ரெட் ஃபிளவர் - விமர்சனம்
09 Aug 2025
2047-ல், மூன்றாம் உலகப் போருக்குப் பிறகு, மால்கம் டைனஸ்டி என்ற அமைப்பு உலகின் பல நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்தியாவையும் ஆதிக்கம் செய்ய முயலும் இந்த அமைப்பு, பெரும் வரி செலுத்த வேண்டும் என உத்தரவிடுகிறது. இதற்கு இந்தியப் பிரதமராக இருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் மறுப்பு தெரிவிக்க, மால்கம் டெய்னாஸ்டியின் போர் குற்றவாளி தலைவாசல் விஜய் இந்தியாவின் மீது போர் தொடுக்கவும், உலகெங்கும் வாழும் இந்தியர்களைக் கொல்லவும் திட்டமிடுகிறார். இதை எதிர்கொள்ள, இந்திய உளவுத்துறையைச் சேர்ந்த சீக்ரெட் ஏஜென்ட் விக்னேஷ், ‘ரெட் பிளவர்’ என்ற ரகசிய ஆபரேசன் மூலம் நாட்டையும் மக்களையும் காக்க முயல்கிறார். இந்த ஆபரேசன் வெற்றி பெற்றதா? இந்தியாவின் விதி என்னவானது? என்பதே படத்தின் மையக் கதை.
நாயகனாக விக்னேஷ், இரட்டை வேடங்களில் (அண்ணன் மற்றும் தம்பி) நடித்திருக்கிறார். அண்ணனாக நாட்டுப்பற்று கொண்ட உளவு அதிகாரியாகவும், தம்பியாக எதிர்மறை கதாபாத்திரமாகவும் முயற்சித்திருக்கிறார். ஆனால், அவரது நடிப்பு பெரும்பாலும் முகபாவனைகள் இல்லாமல், பொம்மைத்தனமாக இருப்பது ஏமாற்றமளிக்கிறது. தம்பி கதாபாத்திரத்தில் சற்று மிரட்டினாலும், ஒட்டுமொத்தமாக கதைக்கு பொருத்தமாக இல்லை.
கதாநாயகி மனிஷா ஜஷ்னானி, கவர்ச்சியான தோற்றத்தால் கவனம் ஈர்க்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகளில் அவரது நடிப்பு பாராட்டுக்குரியது. வில்லனாக தலைவாசல் விஜய், ஸ்டைலிஷ் தோற்றத்துடன் மிரட்டுகிறார். ஒய்.ஜி.மகேந்திரன், நாசர், ஜான் விஜய், யோக் ஜாபி ஆகியோர் தங்கள் பங்களிப்பை திறம்பட செய்தாலும், அவர்களுக்கு கதையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இல்லை.
சந்தோஷ் ராமின் இசை, பாடல்களாகவும் பின்னணி இசையாகவும் கேட்கும் வகையில் அமைந்துள்ளது, ஆனால் கதையுடன் முழுமையாக ஒன்றவில்லை. தேவ சூர்யாவின் ஒளிப்பதிவு, அதிக வெளிச்சத்துடன் காட்சிகளை பிரகாசமாக்குகிறது, ஆனால் கிராபிக்ஸ் தரம் மற்றும் டோன் சீராக இல்லை, இது பார்வையாளர்களுக்கு அந்நியமாக உணர வைக்கிறது.
இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன், 2047-ல் இந்தியாவை மையப்படுத்தி ஒரு புதுமையான சயின்ஸ்-பிக்ஷன் ஆக்ஷன் கதையை உருவாக்க முயற்சித்திருக்கிறார். இரட்டை சகோதரர்களின் மோதல், தேசபக்தி, மற்றும் சர்வதேச அரசியல் ஆகியவற்றை இணைத்து, ஹாலிவுட் பாணியில் படத்தை எடுக்க விரும்பிய அவரது முயற்சி பாராட்டுக்குரியது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய ரெட் பிளவர் அமைப்பு மற்றும் தேசபக்தி குறித்த காட்சிகள் படத்தில் முக்கிய தருணங்களாக உள்ளன. புதுமையான சயின்ஸ்-பிக்ஷன் கரு மற்றும் ஹாலிவுட் பாணி முயற்சி. தலைவாசல் விஜய் மற்றும் மனிஷாவின் கிளைமாக்ஸ் நடிப்பு. இசையும் ஒளிப்பதிவும் ஆங்காங்கே ஈர்க்கின்றன. ஆனால், திரைக்கதை தெளிவின்மையாலும், துண்டுதுண்டாக காட்சிகள் நகர்வதும் படத்தை பலவீனமடைய வைக்கிறது. காட்சிகள் வீடியோ கேம் போல் தோன்றுவதும், துப்பாக்கிச் சூடுகள் மற்றும் வன்முறைக் காட்சிகள் தேவையின்றி நீளுவதும் பார்வையாளர்களை குழப்புகிறது. காட்சிக்குக் காட்சி யாராவது கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
‘ரெட் பிளவர்’ தமிழ் சினிமாவில் ஒரு புதிய சயின்ஸ்-பிக்ஷன் முயற்சியாக உயர்ந்து நிற்க வேண்டிய திறன் கொண்டிருந்தாலும், திரைக்கதையின் பலவீனங்களும், தொழில்நுட்ப தரத்தில் உள்ள குறைபாடுகளும் படத்தை ஒரு சராசரி அனுபவமாக்குகின்றன. தேசபக்தியை அதிகம் பேச வைத்திருக்கிறது. தொடர்ச்சியான திரைக்கதை இருந்திருந்தால் இன்னும் ஈர்த்திருக்கும்.
Tags: red flower