டங்கி - விமர்சனம்

22 Dec 2023

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், பிரிதம், அமன் பன்ட் இசையில், ஷாரூக்கான், டாப்சீ மற்றும் பலர் நடித்திருக்கும் ஹிந்தித் திரைப்படம்.

இந்த 2023ம் ஆண்டில் ‘பதான், ஜவான்’ என இரண்டு அதிரடியான ஆக்ஷன் படங்கள் மூலம் 2000 கோடிக்கும் அதிகமான வசூலைக் கொடுத்த ஷாரூக்கான் இப்படி ஒரு ‘சாப்ட்’ ஆன படத்தில் நடிப்பார் என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

‘முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே’ என தமிழ் ரசிகர்களும் ரசித்த ஹிந்திப் படங்களைக் கொடுத்த ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள படம் இது. முந்தைய படங்களுடன் ஒப்பிடும் போது சற்றே ஏமாற்றமாக இருந்தாலும் ஒரு உணர்வுபூர்வமான கதையுடன் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

ராணுவத்தில் பணியாற்றிய போது தனது உயிரைக் காப்பாற்றி ஒரு வீரருக்கு நன்றி சொல்ல வேண்டும் எனத் தேடி அவரது ஊருக்குப் போகிறார். அங்கு அந்த வீரர் ஏற்கெனவே மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கிடைக்கிறது. அந்த வீரரின் குடும்பம் கடனில் சிக்கித் தவிப்பதையும், அதை அடைக்க அந்த வீரரரின் தங்கையான டாப்சீ முயற்சிப்பதையும் பார்க்கிறார் ஷாரூக். டாப்சீக்கு லண்டன் சென்று வேலை செய்து தனது குடும்பக் கடனை அடைக்க ஆசை. அதற்கான தேர்வு எழுதத் தயாராகிறார். ஷாரூக்கும் அந்த ஊரிலேயே தங்கி டாப்சீக்கு உதவி செய்கிறார். ஆனால், தேர்வில் டாப்சீ, ஷாரூக், அவர்களது நண்பர்கள் தோல்வியடைகிறார்கள். எனவே, வேறு வழியில்லாமல் திருட்டுத்தனமாக அவர்களை லண்டன் அழைத்துசெல்கிறேன் என சொல்கிறார் ஷாரூக். அவர்கள் அப்படி சென்றார்களா, அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

1995ல் நடக்கும் கதையாகவும், நிகழ் காலத்தில் நடக்கும் கதையாகவும் படம் அமைந்துள்ளது. ஹிரானியின் படங்களில் படம் முழுவதுமே ஒரு நகைச்சுவை இழையோடும், இந்தப் படத்தில் ஆங்காங்கே வந்து போகிறது.

காதலும், காமெடியும் கலந்த கதாபாத்திரம் என்றால் ஷாரூக்கிடம் ஒரு உற்சாகம் தானாக வந்துவிடும். அது இந்தப் படத்திலும் இருக்கிறது. அவருக்கென ஒரே ஒரு ஆக்ஷன் காட்சியைத் தவிர வேறு எதுவும் இல்லாதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும்.

மன்னு கதாபாத்திரத்தில் தனக்கு நடிக்கக் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் டாப்சீ. ஷாரூக்கின் ஜோடி வேறு. அதனால், நன்றாக நடிக்க வேண்டும் என்ற உத்வேகம் காட்சிக்குக் காட்சி அவரிடம் வெளிப்பட்டுள்ளது.

டாப்சீயின் நண்பர்களாக நடித்திருப்பவர்களும் பொருத்தமான தேர்வு. விக்கி கௌசல் சிறப்புத் தோற்றத்தில் வந்து கலங்க வைத்துவிடுகிறார்.

இந்தியா முதல் லண்டன் வரையிலான பயணம், லண்டன், பஞ்சாப் என பல களங்களில் நகரும் கதையில் படத்திற்கான ஒளிப்பதிவு குறிப்பிட வேண்டிய ஒன்று. அமன் பன்ட்டின் பின்னணி இசையும் தனித்துவமாய் அமைந்துள்ளது.

உணர்வுபூர்வமான படங்களை விரும்பும் ரசிகர்களுக்கான படம் ‘டங்கி’.

Tags: dunki,

Share via: