சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2’ ஆகிய படங்களை நகைச்சுவைப் படங்களாக இயக்கியவர் ராம்பாலா. அவரது இயக்கத்தில் வந்திருக்கும் படம் என்ற எதிர்பார்ப்புடன் இந்த ‘இடியட்’ படம் பார்க்க உட்கார்ந்தால் இப்படி ஏமாற்றிவிட்டாரே என்றுதான் வருத்தப்பட வேண்டி உள்ளது.

முந்தைய இரண்டு படங்களையும் பேய்ப் படமாகக் கொடுத்தவர், இந்தப் படத்தையும் பேய்ப் படமாகவே கொடுத்திருக்கிறார். சந்தானத்திற்குப் பதிலாக மிர்ச்சி சிவா, அது மட்டும்தான் வித்தியாசம்.

ஜமீன்தார் சிவசங்கர் குடும்பத்தினரை பணம், நகைக்காக அவரது மெய்க்காவலர்களே கொலை செய்கிறார்கள். சிவசங்கர் குடும்பம் அந்த அரண்மனையிலேயே பேய்களாக உலவிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அரண்மனைக்குள் நாயகி நிக்கி கல்ரானி ஒரு சூனியக்காரியால் கடத்தப்படுகிறார். நிக்கியைத் தேடிச் செல்லும் அவரது காதலரான மிர்ச்சி சிவாவும் அந்த அரண்மனைக்குள் செல்கிறார். நிக்கியை ஏற்கெனவே கடத்தத் திட்டமிடும் ரவி மரியாவும் அங்கு போகிறார். யாரிடமிருந்து யார் தப்பினார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

வழக்கம் போல ஒன்லைன் நகைச்சுவை வசனங்களில் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். அவருக்கு ஒரு விபத்தில் திடீரென மனநலம் பாதிக்கப்படுகிறது. ஆனாலும், முன்பு எப்படி பேசினாரோ அப்படியே பின்னரும் பேசுகிறார்.

பேய் படம் என்றாலே நடிக்க நிக்கி கல்ரானி சம்மதித்துவிடுவார் போலிருக்கிறது.

சிவாவின் நண்பராக கிங்ஸ்லி நடித்திருக்கிறார். சிரிக்க வைப்பார் என்று பார்த்தால் பேசிக் கொண்டே இருக்கிறார். 

சிவாவின் அப்பா ஆனந்தராஜ் ஆரம்பத்தில் அடிக்கடி சிரிக்க வைக்கிறார். அவரை படம் முழுவதும் பயன்படுத்தியிருந்தாலே சிரிப்புக்குப் பஞ்சமிருக்காமல் போயிருக்கும். 

ஏற்கெனவே பார்த்து சலித்துப் போன பல காட்சிகள் படத்தில் இருந்தாலும், நகைச்சுவைக்காக இன்னும் கூடுதலாய் உழைத்திருக்கலாம்.