சாவீ - விமர்சனம்

05 Dec 2025
தமிழ் சினிமாவில் பிளாக் காமெடி ஜானர் அவ்வளவு பிரபலமானதல்ல என்றாலும், அவ்வப்போது வரும் சில படங்கள் பார்வையாளர்களை சிரிக்க வைத்து சிந்திக்கவும் தூண்டுகின்றன. 'சாவீ' என்ற இந்தப் படம், சாவு வீட்டைச் சுற்றிய ஒரு மர்மத்தை அடிப்படையாகக் கொண்டு, குடும்ப உறவுகள், பழி வாங்கல், போதைப் பழக்கம் போன்ற சமூகப் பிரச்சினைகளை நகைச்சுவையுடன் கலந்து வழங்குகிறது. இயக்குநர் ஆண்டனி அஜித் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம், சிறிய பட்ஜெட்டில் உருவான போதிலும், திரைக்கதையின் திருப்பங்களால் கவனம் ஈர்க்கிறது. இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லராகத் தொடங்கி, பிளாக் காமெடியாக மாறி, இறுதியில் ஒரு அழுத்தமான செய்தியுடன் முடிகிறது.

நாயகன் உதய தீப், தனது தந்தையின் மரணத்துக்கு இரண்டு மாமன்களே காரணம் என நம்பி, அவர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். அதே நேரம், ஒரு மாமனின் மகளை காதலிக்கவும் செய்கிறார். இந்நிலையில், ஒரு மாமன் விபத்தில் உயிரிழக்க, துக்க வீட்டில் அனைவரும் அசதியில் தூங்கிவிடுகின்றனர். அப்போது பிணம் திடீரென காணாமல் போகிறது. இந்த மர்மத்தை விசாரிக்க காவல்துறை களமிறங்க, குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடக்கிறது. இதற்கிடையே, மற்றொரு மாமனும் மரணமடைகிறார். இந்தத் தொடர் மரணங்களுக்குப் பின்னால் உள்ள உண்மை என்ன, காணாமல் போன பிணம் எங்கே போனது என்பதை பிளாக் காமெடி ஸ்டைலில் சொல்வதே 'சாவீ'யின் கதை.

'சாவு வீடு' என்ற அசல் தலைப்பை 'சாவீ' என மாற்றியிருப்பது சற்று விந்தையாகத் தோன்றினாலும், படத்தின் கதைக்கும் புதிய தலைப்புக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்பது போல் தான், இயக்குநரின் நோக்கம் ஆரம்பத்தில் புரியாத புதிராக இருக்கிறது. ஆனால், இறுதியில் ஒரு நல்ல செய்தியுடன் முடிவடைவது பாராட்டத்தக்கது. பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் முயற்சியும் குறிப்பிடத்தக்கது.

நாயகனாக உதய தீப், தனது வயதுக்கேற்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். கடினமான சூழல்களை அசால்ட்டாகக் கடந்து செல்லும் இளைஞனின் பருவத்தை பக்குவமாகக் கையாண்டு, நகைச்சுவை தருணங்களில் சிரிக்க வைக்கிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக ஆதேஷ் பாலா, விசாரணை என்ற பெயரில் அடிக்கும் லூட்டிகள் அனைத்தும் ரசிக்கும்படி இருக்கின்றன. அவரது நடிப்பு படத்துக்கு கூடுதல் ஈர்ப்பு சேர்க்கிறது.

யாசர், மாஸ்டர் விஜய், கவிதா சுரேஷ், பிரேம் கே. சேஷாத்ரி உள்ளிட்ட மற்ற நடிகர்கள், தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வுகளாக இருக்கின்றனர். அவர்களின் நடிப்பு படத்தின் ஓட்டத்தை சீராக வைத்திருக்கிறது.

இசையமைப்பாளர்கள் சரண் ராகவன் மற்றும் விஜே ரகுராம் ஆகியோரின் பின்னணி இசை, காட்சிகளுக்கு ஏற்ற அளவில் அமைந்துள்ளது. அதிகம் திணிக்காமல், தேவையான இடங்களில் உணர்ச்சியைத் தூண்டுகிறது.

ஒளிப்பதிவாளர் பூபதி வெங்கடாச்சலம், குறைந்த விளக்குகளைப் பயன்படுத்தி காட்சிகளைப் படமாக்கியிருந்தாலும், எளிமை மற்றும் இயல்புத்தன்மையுடன் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார். இருண்ட சூழல்களை திறம்பட காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

படத்தொகுப்பாளர்கள் சுந்தர்.எஸ் மற்றும் ராகேஷ் லெனின் ஆகியோரின் வேலைப்பாடு குறையில்லாமல் இருக்கிறது. திருப்பங்கள் வரும் இடங்களில் எடிட்டிங் கச்சிதமாக உள்ளது.

எழுத்து மற்றும் இயக்கத்தில் ஆண்டனி அஜித், ஒரு சிறிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சஸ்பென்ஸ் திரில்லரை பிளாக் காமெடியாக மாற்றியிருக்கிறார். காணாமல் போன பிணம் கிடைத்ததா இல்லையா என்பதைச் சுற்றி கதையை நகர்த்தி, பார்வையாளர்களை சிரிக்க வைப்பதோடு, சமூகத்தில் பெரும் பிரச்சினையாக உள்ள போதை கலாச்சாரத்தின் ஆபத்துகளை திரை மொழியில் சொல்லி இளைஞர்களை சிந்திக்க வைத்திருப்பது பாராட்டுக்குரியது.

Tags: saavee

Share via: