பாலாஜி இயக்கத்தில், ஸ்ரீஜித் எடவானா இசையமைப்பில், பிரஜின், வித்யா பிரதீப், ராகுல் மாதவ் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

குற்றாலம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பதவியேற்கிறார் பிரஜின். விபத்தில் பெண் ஒருவர் இறந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்க, அது போல பல விபத்துகள் நடந்தது பற்றி அவருக்குத் தெரிய வருகிறது. அதன் பின்னணியை தீவிரமாக ஆராய்கிறார். அது ஒரு மெடிக்கல் மாபியா என அறிந்து கொள்கிறார். அதனால், தனது மனைவியையும் இழக்கிறார். இருப்பினும் குற்றவாளிகளை எப்படி கண்டுபிடித்தார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் மிடுக்காகவே நடித்திருக்கிறார் பிரஜின். அதற்கான உடல்மொழியும், கம்பீரத்தையும் சிறப்பாகவே வெளிப்படுத்தி இருக்கிறார். வில்லனாக ராகுல் மாதவ், அப்பாவி போல இருந்து கொண்டு அவ்வளவு வேலைகளைச் செய்து அதிர்ச்சியடைய வைக்கிறார். சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

ஒரு த்ரில்லர் படத்தில் அடுத்து என்ன நடக்கிறது என்ற பரபரப்பு திரைக்கதையில் இருக்க வேண்டும். இந்தப் படத்தில் அதைச் சரியாகக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். கிளைமாக்சில் மட்டும் அத்தனை திருப்பங்களை வைத்ததைத் தவிர்த்திருக்கலாம். வேறு பெரிய குறைகள் படத்தில் இல்லை.