சர்கார் - விமர்சனம்
06 Nov 2018
‘சர்கார்’ என்ற படத்தின் தலைப்பே இது ஒரு அரசியல் படம் என்பதைச் சொல்லிவிடும்.
படத்தை சில விஷயங்களுக்காகக் கண்டிப்பாகப் பாராட்டியே ஆக வேண்டும். ஒன்று, உங்கள் தொகுதிக்கான தகுதியான வேட்பாளர் யார் என்பதை நீங்களே தேடிக் கண்டுபிடியுங்கள், இரண்டு, ஓட்டுப் போட வராத ஒவ்வொருவரும்தான் முதல் திருடன், மூன்று, 20 சதவீத மக்கள் மட்டுமே வாக்களித்து நம்மை யார் ஆள வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள், என நம் நாட்டில் உண்மையான ஜனநாயகம் மலர என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் படத்தில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள்.
இதை விஜய் படம் என்று பார்ப்பதைவிட, இது நமக்கான படம் எனப் பார்க்க வேண்டும். ஐந்து வருடத்திற்கு ஒரு முறைதான் தேர்தல் வருகிறது. அதற்காக பொது விடுமுறை கூட விடுகிறார்கள். ஆனாலும், பலர் வாக்களிக்க வருவதில்லை. அவர்களால்தான் இந்த நாடும் உருப்படாமல் போகிறது என்ற கருத்தை இந்தப் படம் வலியுறுத்துகிறது.
அமெரிக்காவில் உள்ள உலகின் நம்பர் 1 கம்பெனியான ஜிஎல் என்ற கம்பெனியின் சிஇஓ-வாக இருப்பர் சுந்தர் ராமசாமி (விஜய்). தமிழ்நாட்டில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக தனி விமானத்தில் அமெரிக்காவிலிருந்து வாக்களிக்க வருகிறார். ஆனால், அவரது ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட்டுவிடுகிறார்கள். அதனால், ஆத்திரமடையும் அவர் நீதிமன்றத்தை அணுகி, மீண்டும் வாக்களிக்கும் உரிமையான ‘49 பி’ சட்டத்தின்படி அவருடைய வாக்குரிமையை மீட்கிறார். அது போல, தங்களது ஓட்டை கள்ள ஓட்டால் இழந்த 3 லட்சத்திற்கும் அதிகமானவர்களை வழக்கு தொடுக்க வைக்கிறார்.
தேர்தல் முடிவுகளின்படி பெரும்பான்மையைப் பிடித்து 3வது முறையாக ஆட்சியைப் பிடிக்கிறார் மாசிலாமணி (பழ கருப்பையா). ஆனால், அவர் பதவியேற்கும் நேரத்தில், நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்து மறு தேர்தலை நடத்த உத்தரவிடுகிறது. மாசிலாமணியின் தொடர் மிரட்டலால், அவரை எதிர்த்தே போட்டியிடுகிறார் சுந்தர். அதோடு, அனைத்து தொகுதிகளிலும் சரியான ஆட்களைத் தேர்ந்தெடுத்து தேர்தலில் நிற்க வைக்கிறார்.
ஆளும் கட்சியை எதிர்த்து தனி ஒருவனாகப் போராடும் சுந்தர் தேர்தலில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
சுந்தர் ராமசாமியாக விஜய், மாசிலாமணி ஆக பழ கருப்பையா, இரண்டாவது இடத்தில் இருக்கும் ரெண்டு என்கிற மலர்வண்ணன் ஆக ராதாரவி, பழ கருப்பையா மகள் கோமளவல்லி ஆக வரலட்சுமி, விஜய்யின் காதலியாக (?) நிலா ஆக கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
உலகின் நம்பர் ஒன் கம்பெனியின் சிஇஓ வாக வருடத்திற்கு 1800 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் தமிழராக, ராமேஸ்வரம் மீனவக் குடும்பத்தில் பிறந்த விஜய். அவருடைய வாழ்க்கை கஷ்டத்தைச் சொல்லும் போது உருக வைக்கிறார். படத்தில் நிகழ்கால அரசியலைப் பற்றி விஜய் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் தியேட்டரில் கைத்தட்டலை வரவைக்கிறது. விஜய்யின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இந்த ‘சர்கார்’ இன்னும் கொஞ்சம் உயரத்தில் கொண்டு போகும்.
தன்னுடைய இடத்தில் மட்டும் இருக்காமல் எதிர்க்கட்சியின் அலுவலகத்திற்கும், கூட்டத்திற்கும் சென்று அலற வைக்கிறார் விஜய். படத்தில் அவர் இல்லாத காட்சிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு படம் முழுவதையும் ஆக்கிரமித்திருக்கிறார் விஜய்.
அவருக்கு அடுத்து படத்தில் முதல்வராக வரும் பழ கருப்பையாதான் முக்கிய இடத்தைப் பிடிக்கிறார். ‘அக்னி நட்சத்திரம்’ உமாபதியை ஞாபகப்படுத்துகிறது அவருடைய தோற்றமும் நடிப்பும். கோபத்தையும், வெறுப்பையும் அவ்வளவு இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
முதல்வர் பழ கருப்பையாவிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருப்பதாலேயே ராதாரவி ரெண்டு என அழைக்கப்படுகிறார். வழக்கம் போல தன் அனுபவ நடிப்பில் அசத்துகிறார் ராதாரவி.
வரலட்சுமி அவருடைய கதாபாத்திரத்தில் அவ்வளவு மிரட்டுகிறார். அவரை கிளைமாக்சில் கொண்டு வந்ததற்குப் பதில் இடைவேளைக்குப் பிறகே கொண்டு வந்திருந்தால் இன்னும் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டிருக்கும்.
கீர்த்தி சுரேஷ், விஜய்யுடன் இரண்டு பாடல்களுக்கு நடனம் ஆடுவதாலேயே நமக்கு நாயகியாகத் தெரிகிறார். மற்றபடி படத்தில் அவருக்குப் பெரிய வேலையில்லை. ஒரு காதல் காட்சி கூட இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். யோகி பாபு, லிவிங்ஸ்டன், துளசி ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள்.
ஏ.ஆர். ரகுமான் இசையில் பரபரப்பாகப் பேசப்பட்ட ‘சிம்டாங்காரன்’.. பாடல் வேண்டுமென்றே படத்தில் திணிக்கப்பட்டிருக்கிறது. இடைவேளைக்கு முன்பாக வரும் பாடல்கள் சிறப்பாக இருந்தாலும் இந்தப் படத்தில் பாடல்களே தேவையில்லை என்று தாரளமாகச் சொல்லலாம்.
சண்டை இயக்குனர்கள் ராம் - லட்சுமண் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளின் போது எத்தனை பேருக்கு நிஜமாக அடிப்பட்டிருக்கிறது என்று கேட்க வேண்டும்.
மக்களுக்கு சிறப்பான ஆட்சியைத் தரும் அரசியல் கட்சியும், மக்களுக்கு நல்லது செய்பவர்கள் எம்எல்ஏ வாக வேண்டும் என்று கூறும் படம். அதைவிட மக்கள் தவறாமல் வந்து வாக்களிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தக் கருத்துக்கள்தான் படத்தின் ஹைலைட்.
மற்றபடி இடைவேளைக்குப் பின் படம் தேர்தலை நோக்கியே நகர்கிறது. அதிலும் பரபரப்பான காட்சிகள் என எதுவுமில்லை. முதல் பாதியில் இருந்த வேகம், விறுவிறுப்பு, இரண்டாவது பாதியில் குறைந்துவிடுகிறது. அதன்பின் நடப்பவை ஒவ்வொன்றும் சினிமாத்தனமான காட்சிகளே.
சர்கார் - விஜய் ரசிகர்களுக்கு சரவெடி.
Tags: sarkar, vijay