ஆர்ஆர்ஆர் – விமர்சனம்

25 Mar 2022

இந்திய சினிமாவில் ‘ஆர்ஆர்ஆர்’ படம் மூலம் மீண்டும் ஒரு அழுத்தமான தடத்தைப் பதித்திருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி. ஐந்து வருட உழைப்பு, அனைவரின் அபரிமிதமான ஈடுபாடு இந்தப் படத்தை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. ஒவ்வொரு பிரேமிலும் அது அனைத்தும் தெரிகிறது. ‘பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு சாதனையை ராஜமௌலி குழுவினர் படைக்கப் போகிறார்கள் என்பது நிச்சயம்.

ஆங்கிலேயர்கள் இந்த ஆண்ட போது 1920களில் நடக்கும் ஒரு கதைதான் இந்தப் படம். தெலங்கானா பகுதியைச் சேர்ந்த ஒரு பழங்குடி சிறுமியை டெல்லி கவர்னரின் மனைவி ஒருவர் வலுக்கட்டாயமாக தன்னுடன் அழைத்துச் செல்கிறார். தங்கள் இனத்திலிருந்து ஒருவரைக் கூட வெளியில் அனுப்பாத பழக்கம் கொண்டவர்கள் அம்மக்கள். பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஜுனியர் என்டிஆர் தங்களது சிறுமியை மீட்டுக் கொண்டு வர டெல்லி செல்கிறார். அங்கு ஆங்கிலேயரிடம் போலீஸ் அதிகாரியாக இருக்கும் ராம்சரணுடன் நட்பு கொள்கிறார். சிறுமியை மீட்க ஏதோ ஒரு குழு வந்துள்ளது என்று தெரியும் கவர்னர் மாளிகை அதிகாரிகள், என்டிஆர் உள்ளிட்டோரைப் பிடிக்கும் பொறுப்பை ராம்சரணுக்கே கொடுக்கிறது. ஒருவர் பற்றி மற்றவர் தெரிந்து கொள்ளாத நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்திற்காக செவழிக்கப்பட்ட அத்தனை கோடிகளும் கண்முன் பிரம்மாண்டமாக விரிகிறது. சில காட்சிகள் அட, இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா எனக் கேட்க வைக்கிறது. குறிப்பாக இடைவேளைக்கு முன்பாக கவர்னர் மாளிகைக்குள் என்டிஆர் காட்டு விலங்குகளுடன் செல்லும் காட்சி, பிரமாதமான ஒரு கற்பனை. 

இரண்டு முன்னணி தெலுங்கு ஹீரோக்களை வைத்து படமெடுக்கிறோம். அவர்களது ரசிகர்களை நிறைவாக திருப்திப்படுத்த வேண்டும் என்று நிறையவே மெனக்கெட்டிருக்கிறார் ராஜமௌலி. இருவரது ரசிகர்களும் கொண்டாடுவதற்குத் தகுந்த மாதிரியான பல காட்சிகள் படத்தில் உள்ளன.

என்டிஆர், ராம்சரண் இருவருமே ராஜமௌலி மீது நம்பிக்கை வைத்து இத்தனை ஆண்டுகளாக வேறு படங்களிலும் நடிக்காமல் இந்தப் படத்தில் மட்டுமே நடித்தது அவர்களைப் பெரிதும் பாராட்ட வைக்கிறது. இருவருக்குமோ எமோஷனல், ஆக்ஷன், காதல், நடனம் என முழுமையான ஹீரோயிசக் கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார் ராஜமௌலி. அதில் இருவருமே தங்களது முழு திறமையையும் கொட்டி நடித்திருக்கிறார்கள். இதற்கு முன் அவர்கள் நடித்த படங்களை எல்லாம் விட இந்தப் படம் அவர்களது திரையுலகப் பயணத்தில் ஒரு முக்கிய முதன்மை இடத்தைப் பிடிக்கும்.

ஆலியா பட்டுக்கு சிறிய கதாபாத்திரம்தான். கொஞ்ச நேரமே வந்தாலும் கதையின் முக்கிய திருப்பத்திற்குக் காரணமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அமைதி வழி போராட்டத்தை விட ஆயுத வழிப் போராட்டமே சிறந்தது என புரட்சியாளராக அஜய் தேவகன். ராம்சரணுக்கு உதவியாக இருக்கும் மாமா கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி. டெல்லி கவர்னராக ரே ஸ்டீவன்சன், மிரட்டலான ஒரு கதாபாத்திரம்.

மரகதமணியின் பின்னணி இசை திரையில் உள்ள மிரட்டலுக்கு இன்னும் ஈடு கொடுக்கிறது. ‘நாட்டு நாட்டு’ பாடலின் இசையும், அதைப் படமாக்கிய விதமும் மாஸ்டர் கிளாஸ். தயாரிப்பு வடிவமைப்பாளர் சாபு சிரில் இயக்குனருக்கு வலதுகரமாக இருந்திருக்கிறார். அடுத்து விஎப்எக்ஸ் மேற்பார்வையாளர் ஸ்ரீனிவாச மோகன். ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் அனைத்து பிரம்மாண்டத்தையும் அவ்வளவு அழகாய் படமாக்கியிருக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத் தொகுப்பு மூன்று மணி நேரப் படத்தையும் போவது தெரியாமல் ரசிக்க வைக்கிறது. சண்டைக் காட்சிகளுக்காக உழைத்த ஒவ்வொருவரையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

படத்தின் இரண்டாவது பாதி வேகமெடுக்கக் கொஞ்ச நேரம் ஆகிறது. முதல் பாதியில் இருந்த திரைக்கதை அமைப்பு இரண்டாம் பாதியில் கொஞ்சம் தடுமாறியிருக்கிறது. பின்னர், கிளைமாக்சுக்கு முன்பாக விஸ்வரூபம் எடுக்கிறது. சுதந்திரப் போராட்ட கதை என்று சொன்னார்கள். ஆனால், அந்தப் பக்கம் அதிகம் செல்லாமல் அதை அடிப்படையாக வைத்து ஒரு ஆக்ஷன், அதிரடி கமர்ஷியல் படத்தைக் கொடுப்பதில் மட்டும் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.

இந்திய சினிமாவின் பிரம்மாண்டம் ஹாலிவுட் படங்களுடனும் போட்டி போட முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் ராஜமௌலி.

Tags: rajamouli, maragathamani, samuthirakani, ram charan, jr ntr, rrr

Share via: