சுழல் 2- வெப் சீரிஸ் - விமர்சனம்

28 Feb 2025

‘சுழல்’ இணையத் தொடரின் முதல் சீசன் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு தொடராக அமைந்தது. அதனால், இந்த ‘சுழல் 2’க்கும் அதே அளவிலான எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த இரண்டாவது சீசனில் முதல் சீசனில் நடித்த கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் தவிர நடித்துள்ள மற்றவர்கள் வேறு நடிகைர்கள், நடிகைகளே.  

காளிப்பட்டிணம் என்ற கடற்கரை ஊரை மையப்படுத்திய கதையாக இந்த சீசன் அமைந்துள்ளது. அங்கு நடக்கும் திருவிழா காலகட்டத்தில் கதை நகர்கிறது. சிறுவயதிலிருந்தே கதிரை எடுத்து வளர்த்து அவரை சப் இன்ஸ்பெக்டர் ஆக்கியவர் லால். அங்குள்ள பிரபல வக்கீல். அவர்தான் முதல் சீசனில் கொலை செய்து சிறைக்குச் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் வழக்கிற்காக வாதாடி வருபவர். லால் வீட்டிற்குச் செல்கிறார் கதிர். மறுநாள் அவரது பண்ணை வீட்டில் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடக்கிறார் லால். வீட்டின் அலமாரி ஒன்றினுள் இளம் பெண்ணான கௌரி கிஷன் துப்பாக்கியுடன் இருந்து பிடிபடுகிறார். கதிரையே அந்த வழக்கின் விசாரணையை நடத்த உத்தரவிடுகிறார் டிஐஜி. அப்பகுதி இன்ஸ்பெக்டர் சரவணனையும் உதவியாக இருக்கச் சொல்கிறார். இருவரும் சேர்ந்து விசாரணையை ஆரம்பிக்கிறார்கள்.  கௌரி பற்றியும், அவர் ஏன் அந்தக் கொலையைச் செய்தார் என்பது பற்றியும் விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால், வெவ்வேறு காவல் நிலையங்களில் ஏழு இளம் பெண்கள் லாலை தாங்கள்தான் கொலை செய்தோம் என சரண்டர் ஆகிறார்கள். இதனால் விசாரணை சிக்கலாகிறது. உண்மைக் குற்றவாளி யார் என்பதை கதிர், சரவணன் எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதுதான் மீதிக் கதை.

ஒரு திரைப்படத்திற்கோ, இணையத் தொடருக்கோ கதாபாத்திரங்களுக்கான நடிகர், நடிகையர் தேர்வு மிகவும் முக்கியம். இத்தொடரில் அது அனைத்துமே மிகச் சரியாக அமைந்துள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர்களும் தொடருடன் நாம் ஒன்றி ரசிக்கும் அளவிற்கு நடித்திருக்கிறார்கள்.

குறிப்பாக கதிர், சினிமாவில் அவர் நடிப்பதை விடவும் இத்தொடரின் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். அவரது உடல் மொழி, பேசும் விதம், பிரச்சனைகளை அணுகும் விதம் என ஒரு நிதானம், பொறுமை, மெச்சூரிட்டி என அனைத்தும் இருக்கிறது. முதல் சீசனிலும் சரி, இந்த இரண்டாவது சீசனிலும் தொடரை முழுவதுமாக தாங்கி நிற்கிறார் கதிர்.

கதைப்படியும் நடிப்பிலும் கதிருக்கு சரியான போட்டியாக அமைந்திருக்கிறார் சரவணன். அவரும் அப்பகுதியைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் எப்படி இருப்பார்களோ, அதை அப்படியே தன் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார். அவர் அவரது ஹேர்ஸ்டைலை மட்டும் ‘போலீஸ் கட்டிங்’ ஆக வைக்காமல் நிறைய முடியுடன் வைத்துவிட்டார்கள்.  அதில் மட்டும் ஏன் கவனக் குறைவு.

ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ச்சியாக வராமல் ஒரு இடைவெளிவிட்டுதான் வந்து போகிறார். அவர் இருக்கும் பெண்கள் சிறைச்சாலையும், அங்கு நடக்கும் சில விஷயங்களும் சினிமாத்தனமாக இருக்கிறது. ஒரு சிறைக்குள் இப்படியெல்லாம் நடக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது. மற்றவற்றில் யதார்த்தத்தை அழுத்தமாக பதிவு செய்ய முயன்ற இயக்குனர்கள் இந்த சிறை விவகாரத்தில் மட்டும் கோட்டை விட்டிருக்கிறார்கள்.

அனைவருக்கும் நல்லது செய்ய நினைக்கும் ஒரு அற்புதமான வக்கீல் கதாபாத்திரத்தில் லால். இப்படியும் ஒரு சில நல்ல மனிதர்கள் இந்த உலகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர் மீது மரியாதை வரும்படியாக நடித்திருக்கிறார் லால்.

பிளாஷ்பேக்கில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் இடம் பிடிக்கிறார்கள் கயல் சந்திரன், மஞ்சிமா மோகன். அதிலும் மஞ்சிமா கதாபாத்திரம் மிகவும் அற்புதமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

அஷ்ட காளிகளாக பெண்கள் வடிவத்தில் வந்து அரக்கனை கொல்லத் துடிக்கும் எட்டு பெண்களாக கௌரி கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன், மோனிஷா பிளெஸ்சி, ஷிரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், ரினி, கலைவாணி பாஸ்கர், ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

லால் மனைவியாக அஸ்வினி நம்பியார் நடித்திருக்கிறார். ‘புது நெல்லு புது நாத்து, கிழக்குச் சீமையிலே’ படங்களில் நடித்தவர் இவர். 

புஷ்கர், காயத்ரி எழுத்து, உருவாக்கம் செய்திருக்கிறார்கள். முதல் நான்கு எபிசோடுகள் மெதுவாக நகர்கின்றன. அதன்பின் வரும் நான்கு எபிசோடுகளும் மிகவும் பரபரப்பாக பயணிக்கின்றன.  பிரம்மா, கேஎம் சர்ஜுன் இத்தொடரை இயக்கியிருக்கிறார்கள். சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்திருக்கிறார். தொடரின் ஹீரோ என ஒளிப்பதிவாளர் ஆபிரகாம் ஜோசப்பை தாராளமாகக் கூறலாம். திருவிழா காட்சிகளை அவர் படமாக்கி இருக்கும் விதம் அசாத்தியமானது. ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வைத் தொடர் முழுவதும் தந்திருக்கிறார்.

முதல் சீசன் போல ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பாக நகரவில்லை என்றாலும், கடைசி நான்கு எபிசோடுகள் உங்களை இந்த சுழலுக்குள் சிக்க வைக்கும்.

 

Tags: suzhal 2, kathir, aishwarya rajesh, km sarjun, bramma

Share via: