சினம் கொள் - விமர்சனம்

18 Jan 2022

இலங்கைத் தமிழர்களை மையமாக வைத்து எப்போதோ ஒரு முறை ஒரு சில படங்கள் வந்து நம்மை உணர்வு பூர்வமாக ரசிக்க வைக்கின்றன.

இந்த ‘சினம் கொள்’ படத்தில் கதை எந்த அளவிற்கு உணர்வுபூர்வமாக உள்ளதோ, அந்த அளவிற்கு அதன் உருவாக்கமும் மிகச் சிறப்பாக உள்ளது. 

அந்தத் தமிழ் மண்ணிற்கே நாம் நேரடியாகச் சென்றுப் பார்ப்பதைப் போன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜோசப்.

எட்டு வருட சிறைவாசம் முடிந்து தனது மனைவி ஆனந்தியைத் (நர்வினி டெரி) தேடி யாழ்ப்பாணம் செல்கிறார் அமுதன் (அரவிந்தன் சிவஞானம்). சில பல தேடல்களுக்குப் பிறகு மனைவியைக் கண்டுபிடித்து விடுகிறார். அன்பான மனைவி, மகளுடன் ஒரு எளிய வாழ்க்கையை ஆரம்பிக்கிறார். வெளிநாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழரான சொர்ணலிங்கம் (தனஞ்ஜெயன்) தனது மகளுக்கு யாழ்ப்பாணத்தில் திருமணம் செய்து வைக்க வந்து ஏற்பாடு செய்கிறார். ஆனால், அவரது மகளை யாரோ கடத்தி விடுகிறார்கள். சொர்ணலிங்கத்தின் சந்தேகப் பார்வை அமுதன் மீது விழ காவல் துறையில் புகார் அளிக்கிறார். காவல் துறை அமுதனைத் தேடி, தான் குற்றமற்றவற்றவர் என்பதை நிரூபித்து உண்மைக் குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடிக்க முயல்கிறார் முன்னாள் போராளியான அமுதன். அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அமுதன் கதாபாத்திரத்தில் ஆரம்பத்திலேயே நம் கண்களைக் குளமாக்கிவிடுகிறார் அரவிந்தன் சிவஞானம். தனது மனைவியைத் தேடி அவர் ஊர் ஊராக அலையும் போது நமக்கும் வலிக்கிறது. மனைவியைத் தேடிக் கண்டுபிடித்து சந்திக்கும் போது அவர் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. இன்னும் எத்தனை அமுதன்கள் இப்படி தங்களது மனைவி, குடும்பங்களைப் பிரிந்திருக்கிறார்களோ என்று ஏங்க வைக்கிறது.

அமுதன் மனைவி ஆனந்தியாக நர்வினி டெரி. எட்டு வருடங்கள் பிரிந்த கணவரை திடீரென சந்திக்கும் அந்தக் காட்சியில் அவரது நடிப்பு அவ்வளவு யதார்த்தமாக உள்ளது. 

அமுதன், ஆனந்திக்கு உதவும் முன்னாள் போராளிகளாக லீவதி, பிரேம், தீப செல்வன் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்லாது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கம் மற்றவர்களின் தேர்வும், அதில் அவர்களது நடிப்பும் ஒரு படம் பார்க்கிறோம் என்ற உணர்வைத் தரவில்லை.

இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன் இசை, ஒவ்வொரு உணர்வு பூர்வமான காட்சியிலும் நமது உள்ளம் குமுறும் விதத்தில் உருக வைக்கிறது. பழனிக்குமார் ஒளிப்பதிவு ஒரு சிறந்த படத்தை பார்க்கிறோம் என்ற தரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. குறிப்பாக கிளைமாக்சில் கடலில் அத்தனை போட்டுகளும் ஒரு சேர வரும் காட்சியில் அந்த பறவை வியூகம் சிம்ப்ளி சூப்பர்ப்.

தங்களது மண்ணில் எந்த ஒரு குற்றமும் நடந்துவிடக் கூடாது, அனைவரும் தங்களது சகோதரிகள் என்ற உயர்ந்த எண்ணத்தை வெளிப்படுத்தும் படம் இந்த ‘சினம் கொள்’.

சினம் கொள் - நல்ல மனம்...

இப்படத்தை https://eelamplay.com/ta என்ற இணைய முகவரியில் பார்க்கலாம்.

Tags: sinam kol, ranjith joseph, nr raghunanthan, aravindan sivagnanam, narvini dery, sinam kol review

Share via: