கல்லூரிப் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை பற்றிய படம். தமிழ்நாட்டில் பரபரப்பாகப் பேசப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, பொள்ளாச்சி பாலியல் குற்றங்களைச் செய்தவர்கள் ஆகியவற்றை மையப்படுத்தி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.

நாட்டில் நிஜமாக நடந்த சம்பவங்களை அதற்குரிய அழுத்தத்துடன், பரபரப்புடன் சொன்ன பல படங்கள் ஏற்கெனவே தமிழ் சினிமாவில் வந்திருக்கிறது. அப்படிப்பட்ட படங்கள் சிலவற்றைப் பார்த்து அதைப் போலவே திரைக்கதை அமைத்து இந்தப் படத்தை இயக்குனர் ஷரவண சக்தி எடுத்திருக்கலாம். ஆனால், எதையோ எழுதி என்னமோ எடுத்திருக்கிறார்.

மதுரையில் ஒரு இளம் பெண் கொல்லப்படுகிறார். அந்தப் பெண்ணைக் கொன்றதாக கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவரை நீதிமன்ற வளாகத்தில் நாயை விட்டு மர்ம உறுப்பில் கடிக்கவிட்டு கொலை செய்ய வைக்கிறார் விமல். அவர் அப்படி செய்வதற்கு என்ன காரணம் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

மருத்துவக் கல்லூரி, அங்கு படிக்கும் ஏழை மாணவிகள், அவர்களில் சிலரிடம் நைசாப் பேசி பாலியல் குற்றங்கள் செய்யும் கும்பலிடம் அனுப்பி வைக்கும் பேராசிரியை என ஒரு ஆக்ஷன் படத்துக்குரிய கதைக்களத்தை யோசித்துவிட்டு அழுத்தமில்லாத காட்சிகளால் ஏமாற்றத்தைத் தருகிறார் இயக்குனர். 

விமலின் தங்கை அந்த மருத்துவக் கல்லூரியில் படிக்க வந்து கொல்லப்படுவது பிளாஷ்பேக்கில் வருகிறது. ஆட்டோ டிரைவராக இருக்கும் விமல் அந்தக் கல்லூரியில் நடக்கும் குற்றங்களை எப்படி வெளிக் கொண்டு வருகிறார் என்பதும் இடைவேளைக்குப் பின்பான கதை.

கிராமத்து ஏழை இளைஞர் கதாபாத்திரம் எல்லாம் விமலுக்குப் பொருத்தமாக இருக்கிறது. ஆனால், கதாபாத்திரத்தில் அவர் ஒன்றி நடிக்காமல், ஏதோ கடமைக்கு நடித்தோம் என நடித்திருக்கிறார். படத்தின் கதாநாயகியாக தன்யா ஹோப்பை விட, விமலின் தங்கையாக நடித்துள்ள கீர்த்தனா கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் இயக்குனர்.

மற்ற கதாபாத்திரங்களில் பேராசிரியையாக நடித்திருக்கும் வினோதினி, இன்ஸ்பெக்டர் ஆக நடித்திருக்கும் முத்துப்பாண்டி ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். 

நடிகர் விஜய் சேதுபதி படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார் என்று படத்தில் கார்டு போடுகிறார்கள். 

கொஞ்சம் மெனக்கெட்டு திரைக்கதை எழுதி, மேலும், அழுத்தமான காட்சிகளுடன் படமாக்கியிருந்தால் பாராட்டும்படியான படமாக அமைந்திருக்கும்.