சண்டகோழி 2 - விமர்சனம்

18 Oct 2018
தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த படங்களில் சில மறக்க முடியாத படங்கள் என ஒரு பட்டியல் உண்டு. அந்தப் பட்டியலில் 2005ம் ஆண்டு வெளிவந்த ‘சண்டக்கோழி’ படத்திற்கும் உண்டு. சுமார் 13 வருடங்கள் கழித்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘சண்டக்கோழி 2’ இன்று வெளிவந்துள்ளது. அடுத்தடுத்த பாகப் படங்கள் என்றாலே முதல் பாகத்துடன் ஒப்பீடு இருப்பது வழக்கம். அந்த விதத்தில் இந்தப் படத்திற்கும் முதல் பாகத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் விறுவிறுப்பிலும், ஆக்ஷனிலும் குறையில்லை, ஆனால், மீரா ஜாஸ்மினின் துறுதுறுப்பு, லாலின் வில்லத்தனம் ஆகிய முதல் பாகத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் இரண்டாம் பாகத்தில் இல்லை. இருப்பினும் இந்த ‘சண்டக்கோழி 2’ படத்தை ஒரு பொழுதுபோக்குப் படமாக ரசிக்கலாம். முதல் பாகத்தில் வில்லன் கதைக்குள் நுழைவதும், அவரை நாயகன் எதிர்ப்பதும் மிகவும் யதார்த்தமாக இருக்கும். அது படத்திற்கு அவ்வளவு உயிரோட்டமாக இருந்தது. இந்தப் படத்தில் யாரை நாயகன் எதிர்க்கப் போகிறார் என்பது படத்தின் ஆரம்பத்திலேயே தெரிந்துவிடுவதால் அந்த உயிரோட்டம் கதையுடன் சேரவில்லை. இதைச் சரிக்கட்டி இருந்தால் இந்த ‘சண்டக்கோழி 2’ முதல் பாகத்தை விட டபுள் மடங்கு வெற்றியைக் கொடுக்கும். ஊர் திருவிழாவிற்காக வெளிநாட்டிலிருந்து ஏழு வருடம் கழித்து வருகிறார் விஷால். திருவிழாவிற்கான பஞ்சாயத்தில் அப்பாவை எதிர்த்துப் பேசியவனை எதிர்த்து அடிக்க நினைக்கிறார்.  அந்தத் திருவிழாவில் ஏழு வருடங்களுக்கு முன்பு தனது கணவனைக் கொலை செய்தவனின் வம்சத்தை அழித்து, அதில் மிச்சமிருக்கும் ஒருவரை தற்போது நடக்கும் திருவிழாவில் கொல்லத் துடிக்கிறார் வரலட்சுமி. வரலட்சுமி யாரைக் கொல்லத் துடிக்கிறாரோ அவர் விஷால் அப்பா ராஜ்கிரணின் ஆதரவில் இருக்கிறார். அந்தக் குடும்பத்து வம்சத்தைக் காப்பதறாக ராஜ்கிரண் வாக்கு கொடுத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் வரலட்சுமி நினைத்தது நடக்கிறதா, விஷால் குடும்பம் அவரைக் காக்கிறதா என்பதுதான் படத்தின் கதை. ‘சண்டக்கோழி’யாக பறந்து பறந்து அடிக்கிறார் விஷால். அவருடைய ஆக்ஷன் காட்சிகள் ஒவ்வொன்றும் அதிரடியாக அமைந்துள்ளன. இப்படிப்பட்ட கிராமத்து ஆக்ஷன் படங்கள் விஷாலுக்கு எப்போதுமே நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளன. அது இந்தப் படத்திலும் தொடரும். முதல் பாகத்தில் மீரா ஜாஸ்மின் செய்த மேஜிக்கை கீர்த்தி சுரேஷும் செய்ய முயற்சிக்கிறார். அவருக்கெனவும் ஒரு ரசிகர் கூட்டம் தயாராகிவிட்டது என்பது படத்தில் அவர் அறிமுகமாகும் காட்சியில் கிடைக்கும் கைத்தட்டலில் தெரிகிறது. மதுரை வட்டாரப் பேச்சைப் பேசி துறுதுறுப்பாகத்தான் நடித்திருக்கிறார் கீர்த்தி.  விஷாலை யார் என்று தெரியாமல் அவர் கிண்டல் செய்யும் காட்சிகள்தான் படத்தின் சுவாரசியமான காமெடிக் காட்சிகள். அதிலும் அவரது உயரத்தைப் பற்றி கிண்டலடிப்பது கிராமத்துக் குசும்பு. படம் வெளிவருவதற்கு முன்பு வரலட்சுமிதான் படத்தின் வில்லி என்றதும், ‘திமிரு’ ஈஸ்வரி மாதிரி இருக்குமோ என பலரும் சந்தேகப்பட்டார்கள். ஆனால், வரலட்சுமி அவருடைய உடல்மொழியிலும், திமிரான பார்வையிலும், ஷார்ப் ஆன வசனங்களிலும் பேச்சி ஆக எழுச்சி ஆக நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் பார்த்த அதே கம்பீரம், அதே பாசமான உணர்வுடன் ராஜ்கிரண். படத்தில் முதல் பாகத்தில் இருந்த தென்னவன், சண்முகராஜன், கஞ்சா கருப்பு ஆகியோரும் உண்டு. இன்னும் சில ஊர் பெரியவர்களும் இருக்கிறார்கள். 13 வருடங்களுக்குப் பிறகும் பலரும் இன்னும் அதே தோற்றத்தில் இருப்பது ஆச்சரியம். இரண்டாம் பாகத்தில் கூடுதலாக டிரைவர் ஆக முனிஷ்காந்த். யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. ‘கம்பத்துப் பொண்ணு, செங்கரட்டான் பாறையிலே...’ ஆட்டம் போட வைக்கின்றன. திருவிழாக் காட்சிகள் ‘செட்’ போடப்பட்டு படமாக்கப்பட்டுள்ளன. அவை நிஜ திருவிழாவைப் போன்ற வடிவமைக்கப்பட்டுள்ளன. சக்திவேல் ஒளிப்பதிவு படத்திற்குப் பெரிய பலம். இடைவேளை வரை படம் நகர்வதே தெரியவில்லை. இடைவேளைக்குப் பின் ராஜ்கிரண் அடிபட்டதும் படத்தின் வேகம் கொஞ்சம் குறைகிறது. கிளைமாக்சில் அதை ஈடு செய்து விடுகிறார்கள். சண்டக்கோழி 2 - சீற்றம்

Share via:

Movies Released On March 15