பேய், அமானுஷ்ய சக்தி, பழைய வரலாறு ஆகியவற்றை வைத்து தமிழ் சினிமாவில் இதுவரை பல படங்கள் வந்திருக்கின்றன. அந்த வரிசையில் வந்திருக்கும் மற்றுமொரு படம் இது. ஆனால், ஒரு வித்தியாசமான படமாகக் கொடுக்க முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

இயக்குனர் ஜேகே விக்கி பேய், வரலாறு, அமானுஷ்யம் என கதை, திரைக்கதையில் கடுமையாக உழைத்து, யோசித்து எழுதி, அதைத் திரையிலும் அப்படியே கொண்டு வந்திருக்கிறார்.

மலேசியாவில் நடக்கும் கதை. நண்பர்களான தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகரன் ஆகியோர் ஆவிகளுடன் பேச வேண்டும் என நினைத்து செயலில் இறங்குகிறார்கள். மல்லிகா என்ற 23 வயது பெண்ணின் ஆவியுடன் பேசுகிறார்கள். அந்த ஆவி சொல்லும் விஷயங்களால் அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கின்றன. அவை என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் நாயகனாக மிர்ச்சி ரமணா. தனது கதாபாத்திரத்தை உணர்ந்து இயல்பாக நடித்திருக்கிறார். அவருடைய தமிழ் உச்சரிப்பும், அவரது குரலும் அவரது நடிப்பை இன்னும் மெருகேற்றிக் காட்டுகிறது.

நண்பர்களாக நடித்திருக்கும் தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகரன், மல்லிகாவாக நடித்திருக்கும் ஹம்சினி பெருமாள் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் பெயர் வாங்கும் அளவிற்கு நடித்திருக்கிறார்கள்.

பேய், அமானுஷ்யம் என்றால் பழைய வரலாறு என கற்பனை கலந்த ஒன்றைப் பதிவு செய்வார்கள். ஆனால், இந்தப் படத்தில் ராஜேந்திர சோழன், களப்பிரர்கள் ஆட்சிக் காலம் என அவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறார் இயக்குனர்.

டஸ்டின் ரிதுவன்ணா இசை, அசல் இஸம் பின் முகமது அலியின் ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் இயக்குனருக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள்.

சில பல கேள்விகள் படம் பார்க்கும் போது எழுந்தாலும், அதைக் கடந்து போகும் அளவிற்கு படத்தை விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் கொடுத்திருக்கிறார்கள்.

மலேசியாவில் தயாராகும் இம்மாதிரியான படங்கள் தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பைப் பெறும் காலம் விரைவில் வரும். இந்தக் குழுவிற்கு அது கிடைக்க வாழ்த்துகள்.