அறிமுக இயக்குனர் மதி மாறன் தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு கதையைக் கையாண்டிருக்கிறார். அதில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் பெற்றிருக்கிறார்.

சுயநிதி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் என்ற பெயரில் நடக்கும் பகல் கொள்ளை சம்பவங்களை உள்ளது உள்ளபடி அப்படியே காட்டியிருக்கிறார். 

குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களை புரோக்கர்களை வைத்து ஆள்பிடிக்கும் கல்லூரி உரிமையாளர், அந்தத் தொழிலில் இறங்கி பணம் சம்பாதிக்க நினைக்கும் ஒரு கல்லூரி மாணவர் என பரபரப்பாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

வீட்டில் அப்பாவின் தொந்தரவால் இஞ்சினியரிங் கல்லூரியில் படிக்கிறார் ஜிவி பிரகாஷ்குமார். ஆனால், அவருக்கு படிப்பை விட பணம் சம்பாதிப்பதில்தான் அதிக ஆர்வம். மருத்துவக் கல்லூரி மேனேஜ்மென்ட் சீட்டுகளுக்காக மாணவர்களைப் பிடிக்கும் புரோக்கர் வேலையில் அவரும் இறங்குகிறார். அந்த மருத்துவக் கல்லூரிக்காக ஏற்கெனவே புரோக்கர் வேலை பார்க்கும் கௌதம் மேனனுக்கும், ஜிவிக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது. அதனால் நடக்கும் சிக்கல்கள்தான் படத்தின் மீதிக் கதை.

படிப்பை விரும்பாத, அல்லது படிப்பே ஏறாத கல்லூரி மாணவராக பொருத்தமாக நடித்துள்ளார் ஜிவி. பெரிய ஆளான கௌதமை எதிர்த்து வேலையில் இறங்கும் அளவிற்கு துணிச்சல் உள்ளவர். ஆனால், நண்பன் ஒருவனின் திடீர் இழப்பால் கலங்கிப் போகிறார். இருப்பினும் தொடர்ந்து அதே வேலையைச் செய்து நண்பன் குடும்பத்திற்கு உதவ நினைக்கும் நல்ல மனம் கொண்டவராகவும் நடித்திருக்கிறார். 

தமிழ் சினிமாவில் தற்போது டீசன்டான வில்லன் என்றால் இயக்குனர்கள் கௌதம் மேனனைத் தேடிச் செல்கிறார்கள். அவர்களது நம்பிக்கையை கௌதமும் வீணாக்குவதில்லை.

கதாநாயகி என்பதற்காக வர்ஷா பொல்லம்மாவை படத்தில் சேர்த்திருக்கிறார்கள். ஜிவியின் நண்பனாக குணாநிதி கலங்க வைக்கிறார். ஜிவியின் அப்பாவாக சந்திரசேகர், நடுத்தரக் குடும்பத்து அப்பாக்களின் கஷ்டத்தை கண்முன் நிறுத்துகிறார்.

இன்றைய காலத்திற்குத் தேவையான ஒரு படம். ஆரம்பத்தில் வரும் சில குழப்பமான காட்சிகளைத் தெளிவாகச் சொல்லியிருந்தால் இன்னும் அழுத்தமான உணர்வு கிடைத்திருக்கும்.