்ஷிகா அங்கு மயங்கி விழுந்து கிடக்கிறார். மயக்கம் தெளிந்ததும், தன்னை வீரவன் ஸ்டாலின், நாராயண் ஆகிய இருவரில் ஒருவர் கற்பழித்ததாகக் குற்றம் சாட்டுகிறார். ஆனால், வீரவன் ஸ்டாலின், நாராயண் இருவரும் அதை மறுக்கிறார்கள். அந்த சூழ்நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. யாரும் அவ்வளவு சுலபத்தில் ஏற்று நடிக்கத் தயங்கும் ஒரு கதாபாத்திரத்தில் தன்ஷிகா தைரியமாக நடித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரே இடம், ஒரே உடை என படம் முழுவதும் இருந்தாலும் தன்ஷிகா தனியாகத் தெரிகிறார். குடிப்பது போல் நடிப்பதற்கு தனி தைரியம் வேண்டும். அதுவும் படம் முழுவதிலும் அப்படி நடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. இருந்தாலும் அதையும் நிறைவாகச் செய்திருக்கிறார் தன்ஷிகா. ஒரு பார் அட்டென்டர் ஆக படத்தின் நாயகன் வீரவன் ஸ்டாலின். குடிக்கு அடிமையான ஒரு கதாபாத்திரம். எப்போதும் இவருக்கு குடித்துக் கொண்டேயிருக்க வேண்டும்,  இல்லையென்றால் எதுவுமே நிதானமாக இருக்காது. மனதளவில் குடிக்கு அடிமையானவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை தன்னுடைய நடிப்பில் யதார்த்தமாய் வெளிப்படுத்தியிருக்கிறார் வீரவன். கொஞ்சம் வில்லத்தனமான கதாநாயகன், அவருடைய தோற்றமும் நடிப்பும் அந்த கதாபாத்தரத்திற்கு மேலும் மெருகூட்டியிருக்கிறது. மற்றொரு பார் அட்டன்டராக நாராயண். படம் முழுவதும் இவரும் வருகிறார் என்றாலும் இவர் கதாபாத்திரத்தில் கொஞ்சம் காமெடியைக் கலந்திருக்கிறார்கள். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் கவனத்தை ஈர்த்தவர், இந்தப் படத்தில் தனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார். வீரவன் காதல் மனைவியாக அஞ்சனா கீர்த்தி சில காட்சிகளே வந்தாலும்  காதலின் ஆழத்தை வெளிப்படுத்துகிறார். மற்றும் உஜ்ஜயினி, ஈ.ராமதாஸ் ஆகியோரும் சில காட்சிகளில் நடித்திருக்கிறார்கள்.  

Tags: thiranthidu seese

Share via: