சபாநாயகன் - விமர்சனம்

23 Dec 2023

சிஎஸ் கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மேகா ஆகாஷ், அருண் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

காதலிக்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு இளைஞனின் கதை. அவனது வாழ்க்கையில் வந்து போன காதல்களைப் பற்றி ஒரு ‘ஆட்டோகிராப்’ சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

பள்ளி நாட்களிலிருந்தே சபா என அழைக்கப்படும் அரவிந்த் ஆக அசோக் செல்வன். அவருக்கு பள்ளியில் ஒரு காதல், இஞ்சினியரிங் கல்லூரியில் ஒரு காதல், வேலைக்குத் தேட முயற்சிக்கும் போது மீண்டும் ஒரு பழைய காதல் என வந்து போகிறது. இதில் எந்தக் காதலாவது அவருக்கு கை கூடியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

பள்ளி மாணவனாக நடித்ததைத் தவிர மற்ற காட்சிகள் அனைத்திலும் அசோக் செல்வன் அதிரடியாக ஸ்கோர் செய்கிறார். அவருக்கு நகைச்சுவை இயல்பாகவே வருகிறது. தனக்குப் பிடித்துப் போன பெண்களிடம் அவர் பழகத் துடிப்பதும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிப்பதிலும் அசத்துகிறார்.

கதாநாயகிகளாக நடித்திருப்பவர்கள் புதுமுகங்கள். அசோக்கின் பள்ளி காலத்து காதலியாக கார்த்திகா முரளிதரன், இஞ்சினயரிங் காலத்து காதலியாக சாந்தினி சௌத்ரி, எம்பிஎ காலத்து காதலியாக மேகா ஆகாஷ், அக்காவாக விவியசந்த் என நான்கு பெண் கதாபாத்திரங்களும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள். அனைவரிடத்திலும் கதாபாத்திரத்துக்குரிய இயல்பான நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது.

காதல் கதை என்றால் நண்பர்கள் இல்லாமலா, அசோக்கின் நெருங்கிய நண்பனாக அருண். பல காட்சிகளில் கலகலப்பூட்டுகிறார். இன்னும் சில நண்பர்களும் இருக்கிறார்கள்.

லியோன் ஜேம்ஸ் பின்னணி இசை, பாலசுப்பிரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஒளிப்பதிவு இயக்குனரின் நண்பர்களாக உடனிருந்து உதவி செய்திருக்கிறார்கள்.

‘ஆட்டோகிராப், அட்டகத்தி, 96’ படங்கள் ஞாபகம் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை. படத்தின் நீளம் மிக அதிகம், சில காட்சிகள் எப்போது முடியும் என தவிக்க வைக்கிறது. இந்தக் குறைகளை சரி செய்திருந்தால் ‘சபாநாயகன்’, ‘சபாஷ் நாயகன்’ என இன்னும் ரசிக்கப்பட்டிருப்பார்,

Tags: sabanayagan, ashok selvan

Share via: