காவல் துறை விசாரணை சம்பந்தப்பட்ட படங்களில் மற்றுமொரு படம். ஆனாலும், காவல் துறை கட்டுப்பாட்டு அறையை மையமாக வைத்து மாறுபட்ட படமாகக் கொடுக்க இயக்குனர்கள் மோகன், சுந்தரபாண்டி முயற்சித்திருக்கிறார்கள்.
காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து ஒரு கொலை நடக்கப் போவதாகச் சொல்கிறார். முதலில் அதை உதாசீனப்படுத்தும் காவல் துறைக்கு அந்தக் கொலை நடந்த பிறகுதான் அது ‘பிரான்க் கால்’ அல்ல என்பது தெரிய வருகிறது. அடுத்தடுத்து அதே நபர் போன் செய்து மேலும் சில குற்றங்களைப் பற்றிச் சொல்கிறார். அதில் சில நடக்கிறது, சில தடுக்கப்படுகிறது. அந்த நபர் யார், எதற்காக இப்படி போன் செய்கிறார் என டெபுடி கமிஷனர் அஜ்மல் தலைமையிலான குழு விசாரணையில் இறங்குகிறது. அவர்கள் அந்த நபரைக் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரு க்ரைம் திரில்லர் படத்தை ஆரம்பம் முதலே விறுவிறுப்பான திரைக்கதையுடன் நகர்த்தி ரசிக்க வைத்திருக்கிறார்கள் இயக்குனர்கள். இடைவேளைக்குப் பின்பான சில தேவையற்ற காட்சிகளை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இருப்பினும் அந்தத் தொய்வையும் பிளாஷ்பேக் காட்சியிலும், கிளைமாக்ஸ் காட்சியிலும் சரி செய்திருக்கிறார்கள்.
டெபுடி கமிஷனராக அக் கதாபாத்திரத்திற்குள் தன்னை அப்படியே பொருத்திக் கொண்டுள்ளார் அஜ்மல். அவருடைய குழுவில் இருக்கும் துஷ்யந்த், ஜெய்வந்த் ஆகியோரும் பக்கபலமாக நடித்திருக்கிறார்கள். ஸ்ரீமன் கதாபாத்திரமும் அடிக்கடி வந்தாலும் கிளைமாக்சில் மற்றவர்களை முந்திக் கொண்டு முக்கியத்துவம் பெற்றுவிடுகிறார்.
சத்யராஜ் எப்போது வருவார் என்ற ஆவலைத் தூண்டி, அவர் கொஞ்ச நேரமே வந்தாலும் பரவாயில்லை, வந்த நேரத்தில் அழுத்தமான கருத்துகளை அவரது கதாபாத்திரம் மூலம் பதிவு செய்ய வைத்துவிட்டார்கள் இயக்குனர்கள்.
படம் ஆரம்பமானதிலிருந்து முடியும் வரை படத்தில் கதாநாயகி இருந்திருக்க வேண்டும் என்று எண்ணமே வரவில்லை. இந்தக் காலத்தில் கதாநாயகி இல்லாமல் ஒரு படத்தைக் கொடுக்க அசாத்திய துணிச்சல் வேண்டும்.
ஒரு க்ரைம் திரில்லராக நகரும் கதை, கடைசியில் ‘ஆணவக் கொலை’யில் முடிவது எதிர்பாராத ஒன்று. எந்தவிதமான யூகத்திற்கும் செல்ல முடியாத வகையில் திரைக்கதை அமைத்திருப்பது படத்திற்கு பலம்.
காவல் துறை சம்பந்தப்பட்ட கதைககளை கவனமாகப் படமாக்கினால் ரசிகர்களைக் கவரலாம். அது இந்தப் படத்திற்கும் நடக்க வாய்ப்புள்ளது.