தேள் - விமர்சனம்
16 Jan 2022
கொரியன் படமான ‘Pieta’ படத்தை தமிழுக்குப் பொருத்தமாக சிறப்பாக மாற்றியிருக்கிறார்கள்.
கோயம்பேடு மார்க்கெட்டில் வட்டி பணத்தை வசூலித்துக் கொடுப்பவர் அனாதையான பிரபுதேவா. மார்க்கெட்டில் இறங்கி வசூலிப்பது, இரவானால் குடிப்பது என அவரது வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. யார் என்ன என்று கூட பார்க்காமல் அடித்து உதைத்தே பணத்தை வசூலித்துவிடுவார். அப்படிப்பட்டவரது வாழ்க்கையில் ‘அம்மா’ என்று சொல்லிக் கொண்டு ஈஸ்வரி ராவ் நுழைகிறார். அவர்தான் தனது உண்மையான அம்மா என்றும் நம்புகிறார். அம்மா, மகன் பாசத்தைப் பகிர்ந்து வரும் வேளையில் ஒரு எதிர்பாராத திருப்பம் நடக்கிறது. அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
பிரபுதேவா இதுவரை நடிக்காத ஒரு கதாபாத்திரம் என்று சொல்லலாம். எப்போதும் இறுகிய முகத்துடன், காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்பவர். அம்மா என்று வந்து நிற்கும் ஈஸ்வரி ராவையே கோபத்தில் அறைபவர். அப்படிப்பட்டவர் எப்படி அம்மா பாசத்தில் சிக்குண்டு அவஸ்தைப்படுகிறார் என்பதை படுசென்டிமென்டாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஹரிகுமார்.
படத்தின் நாயகி சம்யுக்தா ஹெக்டேவை விட அம்மா ஈஸ்வரி ராவுக்குத்தான் முக்கிய கதாபாத்திரம். அவருடைய அம்மா பாசத்தில் நாம் நெகிழ்ச்சியுடன் ரசிக்கும் நிலையில், அந்த அம்மா பாசத்துக்குப் பின் ஒரு அதிர்ச்சியான சம்பவம் இருக்கிறது என்பது தெரிய வரும் போது டுவிஸ்ட்டோ டுவிஸ்ட்.
யோகி பாபு நாயகனுடன் சுற்றாமல் நாயகியுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார்.
கோயம்போடு மார்க்கெட்டிலேயே முழுபடமும் சுற்றி வருகிறது. அவ்வளவு கூட்டத்திற்கிடையில் யதார்த்தமாய் படமாக்கியிருப்பதற்குப் பாராட்ட வேண்டும்.
‘அன்பைக் கொடுத்து, அதைப் பிடுங்கினால் என்ன வலி ஏற்படும்’ என்பதைச் சொல்லும் படம்.
Tags: theal, prabhu deva, harikumar, samyuktha hegde