ராஜா மகள் – விமர்சனம்
19 Mar 2023
ஹென்றி இயக்கத்தில், சங்கர் ரங்கராஜன் இசையமைப்பில், முருகதாஸ், வெலினா, பேபி பிரதிக்ஷா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
செல்போன் ரிப்பேர் கடை வைத்திருப்பவர் முருகதாஸ். மனைவி சாந்தினி, மகள் பிரதிக்ஷா என எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். வாடகை வீட்டில் இருக்கும் முருகதாஸை, சொந்தமாக ஒரு வீடு வாங்கித் தரும்படி மகள் பிரதிக்ஷா கேட்கிறார். மகள் மீது அதிகப் பாசம் வைத்திருக்கும் முருகதாஸ், தனது சக்தியை மீறி மகள் ஆசையை நிறைவேற்ற முயற்சிக்கிறார். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தின் சிக்கல்களை படத்தில் யதார்த்தமாய் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். சென்னையில் வாடகை வீட்டில் வசிக்கும் பலருக்கும் சொந்த வீடு என்பது பெரும் கனவாகவே இருக்கும். ஆனால், பள்ளியில் படிக்கும் சிறு பெண்ணான பிரதிக்ஷாவுக்கு அப்படி ஒரு கனவு வருகிறது. முருகதாஸ், சாந்தினி, பக்ஸ் ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் மிகவும் இயல்பாய் நடித்திருக்கிறார்கள்.
மலையாளப் படங்கள் போல யதார்த்தமான கதை, கதைக்களம் கொண்ட படங்கள் தமிழ் சினிமாவிலும் வரவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இந்தப் படத்தை நிச்சயம் ரசிப்பார்கள். கொஞ்சம் ரிப்பீட்டான காட்சிகளை மட்டும் தவிர்த்திருக்கலாம்.
Tags: raja magal, hendri, murugadoss, valina, pradiksha