விவசாயம்தான் நமது வாழ்வின் மிகப் பெரும் ஆதாரம். அப்படிப்பட்ட விவசாயத்தை அழிக்க வந்த ஒரு மரம்தான் ‘சீமக்கருவேல மரம்’. தமிழ்நாட்டின் வடக்குப் பகுதிகளில் இதை வேலிகாத்தான் மரம் என்றழைப்பார்கள். சுமார் 70 வருடங்களுக்கு முன்பு வேலி போடுவதற்காகவும், விறகு, கரி ஆகியவற்றிற்காகவும் அதன் விதை இங்கு வரவழைக்கப்பட்டு விதைக்கப்பட்டது. இன்று அதை அழிக்க முடியாத அளவிற்கு எங்கு பார்த்தாலும் பரவலாகி விவாசத்திற்கே எமனாக மாறிவிட்டது. அப்படிப்பட்ட சீமக்கருவேல மரத்தின் தீமைகளுடன், அரசியல்வாதிகள் செய்யும் தீமைகளையும் சொல்கிறது இந்த ‘இராவண கோட்டம்’.
தமிழ்நாட்டின் வறட்சி மாவட்டமாகக் கருதப்படுவது இராமநாதபுரம் மாவட்டம். அந்த மாவட்ட கிராமத்துப் பின்னணியில் தமிழ் சினிமாவில் அதிகப் படங்கள் வந்ததில்லை. இந்தப் படத்தில் அப்படி ஒரு கிராமத்தையும், அந்த ஊர் மக்களின் ஒற்றுமை, அரசியல்வாதிகளின் அரசியல் ஆகியவற்றையும் சேர்த்து இந்த இராவண கோட்டத்தைக் கட்டியிருக்கிறார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன்.
ஏனாதி என்ற கிராமத்தில் மேலத் தெரு மக்களும், கீழத் தெரு மக்களும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். அவர்களது ஒற்றுமைக்கு மேலத் தெருவைச் சேர்ந்த பிரபுவும், கீழத் தெருவைச் சேர்ந்த இளவரசுவும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதே காரணம். அவர்களைப் போன்றே நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள் மேலத் தெரு சாந்தனு, கீழத் தெரு இளவரசுவின் மகன் சஞ்சய் சரவணன். தங்களது கிராமத்தில் எம்எல்ஏ உட்பட எந்த ஒரு அரசியல் கட்சினரையும் அனுமதிக்க மாட்டார்கள். அதனால் எரிச்சலடையும் எம்எல்ஏ அருள்தாஸ் அந்த கிராமத்து ஒற்றுமையைக் குலைத்து அவர்களிடம் அரசியல் செய்ய ஆரம்பிக்கிறார். அவரது சூழ்ச்சி அரசியலை சாந்தனு முறியடிக்க முயல்கிறார். அதில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
சாந்தனு இந்தப் படம் தனக்கு முக்கியமான படமாக இருக்கும் எனத் தேர்வு செய்து செங்குட்டுவன் கதாபாத்திரத்தில் சிறப்பாகவும் நடித்திருக்கிறார். அவரது தோற்றத்தில் கிராமத்து இளைஞனை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். பிரபு மீது இருக்கும் மரியாதை, அக்கா மீது இருக்கும் அன்பு, நண்பன் மீது இருக்கும் நட்பு, காதலி ஆனந்தி மீது இருக்கும் காதல், அரசியல்வாதி அருள்தாஸிடம் காட்டும் ஆவேசம் என ஒரே படத்தில் நவரசங்களையும் கொட்டும் ஒரு கதாபாத்திரம். நடிப்பில் நிறைய முன்னேறியிருக்கிறார் சாந்தனு.
ஆனந்தி நடிக்கும் கிராமத்துப் படம் என்றாலே கேட்கவா வேண்டும். அந்தக் கதாபாத்திரத்திற்குள் அப்படியே போய் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். இந்தப் படத்திலும் அப்படியே.
கிராமத்துப் பெரிய மனிதராக பிரபு, அவரது தோற்றமும் ஊர் மக்கள் மீதான பாசமும் அவர் மீது ஒரு மரியாதையை வரவழைத்து விடுகிறது. அதே போலவே அவரது நண்பராக நடித்திருக்கும் இளவரசுவும் நம் மனதில் இடம் பிடிக்கிறார். அவ்வளவு நெருங்கிய நண்பர்களுக்கு ஏற்படும் முடிவு நமக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கும் ஒன்று.
சாந்தனுவின் நண்பனாக இருந்து அவருக்கு விரோதியாக மாறும் கதாபாத்திரத்தில் சஞ்சய் சரவணன். தொகுதி எம்எல்ஏவாக அருள்தாஸ். இப்படியான அரசியல்வாதிகள் இந்தக் காலத்திலும் இருக்கிறார்களா என நச்சுப் பாம்பாக ஊரைச் சுற்றியே வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி இசை, வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு இயக்குனருக்கு பக்கபலமாக அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் பெரும்பாலான கிராமங்களில் இன்றும் இருக்கும் சில பல பிரச்சினைகளை ஒரே படத்தில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர். ஒவ்வொன்றையும் வைத்தே ஒரு தனிப்படம் எடுக்கலாம். கமர்ஷியல் சினிமாவுக்கான சில காட்சிகள் இல்லாமல் முற்றிலும் வாழ்வியல் சார்ந்த படமாக மட்டுமே இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.