ஜிகிரி தோஸ்த் - விமர்சனம்

24 Dec 2023

அறன் இயக்கத்தில், அஷ்வின் விநாயகமூர்த்தி இசையமைப்பில், அறன், ஷாரிக் ஹாசன், ஆஷிக், அம்மு அபிராமி, பவித்ர லட்சுமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

 

படத்தின் தலைப்பே இது நண்பர்களைப் பற்றிய ஒரு படம் என்பதைப் புரிய வைத்துவிடும். அறன் இஞ்சினியரிங் கல்லூரியில் படிப்பவர், அவருடைய நெருங்கிய நண்பர்கள் ஷாரிக், ஆணிக். கல்லூரி புராஜக்ட்டுக்காக ‘போன் ரெக்கார்டிங் சாப்ட்வேர்’ ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அதன் மூலம் 500 மீ சுற்றளவில் பேசப்படும் தொலைபேசி அழைப்புகளைப் பதிவு செய்யலாம். ஆனால், கல்லூரியில் அதைச் செய்து காட்டும் போது தோல்வியடைகிறது. பின்னர், நண்பர்களுடன் சேர்ந்து மகாபலிபுரம் செல்கிறார். வழியில் அதை யதேச்சையாக செய்து பார்க்கும் போது வேலை செய்கிறது. அப்போது ஒரு இளம் பெண் கடத்தப்பட்டுள்ளதைப் பற்றி ஒரு தொலைபேசி அழைப்பில் தெரிந்து கொள்கிறார்கள். அந்தப் பெண்ணைக் காப்பாற்றவும் முயற்சிக்கிறார்கள். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

 

த்ரில்லர் படமாகவும், காமெடி படமாகவும் சேர்ந்து கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் அறன். ஒரு வரிக் கதையாகப் பார்த்தால் சிறப்பான கதை. இருப்பினும் அதைக் கொடுத்த விதத்தில் மேக்கிங்கில் சிறப்பாகச் செய்திருக்கலாம். ஒரு சிலர் தவிர மற்றவர்களின் நடிப்பும் படத்திற்கு பலமாய் அமையவில்லை.

 

அறன், ஷாரிக் பொறுமையாக நடிக்க, ஆஷிக் அதிகம் பேசி பொறுமையை சோதிக்கிறார். நண்பர்களாக அவ்வப்போது செல்லச் சண்டை போட்டுக் கொண்டாலும், கடத்தப்பட்ட இளம் பெண்ணான பவித்ர லட்சுமியைக் காப்பாற்ற பெரும் முயற்சி செய்கிறார்கள். 

 

அம்மு அபிராமி, பவித்ர லட்சுமி ஆகியோர் சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார்கள். வில்லனாக நடித்திருக்கும் சிவம் மட்டும் அவருடைய கதாபாத்திரத்தில் கொஞ்சம் மிரட்டுகிறார். 

 

ஒரு பார்ம் அவுஸ், அதன் பக்கத்தில் தோப்பில் ஒரு இடம் என அவற்றைச் சுற்றியே மொத்த படமும் நகர்கிறது. 

இரண்டு மணி நேரப் படமாக இருந்தாலும் அதை பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சொல்வதற்கு இன்னும் முயற்சிக்க வேண்டும்.

Tags: jigiri dhosthu

Share via: