சக்தித் திருமகன் - விமர்சனம்
20 Sep 2025
விஜய் ஆண்டனியின் நடிப்பில், இயக்குனர் அருண் பிரபுவின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள சக்தித் திருமகன், வெறும் ஒரு சினிமா அல்ல; இது தற்கால அரசியல் சூழ்நிலைகளையும், ஜனநாயகத்தின் பெயரால் நடக்கும் ரகசிய பேரங்களையும் அப்பட்டமாகப் பதிவு செய்யும் ஒரு கண்ணாடியாக உள்ளது.
தலைமைச் செயலகத்தில் ஒரு இடைத்தரகராகச் செயல்படும் விஜய் ஆண்டனி, பணத்தைக் கொடுத்தால் எந்த ஒரு காரியத்தையும் கச்சிதமாக முடித்துக்கொடுக்கும் திறமைசாலி. அவரது பெயர் வெளியில் தெரியாமல், பெரிய பெரிய காரியங்களை சாதிக்கும் இந்த 'கிட்டு'வின் திறமையைக் கேள்விப்படும் சர்வதேச வில்லன் சுனில் கிர்பலானி, கிட்டுவின் வாழ்க்கையை அபகரித்து அவரை அழிக்க நினைக்கிறார். இந்த நெருக்கடியிலிருந்து கிட்டு எப்படித் தப்பிக்கிறார்? அவரது பின்னணி என்ன? என்பதே இந்தப் படத்தின் கதை. சமகால அரசியலையும், பணக்காரர்களுக்காக அரசு எப்படிச் செயல்படுகிறது என்பதையும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இந்தப் படம் காட்சிப்படுத்துகிறது.
விஜய் ஆண்டனியின் தேர்ந்த நடிப்பில், அவரது கதாபாத்திரம் பெரும் பலம் பெறுகிறது. வெறும் பார்வை மூலமாகவே தனது திட்டங்களையும், சிந்தனைகளையும் வெளிப்படுத்தும் அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல், அவர் செய்யும் ஒவ்வொரு காரியமும், யோசிக்கும் ஒவ்வொரு திட்டமும் அவரது கதாபாத்திரத்திற்கு ஒரு நம்பகத்தன்மையை கொடுக்கிறது.
வில்லனாக வரும் சுனில் கிர்பலானி, தனது திமிரான பேச்சும், உடல்மொழியும் மூலம் தனது கதாபாத்திரத்தை அழுத்தமாகப் பதிவு செய்கிறார். அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் மற்றும் வணிகப் பின்னணி, இன்றைய சூழலுடன் ஒத்துப் போவது கவனிக்கத்தக்கது. நாயகி திருப்தி ரவீந்திராவிற்கு பெரிய வேலையில்லை என்றாலும், தனக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்துள்ளார். மற்ற துணை நடிகர்களான செல் முருகன், கிரண் குமார், வாகை சந்திரசேகர் உள்ளிட்டோரின் நடிப்பும் கச்சிதம்.
ஷெல்லி ஆர்.கேலிஸ்ட்-இன் ஒளிப்பதிவு, படத்திற்கு தேவையான மனநிலையை துல்லியமாகப் பதிவு செய்துள்ளது. விஜய் ஆண்டனியின் இசை, பாடல்களும் பின்னணி இசையும் கதையின் போக்கிற்கு ஏற்றவாறு உள்ளது. ரேய்மெண்ட் டெரிக் க்ரஸ்ட்டா மற்றும் தினேஷ் ஆகியோரின் படத்தொகுப்பு படத்தின் முதல் பாதிக்கு வேகத்தையும், விறுவிறுப்பையும் கொடுத்து, பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கிறது.
எழுதி இயக்கியுள்ள அருண் பிரபு, சமகால அரசியல் மற்றும் அதன் பின்னால் உள்ள வணிகத்தை வெளிப்படையாகப் பேசுகிறார். பால் விலை உயர்வு முதல் தோசை மாவுக்கு ஜி.எஸ்.டி. வரை, சாதாரண மக்களைப் பாதிக்கும் அரசுத் திட்டங்கள் எப்படிப் பெரும் முதலாளிகளுக்கு லாபத்தை ஈட்டித் தருகின்றன என்பதை அவர் தைரியமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். படத்தின் வசனங்கள், தமிழக மற்றும் இந்திய அரசியலை குறியீடுகள் மூலம் அழுத்தமாகப் பதிவு செய்து, பார்வையாளர்களை சிந்திக்க வைக்கின்றன. முதல் பாதியின் அதிரடி வேகம், இரண்டாம் பாதியில் சற்றுக் குறைவது ஒரு சிறிய பின்னடைவாகத் தோன்றினாலும், விஜய் ஆண்டனியின் திட்டங்களும், அதை செயல்படுத்தும் விதமும் அந்தத் தொய்வை ஈடு செய்து, மீண்டும் கதையுடன் நம்மை பயணிக்க வைக்கிறது.
மொத்தத்தில், சக்தித் திருமகன் என்பது பொழுதுபோக்கிற்கு அப்பாற்பட்டு, மக்களின் வாழ்வாதாரங்களைப் பறிக்கும் அரசாங்கத்திற்கு எதிராக கேள்விகளைக் கேட்கத் தூண்டும் ஒரு முக்கியமான திரைப்படம். இதை ஒரு அரசியல் பாடம் என்றுகூட சொல்லலாம்.
Tags: Sakthi Thirumagan, Vijay Antony