கமர கட்டு - விமர்சனம்
24 May 2015
தமிழ் சினிமாவில் தற்போது பேய்ப் படங்களின் சீசன் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு படத்திலும் பேயை எப்படியெல்லாம் வித்தியாசமாகக் காட்டுவது என இயக்குனர்கள் பல விதங்களில் யோசித்து படங்களைக் கொடுத்து வருகிறார்கள்.
இப்படத்தின் இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன், இரண்டு ஹீரோக்களையும் பேயாகக் காட்டி, பெண்களால் காதலில் ஏமாந்தவர்களைப் பற்றிய கதையாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.
யுவன், ஸ்ரீராம், ரக்ஷா ராஜ், மனிஷாஜித் நான்கு பேருமே பள்ளியில் ஒன்றாகப் படிப்பவர்கள். யுவன் – ரக்ஷா ராஜ் ஒரு காதல் ஜோடிள், ஸ்ரீராம் - மனிஷா ஜித் மற்றொரு காதல் ஜோடி. ரக்ஷா ராஜ், மனிஷா ஜித் இருவரும் அக்கா, தங்கைகள். இருவருமே படிப்பில் பின் தங்கிய மாணவிகள். தங்களது காதலர்களை விட அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டுமென ஆசைப்படுகிறார்கள். காதலிகளின் ஆசையை நிறைவேற்ற யுவனும், ஸ்ரீராமும் சில பரீட்சைகளை எழுதாமலே விட்டுவிடுகிறார்கள்.
ரக்ஷாவும், மனிஷாவும் பாஸ் செய்து எஞ்சினியரிங்க கல்லூரியில் சேர்ந்து விடுகிறார்கள். அங்கு அவர்களுக்குப் பணக்காரப் பையன்களாக சித்து, வம்சி ஆகியோருடன் பழக்கம் ஏற்படுகிறது. போகப் போக அவர்களைக் காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். தன் மகள்களுக்கு நல்ல பணக்கார வாழ்க்கை கிடைக்க வேண்டுமென்ற ஆசையில் அடியாட்களை வைத்து யுவனையும், ஸ்ரீராமையும் கொலை செய்துவிடுகிறார் ரக்ஷா, மனிஷாவின் அம்மா சிந்து. இறந்த பின் யுவனும், ஸ்ரீராமும் ஆவிகளாக அவர்களது காதலிகளின் உடலுக்குள் புகுந்து காதலிகளின் பணக்ரக் காதலை நிறைவேற விடாமல் தடுக்கிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
தங்கள் குடும்பமே தங்களை நம்பியிருந்தாலும் காதலிக்காக படிப்பையே தியாகம் செய்யும் பரந்த மனம் கொண்டவர்களாக யுவன், ஸ்ரீராம். கல்லூரிக்குச் சென்றதும் காதலிகள் அவர்களை கண்டு கொள்ளாமல் போக, அந்த ஏமாற்றத்தை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இறந்து பேயாக வந்த பின் அவர்களிடம் பழி வாங்கும் குணம்தான் அதிகமிருக்கிறது. இள வயதுக் காதல் எந்த அளவிற்கு ஏமாற்றத்துக்குரியது என்பதை இவர்களது கதாபாத்திரம் மூலம் உணர்த்தியிருக்கிறார் இயக்குனர்.
ரக்ஷா ராஜ், மனிஷா ஜித் இந்தக் காலத்து சில இளம் பெண்களின் குணத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இன்று காதலிக்கும் பல பெண்கள், தங்களுக்கு நல்ல பணக்கார, வசதியான வாழ்க்கை அமைவதைத்தான் விரும்புகிறார்கள். பணத்திற்கு முன் மற்றதெல்லாம் தூசு என்பதை இவர்களது கதாபாத்திரம் தெளிவாக புரிய வைக்கிறது. ஒரு நாள் பழக்கத்திலேயே பழைய காதலர்களை வெறுத்துப் போக வைப்பது ஆச்சரியமாக உள்ளது. அக்கா, தங்கை இருவருமே ஒரே குணத்தில் இருப்பது அபூர்வமான ஒன்று.
வாசு விக்ரம், பாலாசிங், சேத்தன், சிந்து, கிரேன் மனோகர், தளபதி தினேஷ் படத்தின் மற்ற நட்சத்திரங்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நகைச்சுவை கலந்து உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.
‘எருமாட்டுப் பயலே...’ பாடலில் மட்டும் இசையமைப்பாளர் ஃபைசல் தெரிகிறார்.
Tags: kamara kattu