ஆயிரம் பொற்காசுகள் - விமர்சனம்

23 Dec 2023

ரவி முருகையா இயக்கத்தில், ஜோஹன் இசையமைப்பில், விதார்த், சரவணன், அருந்ததி நாயர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.


இந்த ஆண்டில் வெளிவந்த சில யதார்த்தமான, அருமையான கிராமத்துக் கதைப் படங்களில் இந்தப் படத்தையும் சேர்த்தே ஆக வேண்டும். ஒரு கிராமத்திற்குள் நுழைந்து அங்கு நடக்கும் சம்பவங்களை நேரடியாகப் பார்ப்பது போன்ற ஒரு அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

 

தஞ்சாவூர் அருகில் திருமணமே செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருபவர் சரவணன். அவரது தங்கை மகனான விதார்த் அவரது வீட்டிற்கு வருகிறார். மத்திய அரசின் கழிவறை திட்டம் மூலம் கழிவறை கட்டாமலேயே கழிவறை கட்டியதாக ஏமாற்றி பணத்தை வாங்கிக் கொள்கிறார் சரவணன். அது தெரிந்த ஊர் தலைவர் அவர் கழிவறை கட்டியே ஆக வேண்டும் என சொல்லிவிடுகிறார். அதற்காக சரவணனும், விதார்த்தும் அவர்களது வீட்டில் பள்ளம் தோண்டிய போது ஆயிரம் பொற்காசுகள் புதையலாகக் கிடைக்கிறது. அதை யாருக்கும் தெரியாமல் மறைத்து பணமாக்கி அனுபவிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இருந்தாலும் அந்த புதையல் பற்றிய தகவல் சிலருக்குத் தெரிய ஆரம்பிக்கிறது. இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

 

விதார்த், சரவணன் இருவருமே படம் முழுவதும் கூட்டணி அமைத்து கலகலப்பூட்டுகிறார்கள். கிராமங்களில் வசிப்பவர்களிடம் எப்போதுமே ஒரு குசும்புத்தனம் இருக்கும். இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து கதாபாத்திரங்களிடமும் அது இருக்கிறது. அப்படிப்பட்டவர்களையும் ஏமாற்ற வேண்டும் என விதார்த், சரவணன் இருவரும் திட்டம் போட்டு ஏமாந்து போவதெல்லாம் நகைச்சுவையில் வேறு ரகம்.

 

படத்தில் காதல் இருந்தால்தான் ஒரு சுவாரசியம் இருக்கும் என விதார்த்துக்கு அந்த ஊரில் ஒரு காதலி என அருந்ததி நாயர் கதாபாத்திரத்தை சேர்த்திருக்கிறார்கள். இருவரது காதலில் கூட காமெடியைத்தான் அதிகம் வைத்திருக்கிறார் இயக்குனர். இருவரும் ஊரைவிட்டு ஓட அடிக்கடி திட்டம் போடு, பின்னர் அது முடியாமல் திரும்புவதெல்லாம் சுவாரசியம்.

 

ஹலோ கந்தசாமி போல ஒரு எதிர்வீட்டுக்காரர் நமக்கு அமைந்தால் நமது மொத்த சுதந்திரமும் பறி போவது உறுதி. ஊர் தலைவர், பாம்பு பிடிக்க வந்தவர், இன்ஸ்பெக்டர், பள்ளம் தோண்ட வந்தவர்கள், நகையை உருக்க வந்தவர் என இன்னும் சில கதாபாத்திரங்களும், அதில் நடித்தவர்களும் அவரவர் பங்கிற்கு கலகலப்பூட்டி இருக்கிறார்கள்.

 

இந்த மாதிரியான படங்களில் கதையும், காட்சிகளும், வசனங்களும், நடிப்பும் நம்மை ரசிக்க வைத்துவிட்டால் போதும், மற்ற எதைப் பற்றியும் பெரிதாக கவனிக்க மாட்டோம். இசையும், ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் இயக்குனருக்கான ஓட்டத்துடன் சேர்ந்து ஓடியிருக்கிறது.

 

இப்படிப்பட்ட சிறிய படங்களுக்கு ரசிகர்களின் ஆதரவும், தியேட்டர்காரர்களின் ஆதரவும் கண்டிப்பாகத் தேவை.

Tags: aayiram porkasugal

Share via: