திமிரு புடிச்சவன் - விமர்சனம்
17 Nov 2018
தமிழ் சினிமா நடிகர்கள் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்த படங்கள் அவர்களுக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளன. அந்த வரிசையில் இந்த ‘திமிரு புடிச்சவன்’ விஜய் ஆண்டனிக்கு திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
அதிக ஹீரோயிசம் இல்லாத, அதே சமயம் கொஞ்சம் யதார்த்தமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர் விஜய் ஆண்டனி. அதே வரிசையில் இந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார்.
ஆனால், ஒரு மிகப் பெரிய ஹீரோவுக்கு வைக்க வேண்டிய ஒரு காட்சியை இயக்குனர் கணேஷா, விஜய் ஆண்டனிக்காக வைத்து, அதை நெகிழ்ச்சியான ஒரு காட்சியாகவும் அமைத்திருக்கிறார்.
9 கொலைகளை செய்த இளம் குற்றவாளியான தன் தம்பியை, என்கௌண்டர் செய்யும் போலீஸ் விஜய் ஆண்டனி, தம்பி பிணத்துடன் மார்ச்சுவரிக்குச் செல்ல, அங்கு டாக்டர் யார் இவர் என விஜய் ஆண்டனியிடம் கேட்க, என் தம்பி சார் என்கிறார். யாரு இப்படி நடுமண்டையில சுட்டது எனக் கேட்க, நான்தான் சார் என்று சொல்லும் காட்சி இதுவரை தமிழ் சினிமாவில் வராத ஒன்று. சினிமாவாக இருந்தாலும் இப்படி ஒரு காட்சி நிஜத்தில் நடந்தால் எப்படியிருக்கும் என்று நம்மை யோசிக்க வைக்கிறது.
தன் தம்பியைப் போன்றே பல இளம் குற்றவாளிகள், பெரிய தாதாவான தீனாவிடம் அடியாட்களாக இருப்பது விஜய் ஆண்டனிக்குத் தெரிய வருகிறது. அப்படிப்பட்டவர்களை மீட்டு, அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்க அவர் போராடுகிறார். அந்த போராட்டத்தில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. அப்படியே, லஞ்சம் வாங்கும் போலீசையும், நேர்மையற்ற போலீசையும் மாற்ற போராடுகிறார்.
தமிழ் சினிமாவில் லஞ்சம் வாங்கும் பெண் போலீசை இதுவரை காட்டியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். இந்தப் படத்தின் கதாநாயகி, சப்இன்ஸ்பெக்டர் நிவேதா பெத்துராஜ் தான் அந்த லஞ்சம் வாங்கும் பெண் போலீஸ். அலட்டிக் கொள்ளாமல் ஒரு தெனாவெட்டுடன் இயல்பாக நடித்திருக்கிறார். நாயகன் திமிர் பிடிச்சவன், நாயகி தெனாவெட்டு பிடிச்சவர் என்று கூட சொல்லிக் கொள்ளலாம்.
பெரிய வில்லன்களுக்கு அடியாளாக நடித்துக் கொண்டிருந்த தீனா, முதல் முறையாக மெயின் வில்லனாக நடித்திருக்கிறார். அடியாளாக நடித்தாலே மிரட்டுபவர், தனியாளாக வாய்ப்பு கிடைத்தால் விடுவாரா, திமிரு புடிச்சவனையே எதிர்க்க வேண்டும் என்றால் எவ்வளவு தில் வேண்டும், அது தீனாவிடம் வெளிப்படுகிறது.
இளம் குற்றவாளிகள் கதாபாத்திரங்களில் விஜய் ஆண்டனி தம்பியாக நடித்திருக்கும் ஜாக் ராபின் கொஞ்ச நேரமே வந்தாலும் அண்ணனுக்கு இருக்கும் திமிரில் பாதி அவரிடம் இருக்கிறது. மற்ற இளம் குற்றவாளிகளான நிக்சன், சாய் ராகுல், கிச்சா ஆகியோரும் அசால்ட்டாக நடித்திருக்கிறார்கள்.
திருநங்கைகளை கிண்டலாகவே காட்டிய தமிழ் சினிமாவில் முதல் முறையாக திருநங்கையான சிந்துஜாவை சப்இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கும் படம். திருநங்கைகளைப் பாராட்டும் வசனமும் படத்தில் உண்டு.
ரவுடி என்றாலே கெத்து, போலீஸ் என்றால் வெத்து என நினைக்கும் சிறுவர்கள் மனதில் போலீஸ் என்றால்தான் கெத்து என காவல் துறை உங்கள் நண்பன் என்ற கருத்தை வலியுறுத்தும் படம் என்பதற்காகவே இந்தப் படத்தைப் பாராட்டலாம்.
விஜய் ஆண்டனி இசையில், ‘வேலவா....’ பாடலின் வரிகளும், வாய்சும் மெய் சிலிர்க்க வைக்கிறது.
படத்தின் நாயகனும், நாயகியும் போலீஸ் என்பதால் படம் முழுவதுமே ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே நகர்வது போலிருக்கிறது. ஸ்டேஷன், கடைத் தெரு என வேறு எங்கும் திரைக்கதை நகராதது ஒரு குறை.
கமர்ஷியல் படமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு, அந்த வழியில் பயணித்திருக்கிறார்கள்.
திமிரு புடிச்சவன் - உங்கள் நண்பன்...
Tags: thimiru pudichavan