என்ன சொல்லப் போகிறாய் - விமர்சனம்
16 Jan 2022
தமிழ்சினிமாவில் மற்றுமொரு முக்கோணக் காதல் கதை. ஒரு சுவாரசியமானக் காதல் கதையைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள். ஆனால், அதை திரைக்கதையாக வடிவமைத்த விதத்தில்தான் சொல்லத் தெரியாமல் சறுக்கியிருக்கிறார்கள்.
ரேடியோவில் ஆர்ஜே-வாக இருப்பவர் அஷ்வின். அவருக்கு எழுத்தாளர் அவந்திகாவுடன் திருமணம் உறுதி செய்யப்படுகிறது. காதலில் தோல்வியுற்றவர்கள்தான் தன்னை அதிகம் நேசிப்பார்கள் என்கிறார் அவந்திகா. அதனால், தனக்கும் ஒரு காதல் தோல்வி இருப்பதாகப் பொய் சொல்கிறார் அஷ்வின். முன்னாள் காதலியாக தேஜு அஸ்வினியை நடிக்க வைக்கிறார். போகப் போக, தேஜுவையே காதலிக்க ஆரம்பிக்கிறார் அஷ்வின். யார், யாரைக் கல்யாணம் செய்து கொண்டார்கள் என்பதுதான் மீதிக் கதை.
காதல் நாயகனாக தமிழ் சினிமாவில் பெயரெடுத்துவிட வேண்டும் என்ற ஆசையில் நடித்திருக்கிறார் அஷ்வின். ஒரு பக்கம் அவந்திகா காதல், மற்றொரு பக்கம் தேஜு மீது காதல் என ஒரே நேரத்தில் இரண்டு விதமான காதலை அனுபவித்து நடிக்கும் நடிப்பில் அஷ்வின் குறை வைக்கவில்லை.
எழுத்தாளர் என்பதற்காக மெச்சூரிட்டியுடன் அவந்திகா நடந்து கொள்கிறார். தேஜு அஸ்வினி காதலில் விழுவதிலும், விலகுவதிலும் என காதலின் இருவேறு நிலையை இயல்பாய் வெளிப்படுத்தியிருக்கிறார். புகழ் தனக்குக் கிடைத்த வாய்ப்பை மீண்டும் வீணடித்திருக்கிறார்.
படத்தின் சிறப்பம்சம் ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு. காதல் படங்களில் ஒளிப்பதிவு சிறப்பாக இருப்பது ரசனைக்குரியது. இயக்குனர் காட்சிப்படுத்தியதை விட ஒளிப்பதிவாளர் காட்சிப்படுத்தியிருப்பது மிகவும் அருமை.
காதல் படங்களில் மௌனம் என்பது தனி அழகு. இந்தக் காதல் படத்தில் மௌனத்தை விட அதிகம் பேசிப் பேசி காதலைக் கொஞ்சம் சிதைத்துவிட்டார்கள்.
Tags: enna solla pogirai, ashwin, avanthika, teju ashwini, hariharan