சப்தம் - விமர்சனம்

28 Feb 2025

அறிவழகன் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ஆதி, லட்சுமி மேனன், சிம்ரன், லைலா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

மூணார் தனியார் மருத்துவக் கல்லூரியில், அடுத்தடுத்து ஒரு மாணவர், இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதால், கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சியடைகிறது. இறந்தவர்களின் உடல்கள் கோணலாகவும், மோசமான நிலையில் சிதைந்தும் காணப்படுவதால், இது ஒரு அமானுஷ்யத்தின் வேலை என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால், பேய்கள் மற்றும் அமானுஷ்யங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் நிபுணரான ஆதியை கல்லூரி நிர்வாகம் அழைக்கிறது.

அக்கல்லூரியில் உள்ள நூலகத்தில் ஆராய்ச்சி செய்யும் போது, பல அமானுஷ்யங்கள் இருப்பதைக் கண்டறிகிறார் ஆதி. மேலும், இந்த நூலகம் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சர்ச் ஆக இருந்ததையும் அவர் கண்டுபிடிக்கிறார். இந்த சர்ச் எப்படி அமானுஷ்யங்களின் கூடாரமாக மாறியது ? அந்த அமானுஷ்யங்கள் யார் ? ஏன் மாணவர்களை கொல்கின்றன ? என்ற கேள்விகளுக்கான விடைகளே "சப்தம்" படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஆதி, "ஈரம்" திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்குனர் அறிவழகனுடன் கூட்டணி வைத்திருக்கிறார். "ஈரம்" படத்தில் கொடுத்த அதே சக்திவாய்ந்த நடிப்பை இப்படத்திலும் வெளிப்படுத்தி, அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார். தனது கதாபாத்திரத்தின் ஆழத்தை உணர்ந்து, அந்த பாத்திரத்துடன் ஒன்றிணைந்து நடித்திருக்கிறார் ஆதி.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் லட்சுமி மேனன். அழகிலும் நடிப்பிலும் வழக்கம் போலவே ரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக, பேயாக மாறும் காட்சியில் அவரது நடிப்பு பாராட்டத்தக்கது. சிம்ரன் மற்றும் லைலா ஆகியோருக்குக் குறைவான காட்சிகள் இருந்தாலும், அவர்களின் நடிப்பு படத்திற்கு மிகுந்த வலுவை சேர்க்கிறது. குறிப்பாக, லைலாவின் நடிப்பு படத்தின் முக்கியமான பலம் என்றே கூறலாம். சிம்ரன் கதாபாத்திரம் முக்கியமானதாக இருந்தாலும் இன்னும் கூடுதல் காட்சிகளைவைத்திருக்கலாம்.

ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய தூணாக நிற்கின்றன. ஒவ்வொரு காட்சியிலும் ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபனின் மெனக்கெடல் தெரிகிறது, இது படத்தை அடுத்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. இசையமைப்பாளர் தமன், படத்திற்கென்று யூனிக் இசையை அமைத்து, படத்தின் மனோபாவத்தை மேலும் பலப்படுத்தியிருக்கிறார். பின்னணி இசையின் ஒவ்வொரு நொடியும் திரையரங்குகளில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இன்னும் சற்று தெளிவான திரைக்கதை மற்றும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய காட்சியமைப்பை இயக்குனர் கொடுத்திருக்கலாமே என்ற கேள்வி பார்வையாளர்களிடையே எழாமல் இல்லை. இருந்தாலும், "சப்தம்" படம் ஒரு மிரள வைக்கும் அனுபவத்தை வழங்குகிறது, மேலும் அதன் திரைக்கதை, நடிப்பு, ஒளிப்பதிவு மற்றும் இசை ஆகியவை படத்தின் ஹைலைட்டாக அமைந்துள்ளன.

Tags: sabdham, arivazhagan, thaman, aathi, lakshmi menon, simran, laila

Share via: