மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்

30 May 2015
தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமாகப் போய்க் கொண்டிருக்கும் ‘பேய் சீசன்’ வரிசையில் மீண்டும் ஒரு பேய்ப் படமா என்று யோசிக்க முடியாத ஒரு சுவாரசியமான பேய்ப் படம். கலகலப்பாக படத்தை நகர்த்துவதுதான் வெங்கட் பிரபுவின் ஸ்டைல். அதை தன் முதல் படத்திலிருந்தே அவர் செய்து வருகிறார். அடுத்தடுத்து சம்பவங்களாக பரபரப்பாகப் படம் போய்க் கொண்டேயிருக்கும். அப்படித்தான் இந்தப் படத்திலும் அவர் அடித்த பந்து எந்தத் தடையும் இல்லாமல் எல்லைக் கோட்டைத் தொட்டிருக்கிறது. அனாதையான சூர்யா, நண்பன் பிரேம்ஜியுடன் சேர்ந்து சின்னச் சின்னத் திருட்டுக்களைச் செய்து வருகிறார். அடுத்ததாக ஒரு பெரிய திருட்டைச் செய்கிறார்கள். ஆனால், மாட்டிக் கொள்கிறார்கள். தங்களைத் துரத்தி வந்தவர்களிடமிருந்து தப்பிக்கும் போது விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். அதனால் சூர்யாவிற்குப் பேய்களைப் பார்க்கும் சக்தி கிடைக்கிறது. தங்களுக்கு உதவி செய்யுமாறு அவரைத் தேடிச் சில பேய்கள் வருகின்றன.  அப்போதுதான் தன்னுடன் இருக்கும் நண்பன் பிரேம்ஜியும் பேயாகத்தான் இருக்கிறான் என்பது தெரிகிறது. ஒரு கட்டத்தில் சூர்யாவைப் போன்றே ஒரு பேய் வந்து அவரிடம் உதவி கேட்கிறது. அந்தப் பேய் யார், அதற்கும் சூர்யாவுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் படத்தின் மீதிக் கதை. வழக்கம் போல ஒரு துடிப்பான இளைஞனாக சூர்யா. ஜாலியாக வலம் வருகிறார், திருடுகிறார், காதலிக்கிறார் என நமக்கும் எனர்ஜியை ஏற்றுகிறார். படத்தின் ஆரம்பக் காட்சிகளில் பேசும் போது ‘அயன்’ சூர்யாவை அப்படியே ஞாபகப்படுத்துகிறார். போகப் போகத்தான் நமக்கு ‘மாசு’வாக மாறுகிறார். விபத்தால் பேய்களைப் பார்க்கும் சக்தி கிடைத்த பிறகு அவர்களை வைத்து பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார். இடையில் நயன்தாராவைக் கொஞ்சமாகக் காதலிக்கிறார். இப்படி ஜாலி நாயகனாக வலம் வருபவர் இடைவேளைக்குப் பிறகுதான் ஆக்ஷன் அவதாரம் எடுக்கிறார். மொத்தத்தில் அனைவருக்கும் பிடிக்கும் நாயகனாக படத்தை முழுவதுமாக தன் தோளில் தாங்கிப் பிடித்திருக்கிறார் சூர்யா. அப்பா கதாபாத்திரம் என்றாலும் எப்போதோ இளமையாக இருக்கும் போதே இறந்தவர் என்பதால் பேய் கதாபாத்திரத்திலும் இளமையாகவே வருகிறார் மற்றுமொரு சூர்யா. இவருக்கான பிளாஷ்பேக் கண்ணீர் விட வைத்துவிடும். மாசு லோக்கல் என்றால் இந்த சக்தி மிகவும் ஸ்டைலாக இருக்கிறார். படத்தின் நாயகியாக நயன்தாரா. மிகவும் ஸ்லிம்மாகி இருக்கிறார். ஆனால், சூர்யாவுக்கும், நயன்தாராவுக்கும் காதல் காட்சிகள் குறைவு, மருந்துக்குக் கூட ஒரு டூயட் இல்லை. நயன்தாராவின் தீவிர ரசிகர்கள் வெங்கட் பிரபுவை சபிக்கப் போவது உறுதி. எவ்வளவோ பண்ணிட்டீங்க, ஒரு டூயட்டையாவது வச்சிருக்கலாமே… பிளாஷ்பேக்கில் சக்தி சூர்யாவுக்கு ஜோடியாக பிரணீதா, வெளிநாட்டில் ஒரே ஒரு டூயட் பாடும் வாய்ப்பு இவருக்கு. சில காட்சிகளே என்றாலும் பளிச்சென வந்து போகிறார். இவர்களுக்கு அடுத்து அதிகம் ஈர்ப்பவர் பார்த்திபன். அஸிஸ்டென்ட் கமிஷனராக அவருடைய வழக்கமான நக்கல் வசனங்களுடன் நம்மைக் கைதட்ட வைக்கிறார். கிடைக்கிற கேப்பில் கிடா வெட்டி விடுகிறார். வழக்கம் போல அண்ணன் வெங்கட் பிரபு படத்தில் நாயகனின் நண்பனாக படம் முழுவதுமே வருகிறார் பிரேம்ஜி. சூர்யாவிடம் உதவி கேட்டு வரும் பேய்களாக கருணாஸ், ஸ்ரீமன், சஞ்சய் பாரதி, ரித்திகா, ஷண்முக சுந்தரம், ஞானவேல் என சில தெரிந்த முகங்கள். வில்லன்களாக சமுத்திரக்கனி, சரத் லோகித்சவா, வழக்கமான தமிழ் சினிமா வில்லன்கள்தான். மற்றும் ரியாஸ்கான், சுப்பு பஞ்சு, வித்யுலேகா, ஜெயப்பிரகாஷ் என ஏராளமான நட்சத்திரங்கள். அனாதை, இலங்கைத் தமிழர், ஹவாலா, பேய், காதல், வேலைக்குப் பணம் என ஒரே படத்தில் பல விஷயங்களைத் திணித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஏதாவது ஒரே ஒரு மையக் கருவை வைத்து திரைக்கதையை நகர்த்தியிருந்தால் இன்னும் சுவாரசியம் கிடைத்திருக்கும். படம் முடிந்து வெளியில் வந்து யாராவது கதை என்ன என்று கேட்டால் சொல்லி முடிப்பதற்குள் மூச்சு வாங்கி விடும். வெங்கட் பிரபுவே முதல் முறையாக இந்தப் படத்தில் கதை எழுதியிருக்கிறேன் என்று சொல்லியிருப்பது உண்மையே. நிஜமாகவே பல கதைகளைச் சேர்த்திருக்கிறார். யுவனின் இசையில் பின்னணி இசை ரசிக்க வைத்திருக்கிறது.  தெறிக்குது மாஸ்..பாடலில் யுவன் டச் அதிகம். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக அமைந்துள்ளது. எடிட்டர் பிரவீன் ஒரு காட்சி முடிவதற்குள்ளாகவே பட் பட் என்று கத்திரித்துள்ளார்.  

Tags: masu engira masilamani

Share via: