எழுமின் - விமர்சனம்

18 Oct 2018
இன்றைய உலகத்தில் பெற்றோர்கள் பலர் அவர்களது பிள்ளைகளை படிக்க மட்டுமே வைத்தால் போதும் என நினைக்கிறார்கள். நன்றாகப் படித்து நிறைய மார்க் வாங்கி அவர்கள் டாக்டர் ஆகவோ, இஞ்சினியர் ஆகவோ ஆக வேண்டும் என்பதுதான் அவர்களது குறிக்கோளாக இருக்கிறது. படிப்பைத் தவிர வாழ்க்கையில் வேறு எவற்றையும் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதைக் கூட அவர்கள் பிள்ளைகளின் மனதில் விதைப்பதில்லை. படிப்பு மட்டுமே வாழ்க்கையல்ல, அவற்றையும் மீறி விளையாட்டு உள்ளிட்ட கலைகள் உள்ளன என்பதை இன்றைய பெற்றோர்களுக்கு உணர்த்தும் ஒரு படம்தான் இந்த ‘எழுமின்’. இயக்குனர் வி.பி.விஜி இதை ஒரு இயல்பான கதையுடன் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். விவேக், தேவயானி தம்பதியருக்கு ஒரே ஒரு மகன். குத்துச் சண்டையில் வீரனாக இருக்கும் அந்தச் சிறுவன் ஒரு முக்கிய போட்டியில் வெற்றி பெற்று மகிழ்ச்சியாக இருக்கிறான். அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் போதே, அதிக உற்சாகத்தால் திடீர் மரணம் அடைகிறான். மகனுடன் வேறு வேறு விளையாட்டுக்களில் பயிற்சி பெற்று வரும் ஏழை சிறுவர், சிறுமியர் அவர்களது பயிற்சி அகாடமியில் பணம் செலுத்த முடியாமல் தவிக்கிறார்கள். இதனால், விவேக், தேவயானி தம்பதியர் சொந்தமாகவே ஒரு பயிற்சி அகாடமியை ஆரம்பிக்கிறார்கள். அவர்களை போட்டிகளில் வெற்றி பெற வைக்கக் கூடாது என விளையாட்டு சங்கத் தலைவர் அழகம் பெருமாள் அரசியல் செய்கிறார். அந்த அரசியலை மீறி சிறுவர்கள், சிறுமிகள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் கதை. பாசமான பெற்றோர்களாக விவேக், தேவயானி. பணக்காரர்களாக இருந்தாலும் ஏழை சிறுவர், சிறுமியர்கள் மீது பாசம் வைத்திருக்கும் குணமான பெற்றோர். இப்படிப்பட்டவர்கள் இந்த நாட்டில் அதிகம் இருந்தால் பணக்காரர், ஏழை என்ற வித்தியாசம் இன்றைய இளம் தலைமுறையிடம் இருக்கவே இருக்காது. தங்களது கதாபாத்திரங்களில் விவேக், தேவயானி இருவரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். படத்தில் தற்காப்புக் கலை தெரிந்த சிறுவர், சிறுமியர்களாக பிரவீண், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா. இவர்கள் பங்கு பெறும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை இன்றைய சில ஹீரோக்கள் கூட போட மாட்டார்கள். அவ்வளவு அற்புதமாக அந்த கிளைமாக்ஸ் காட்சியைப் படமாக்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கான பொருத்தமான தேர்வு இந்த சிறுவர், சிறுமியர்கள். கணேஷ் சந்திரசேகர் பாடல்களுக்கு இசையமைக்க, ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசையமைத்திருக்கிறார். இதுபோன்ற சிறிய பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்தால்தான் இப்படிப்பட்ட படங்கள் இன்னும் அதிகமாக வரும். உங்கள் வீட்டுப் பிள்ளைகளை இந்த விடுமுறைக்கு நீங்கள் அழைத்துக் கொண்டுச் செல்ல சரியான தேர்வு இந்த ‘எழுமின்’. எழுமின் - வீரம்

Share via:

Movies Released On March 15