மர்மம், திகில், ஆன்மீகம் கலந்த படங்கள் என்றால் தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அந்த வரிசையில் தெலுங்கில் வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற படம்தான் இந்த ‘விரூபாக்ஷா’. தற்போது தமிழில் அதே பெயரில் டப்பிங் ஆகி வெளிவந்துள்ளது.

1990களில் நடக்கும் கதை. உத்தர வனம் என்ற கிராமத்தில் மர்மமான முறையில் சிலர் அடுத்தடுத்து இறந்து போகிறார்கள். அந்த ஊருக்கு வரும் கதாநாயகன் சாய் தரம் தேஜ், அந்த மர்மமான மரணங்களுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முயல்கிறார். அதை அவர் கண்டுபிடித்தாரா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

உத்தர வனம் கிராமத்தையே ஒரு திகிலான கிராமம் போல் படத்தில் காட்டுகிறார்கள். அங்கு பல வருடங்களுக்கு முன்பு ஒரு கணவன், மனைவியை கிராம மக்கள் உயிரோடு எரித்துக் கொல்வதோடு படம் ஆரம்பமாகிறது. கிராமத்துக் குழந்தைகளைக் கடத்தி அந்த கணவன், மனைவி மந்திர, தந்திரம் செய்வதாக நினைத்துத்தான் ஊரே அவர்களைக் கொல்கிறது. அதன்பின் பல ஆண்டுகளாக அந்த வீட்டில் அமானுஷ்ய சக்தி இருப்பதாக கிராமத்து மக்கள் நினைக்கிறார்கள். இது ஒன்று போதும் படத்தில் பரபரப்பைக் கூட்டுவதற்கு. 

படத்தின் இடைவேளை வரை மர்மமான மரணங்கள் நம்மைத் திகிலூட்ட வைக்கின்றன. அதே அளவிற்கு இரண்டாவது பாதியிலும் திகிலுடன் திரைக்கதை நகர்ந்திருந்தால் இன்னும் பரபரப்பாக இருந்திருக்கும். இடைவேளைக்குப் பின் அது குறைந்துவிடுகிறது.

சாய் தரம் தேஜ், சம்யுக்தா இருவரது ஆரம்ப காதல் காட்சிகள் சுவாரசியமாக அமைந்துள்ளன. முதல் பாதியில் சாய் தரமிற்கு முக்கியத்துவம் என்றால், இரண்டாம் பாதியில் சம்யுக்தாவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். சம்யுக்தாவின் கதாபாத்திரம் பற்றிய சஸ்பென்ஸ் யூகிக்க முடியாத ஒன்று. சாய் தரம் ஆக்ஷன் ஹீரோவுக்கான நடிப்பை சிறப்பாகவே வெளிப்படுத்தி இருக்கிறார்.

தமிழில் டப்பிங் படம் என்ற உணர்வு ஏற்படாத அளவிற்கு வி பிரபாகர் வசனங்களை எழுதியிருக்கிறார். அஜனீஷ் லோக்நாத் பின்னணி இசை, ஷம்தத் ஒளிப்பதிவு படத்திற்குக் கூடுதல் பலம். குறிப்பாக இரவு நேரக் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இயக்குனர் கார்த்திக் தண்டு, ஒரு மர்ம திகில் படம் எப்படி இருந்தால் ரசிகர்களுக்குப் பிடிக்குமோ அதை உணர்ந்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.