காற்றின் மொழி - விமர்சனம்
17 Nov 2018
‘மொழி’ என்ற அற்புதமான ஒரு திரைப்படத்தை தமிழ் சினிமாவுக்குத் தந்த ராதாமோகன் - ஜோதிகா பல வருடங்களுக்குப் பிறகு இணைந்து மீண்டும் கொடுத்துள்ள படம் ‘காற்றின் மொழி’.
கணவன், மகன், குடும்பம் என வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் ஒரு பெண், அவளுக்குப் பிடித்த வேலையை செய்வதற்காக எப்படிப்பட்ட பிரச்சினைகளையெல்லாம் சந்திக்கிறார் என்பதுதான் இந்தப் படம்.
படம் என்றாலே இளம் நட்சத்திரங்களை வைத்து மட்டுமே எடுப்பார்கள். ஜோதிகா மீண்டும் நடிக்க வந்த பின் அது கொஞ்சம் மாறிவிட்டது. நடுத்தர வயதுப் பெண்களின் பிரச்சினைகளைச் சொல்லும் படங்களும் தமிழ் சினிமாவில் எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளது.
ஒரு மிடில் கிளாஸ் பேமிலி ஜோதிகாவுடையது. ஆடை நிறுவனத்தில் வேலை பார்க்கும் கணவர் விதார்த், பள்ளியில் படிக்கும் மகன் என எப்போதுமே குடும்பத்துக்காகவே வேலை செய்து வரும் ஒரு பெண். அவருக்கு மனதுக்குப் பிடித்த ஏதாவது ஒரு வேலையைச் செய்ய வேண்டும் என்பது ஒரு ஆசை. ஒரு நாள் திடீரென ரேடியோவில் ஆர்ஜே ஆகும் வாய்ப்பு கிடைத்து வேலைக்கச் சேர்ந்துவிடுகிறார். ஆனால், அவர் வேலைக்குப் போவது, கணவர் விதார்த், அக்காக்கள், அப்பா ஆகியோருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதற்குக் காரணம் அவர் ஆர்ஜே-வாக செய்யும் நிகழ்ச்சி. கொஞ்சம் அந்தரங்கம், கொஞ்சம் பிரச்சினைகளை அலசும் நிகழ்ச்சி. தன் குடும்பத்தாரின் நெருக்கடியில் இருந்து ஜோதிகா மீள்கிறாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஜோதிகா பழைய ஜோதிகாவாக இந்தப் படத்தில் திரும்பி வந்திருக்கிறார். அவருக்கே உரித்தான குறும்பு, வழக்கம் போல் கொஞ்சம் மிகையான நடிப்பு என விஜயலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தன்னை வேலைக்குப் போகக் கூடாது என்று சொல்லும் போதெல்லாம் வீறு கொண்டு எழுகிறார். அதில் வேலைக்குப் போகத் துடிக்கும் பல பெண்களின் கோபம் அடங்கியிருக்கிறது. மகனைக் காணாமல் அவர் தவிக்கும் தவிப்பில் நம்மையும் கண் கலங்க வைக்கிறார். இம்மாதிரியான கதாபாத்திரங்கள்தான் ஜோதிகாவிற்குத் தொடர்ச்சியாகத் தேவைப்படுபவை.
ஜோதிகாவின் கணவராக விதார்த். மனைவி வேலைக்குப் போய் தன்னை விட அதிகம் சம்பாதிக்கிறார் என்ற பொறாமையை விட, மனைவி நடத்தும் நிகழ்ச்சியால் அவமானப்பட்டு விடுவோமோ என்றுதான் அதிகம் தவிக்கிறார். ஜோதிகாவின் நடிப்பிற்கு முடிந்தவரையில் ஈடு கொடுக்கிறார்.
ஒரு சராசரி குடும்பத்துப் பெண் எப்படி இருப்பார் என்பதற்கு ஜோதிகாவின் கதாபாத்திரம் ஒரு உதாரணம். அது போலவே ஒரு மீடியா நிறுவனத்தில் உயர் அதிகாரியாக ஒரு பெண் இருந்தால் எப்படி இருப்பார் என்பதற்கு லட்சுமி மஞ்சு ஒரு உதாரணம். அவருடைய பேச்சு, உடல் மொழி, ஜோதிகாவின் திறமை மீது ஒரு மதிப்பு என அந்தக் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.
ராதாமோகன் படங்களில் தவறாமல் இருக்கும் குமரவேல் இந்தப் படத்திலும் இருக்கிறார். ஆனால், முந்தைய படங்களைக் காட்டிலும் இந்தப் படத்தில் அவருக்குத் தீனி குறைவுதான்.
மனோபாலா, மயில்சாமி இருவரின் கதாபாத்திரங்கள் இந்தப் படத்தின் தரத்தைக் குறைக்கின்றன. இரட்டை அர்த்த வசனம், பெண் மோகம் என இருவரின் கதாபாத்திரங்களும் அமைக்கப்பட்டிருப்பது இந்தப் படத்திற்குத் தேவையற்றது.
ஜோதிகாவின் அப்பாவும், அக்காக்களும் ஜோதிகா வீட்டிற்கு வந்தாலே நமக்கு ஒரு எரிச்சல் வருகிறது. பிளஸ் டு பெயிலான ஜோதிகா வேலைக்குப் போவதில் அவர்களுக்கு ஏன் அவ்வளவு கோபம் ?.
அறிமுக இசையமைப்பாளர் காஷிப் இசையில் பின்னணி இசை முதல் படம் போலவே தெரியவில்லை. காட்சிகளுக்கு நன்றாகவே உயிரூட்டியிருக்கிறார்.
‘மொழி’ அளவிற்கு இல்லை என்றாலும், ‘காற்றின் மொழி’யும் பேசப்படும்.
Tags: kaatrin mozhi