டிமான்ட்டி காலனி - விமர்சனம்
23 May 2015
பேய்ப் படங்களின் வரிசையில் இந்த ‘டிமான்ட்டி காலனி’ நிச்சயம் ஒரு வித்தியாசமான பேய்ப் படம்தான்.
அறிமுக இயக்குனர் அஜய் ஞானமுத்து படத்தின் பெயருக்கேற்ப டிமான்ட்டி காலனியைச் சுற்றியே கதையை நகர்த்துவார் என்று எதிர்பார்த்தால் நாம் எதிர்பார்க்காத விதத்தில் ஒரு ஹவுசிங் போர்டு வீட்டுக்குள் கதையை நகர்த்தி பயமுறுத்தியிருக்கிறார்.
இந்தக் காலத்தில் ஹீரோயின் இல்லாத ஒரு படத்தை எடுக்கவே பெரும் துணிச்சல் வேண்டும். ஆனால், அதைப் பற்றிய சிறிது எண்ணம் கூட வராமல் படம் பரபரவென நகர்ந்து கொண்டேயிருக்கிறது.
அடிக்கடி பேய் வந்து பயமுறுத்தும் வழக்கமான திரைக்கதையாக இல்லாமல் என்ன நடக்கப் போகிறது என்பதை நான் சிறிதும் எதிர்பார்க்காதபடி திரைக்கதை அமைத்திருப்பதே இந்தப் படத்தை முற்றிலும் வித்தியாசமாகக் காட்டுகிறது. அதிலும் கிளைமாக்ஸ் காட்சி கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒன்று.
அருள்நிதி, ரமேஷ் திலக், சனத், அபிஷேக் ஆகியோர் நண்பர்கள். ஹவுசிங் போர்டு வீடு ஒன்றில் ஒன்றாக குடியிருக்கிறார்கள். இவர்களில் அபிஷேக் திரைப்பட இயக்குனராகும் முயற்சியில் இருக்கிறார். டிமான்டி காலனி பற்றிய மர்மங்களைப் பற்றித் தெரிந்து கொண்டு அதையே படமாக்க ஆசைப்படுகிறார். ஒரு நாள் இரவில் நண்பர்களுடன் டிமான்டி காலனியில் இருக்கும் ஒரு பேய் வீட்டிற்குள் செல்கிறார். அங்கிருந்து திரும்பும் போது அந்த வீட்டிலிருந்து ஒரு செயினை எடுத்துக் கொண்டு வந்து விடுகிறார்.
நால்வரும் வீடு திரும்பியபின் மறுநாள் காலையில் ஒரு ஜோசியரைப் பார்க்கச் செல்கிறார்கள். பார்த்து விட்டு வீடு வந்த பின் அன்று இரவு அவர்கள் வீட்டிற்குள் சில வித்தியாசமான சம்பவங்கள் நடக்கிறது. அப்போதுதான் ஜோசியர் எம்.எஸ்.பாஸ்கர் நான்கு பேரில் சனத் நேற்று இரவு இறந்துவிட்டார் என்று சொன்ன தொலைபேசித் தகவலைக் கேட்கிறார்கள். கூட இருக்கும் நண்பன் இறந்து போனது கூடத் தெரியாமல் அவன் உயிரோடு இருப்பது போலவே அவர்களுக்குத் தோன்றுகிறது. அந்த செயினை எடுத்து வந்த யாரும் உயிரோடு இருந்ததில்லை என்ற உண்மை அப்புறம்தான் அவர்களுக்குத் தெரிகிறது. அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் பரபரப்பான திகிலான மீதிக் கதை.
பொதுவாக பேய்ப் படம் என்றால் தங்களைக் கொன்றவர்களை பேய் பழி வாங்குவதாகத்தான் கதை இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் தனக்குச் சொந்தமான ஒரு செயினை எடுத்து வந்து விட்டார்கள் என்பதற்காக பேய் அவர்களைக் கொல்ல முயற்சிப்பதுதான் படத்தின் கதையாக அமைந்துள்ளது.
படத்துக்குப் படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் அருள்நிதி இந்தப் படத்திலும் யாரும் தைரியமாக நடிக்கத் துடிக்காத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் அவரை அறிமுகப்படுத்தும் காட்சியே அவருடைய இமேஜுக்கு டேமேஜ் செய்யும் காட்சிதான். இருந்தாலும் படத்திற்காக கதாபாத்திரத்திற்காக எதையும் செய்யத் துடிக்கும் நடிகராகவே தெரிகிறார். வளர்ந்து வரும் போதே இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு துணிச்சல் வேண்டும். அது அருள்நிதியிடம் நிறையவே இருக்கிறது.
நண்பர்கள் என்றால் காதலுக்கு உதவுபவர்களாகத்தான் பல படங்களில் பார்த்திருக்கிறோம். இந்தப் படத்தில் ஹீரோயினும் இல்லை காதலும் இல்லை, ஆனாலும் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களை நண்பர்கள் என்று சொல்ல முடியாது, படத்தில் அவர்களும் கதாநாயகர்களாகத்தான் தெரிகிறார்கள். அறிமுக நடிகர்களில் அபிஷேக் அதிக கவனத்தை ஈர்க்கிறார். ஷனத்துக்கு குறைவான காட்சிகள்தான் இருந்தாலும் திருப்புமுனையை ஏற்படுத்துபவரே அவர்தான்.
ஒரே ஒரு காட்சியில் அருள்நிதியின் ‘கள்ளக் காதலி’ ஆக மதுமிதா. மற்றபடி படத்தில் அருள்நிதிக்கு ஜோடியே கிடையாது.
கேபா ஜெர்மியாவின் இசையில் ‘வாடா மச்சி…’ பாடல் கேட்க வைக்கிறது. சின்னாவின் பின்னணி இசை காட்சிக்குக் காட்சி பயமுறுத்துதலை அதிகப்படுத்துகிறது.
Tags: demonte colorny