வடசென்னை - விமர்சனம்

17 Oct 2018
தமிழ் சினிமாவில் வாழ்வியல் படங்கள் என்றாலே மதுரை, கோவை, நெல்லை ஆகிய வட்டாரப் படங்கள்தான் அதிகம் வரும். சென்னை என்று சொன்னாலே அது வடசென்னை பற்றிய படமாகத்தான் இருக்கும். தற்போதைய மத்திய சென்னை, தென் சென்னை ஆகியவை வடசென்னைக்குப் பிறகு உருவானவைதான். வடசென்னையை மையமாக வைத்து பல படங்கள் வந்துள்ளன. அவை கொலை, ரத்தம் என்று வன்முறை அதிகம் சார்ந்த திரைப்படங்களாக மட்டுமே இருந்தன. மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படங்கள், அவர்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் படங்கள் வந்தது குறைவுதான். இந்த ‘வடசென்னை’ படத்தை ஒரு வாழ்வியல் சார்ந்த படமாக, மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் படமாக இயக்குனர் வெற்றிமாறன் கொடுத்திருக்கிறார். ஆரம்பம் முதல் கடைசி வரை நாமும் வடசென்னைக்குள் நுழைந்துவிட்ட ஒரு உணர்வு ஏற்படுகிறது. முதல் பாதியில் சிறைச்சாலையும், அவர்கள் வசிக்கும் பகுதியும் எது செட், எது நிஜம் என்று தெரியாத அளவிற்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், கலை இயக்குனர் ஜாக்கி ஆகியோர் நம்மை அந்தப் பகுதிவாசியாகவே மாற்றிவிடுகிறார்கள். ஒரு வழக்கில் சிறைக்கு வருகிறார் தனுஷ். அவரை சிறைக்குள்ளிருக்கும் பவன் ஆட்கள் மிரட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். இதனால், பவனின் எதிர்கோஷ்டியான செந்தில் தயவு தனக்குக் கிடைத்தால் நல்லது என நினைக்கிறார் தனுஷ். கேரம் பிளேயரான தனுஷ், அதை வைத்தே கிஷோரை நெருங்கி நட்பு கொள்கிறார். சிறைக்குள் ஒரு நாள் நடக்கும் கேரம் போட்டியில் கிஷோரையே கொலை செய்ய முயற்சிக்கிறார். தனுஷால் குத்து வாங்கும் கிஷோர் நரம்பு பாதிக்கப்பட்டு பேசவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் பாதிக்கப்படுகிறார். தனுஷ் ஏன் கிஷோரைக் கொலை செய்ய முயற்சித்தார். அவர்களுக்குள் என்ன பகை என்பதுதான் படத்தின் மீதிக் கதை. கதையாகச் சொல்ல வேண்டும் என்றால் எப்படி வேண்டுமானாலும் யாரை வைத்து வேண்டுமானாலும் சொல்லலாம். அந்த அளவிற்கு படத்தில் உள்ள முக்கியக் கதாபாத்திரங்களுக்குள் கதையும், சம்பவங்களும் பின்னிப் பிணைந்திருக்கிறது. கிஷோர், சமுத்திரக்கனி, பவன் அனைவருமே கடத்தல் தொழில் செய்யும் அமீரிடம் வேலை பார்த்தவர்கள். ஒரு சந்தர்ப்பத்தில் அமீரால் அவமானப்படுத்தப்பட அவரைக் கொலை செய்து மூவருமே பெரிய ஆளாகிறார்கள். அந்தக் கொலையாலேயே கிஷோரும், சமுத்திரக்கனியும் பிரிகிறார்கள். பவன், சமுத்திரக்கனியின் நண்பர். இவர்களுக்கும் தனுஷுக்கும் என்ன சம்பந்தம் என்பதும் படத்தின் சஸ்பென்ஸ். அன்பு என்ற கதாபாத்திரத்தில் தனுஷ். தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதில் தனுஷ் எப்போதுமே தனிச் சிறப்புடன் இருப்பார். அது இந்தப் படத்தில் அதிகமாக இருக்கிறது. அப்படி என்றால் அவர் இந்தப் படத்தையும், அன்பு கதாபாத்திரத்தையும் எந்த அளவிற்கு நேசித்திருப்பார் என்று தெரிந்து கொள்ளலாம். இந்த முதல் பாகம் முழுவதும் அன்புவின் வளர்ச்சிதான் சொல்லப்பட்டிருக்கிறது, அன்புவின் எழுச்சியைப் பார்ப்பதற்கு இரண்டாம் பாகத்திற்காகக் காத்திருக்க வேண்டும். தாமதிக்காமல் சீக்கிரமே கொடுத்துவிடுங்கள். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் உருவாக்கிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். பத்மா கதாபாத்திரத்தில் பத்து மடங்கு உயர்ந்து தெரிகிறார். வாயைத் திறந்தால் அசிங்கமான கெட்ட வார்த்தைதான் வருகிறது. அதிலும் படத்தின் துவக்கத்தில் அவர் சொல்லும் அந்த கெட்ட வார்த்தை சென்சாருக்கு எப்படி தப்பித்ததோ தெரியவில்லை. பாவாடை சட்டை, பாவாடை தாவணி, புடவை என ஐஸ்வர்யாவிற்கும் படத்தில் வளர்ச்சி உண்டு. ஆன்ட்ரியாவை தமிழ் சினிமா அவ்வப்போது இப்படி பயன்படுத்திக் கொள்கிறதே என மகிழ்ச்சிதான். மேற்கத்திய பாணி நடிகையை வடசென்னைவாசியாகவே மாற்றிவிட்டார்கள். கணவனைப் பறி கொடுத்த ஆத்திரத்தை அவர் வெளிப்படுத்தும் விதம் மிரட்டல். இரண்டாம் பாகத்தில் ஆன்ட்ரியாவின் ஆவேசத்தை இன்னும் எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது. கிஷோர், சமுத்திரக்கனி படத்தில் மட்டும் போட்டியாளர்கள் இல்லை, நடிப்பிலும் போட்டி போடுகிறார்கள். இவர்களுடன் கூடவே டேனியல் பாலாஜி, பவன், சுப்பிரமணிய சிவா, ராதாரவி என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கான தேர்வும், அதில் அவர்களது நடிப்பும் அவ்வளவு யதார்த்தம். சந்தோஷ் நாராயணன் இசையில் பின்னணி இசை படத்திற்கு தனி பலம். சென்னை வாசம் வீசும் கானா பாடல்கள் படத்தில் ஸ்பெஷல். கொஞ்சமாக வருவது மட்டும்தான் குறை. சிறைச்சாலை, குப்பம் என இரண்டு இடங்களில்தான் படத்தின் கதை பெரும்பாலும் நகர்கிறது. தனித் தனியாக ஒவ்வொரு கதாபாத்திரம் உருவாக்கப்பட்ட விதம், அவற்றின் பின்னணி, அவற்றுக்கான சம்பந்தம் ஆகியவை திரைக்கதையில் அருமையான கோர்வையாக இணைக்கப்பட்டிருக்கிறது. வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்ட ஒரு சினிமாவாக இந்த ‘வடசென்னை’ தெரிகிறது. ரசிகர்களுக்கான படம் என்று சொல்வதைவிட ரசனைக்கான படம் என ‘வடசென்னை’ படத்தைக் கொண்டாடலாம். வடசென்னை - வரவேற்பு

Share via:

Movies Released On March 15