ராகு கேது - விமர்சனம்

08 Aug 2025

'ராகு கேது' திரைப்படம் இந்து புராணங்களில் முக்கிய இடம் பெறும் ராகு மற்றும் கேது கிரகங்களின் தோற்றத்தையும், அவற்றை வழிபடுவதன் பின்னணியையும் எளிமையாகவும் ஆழமாகவும் விவரிக்கும் ஒரு புராணக் கதையாக விளங்குகிறது. இந்து மதத்தில் ராகு கேதுவின் முக்கியத்துவத்தைப் பற்றி பலருக்குத் தெரிந்தாலும், அவர்களை வணங்குவதன் நோக்கமும் பின்னணியும் இப்படத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

படத்தின் மையக் கதாபாத்திரமான சுபர்பானு, அசுர அரசன் சுரதாவின் மகனாக அறிமுகமாகிறார். அரச குலத்தைச் சேராத ரோஹினியை காதலிக்கும் சுபர்பானு, தந்தையின் எதிர்ப்பு இன்றி அவர்களின் காதலை ஏற்றுக்கொள்ளப்படுகிறார். இதற்கிடையில், தேவர்கள் பாற்கடலை கடைந்து அமுதம் பெறுவதற்கான திட்டத்தை நாரதர் மூலம் அறிந்த சுரதா, தனது அசுரப் படைகளை அனுப்பி அமுதப் பங்கைப் பெற உத்தரவிடுகிறார்.

பாற்கடல் கடையப்படும் காட்சியில், அசுரர்கள் பாம்பின் தலைப்பகுதியையும், தேவர்கள் வால்பகுதியையும் பிடித்து இழுக்கின்றனர். மகாவிஷ்ணு மோகினி வடிவில் தோன்றி அமுதத்தை தேவர்களுக்கு மட்டும் வழங்க, சுபர்பானு தந்திரமாக தேவர்களிடையே புகுந்து அமுதம் பருகிவிடுகிறார். இதனைக் கண்டு கோபமடைந்த மோகினி, சுபர்பானுவின் தலையை வெட்டி வீசுகிறார். ஆனால், அமுதத்தின் ஆற்றலால் அவர் மரணிக்கவில்லை; தலை (ராகு) மற்றும் உடல் (கேது) தனித்தனியாக உயிர் பெறுகின்றன.

இந்த நிலையில், சுபர்பானு துர்காதேவியை வணங்க, அவர் காட்சியளித்து, நாகப்பாம்பின் தலையை சுபர்பானுவின் உடலுக்கும், உடலை அவர் தலைக்கும் பொருத்துகிறார். இதனால், நாகப்பாம்பின் தலையுடன் கூடியவர் கேது எனவும், உடலுடன் கூடியவர் ராகு எனவும் அழைக்கப்படுகின்றனர். தொடர்ந்து, சிவபெருமானின் ஆசியால் ராகு மற்றும் கேது, ஏழு கிரகங்களுடன் இணைந்து நவக்கிரகங்களாக உயர்த்தப்படுகின்றனர். இந்தப் புராணக் கதையை படம் அழகாக எடுத்துரைக்கிறது.

படத்தில் இணைக்கப்பட்ட மற்றொரு கதை, ஒரு அரசனின் குழந்தையைப் புலவர் ஒருவர் வளர்க்கும் கதையாகும். அந்தக் குழந்தை பத்து வயதை அடையும் போது, காலசர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்படும் என்பதை அறிந்த புலவர், கேதுவின் அருளைப் பெறுவதற்காக முயற்சிக்கிறார். திருக்காளஹஸ்தி கோவிலில் வழிபாடு செய்தால் இந்தத் தோஷம் நீங்கும் என சிவபெருமான் அருள்பாலிக்கிறார். இந்தக் கிளைக் கதை, ராகு கேதுவின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்துகிறது.

படத்தில் நடித்த அனைவரும் தங்கள் பாத்திரங்களை திறம்பட செய்துள்ளனர். இயக்குநரே நாயகனாக நடித்திருக்கிறார். அவரது தமிழ் வசன உச்சரிப்பு பாராட்டுக்குரியது. சுபர்பானுவின் காதலியாக நடித்த சந்தியாஸ்ரீ, தனது அழகான நடிப்பு மற்றும் தெளிவான வசன உச்சரிப்பால் கவனம் ஈர்க்கிறார். சமுத்திரக்கனி குறைவான காட்சிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். துர்காதேவியாக கஸ்தூரி நிறைவாக நடித்திருக்கிறார்.

குறைந்த பட்ஜெட் படமாக இருந்தாலும், காட்சிகளின் தரம் மற்றும் ஒளிப்பதிவு ஆகியவற்றில் மேலும் கவனம் செய்திருக்கலாம். பின்னணி இசை இன்னும் வலுவாக இருந்திருந்தால், படத்தின் உணர்வு மேலும் உயர்ந்திருக்கும். சில காட்சிகளை மிகவும் ஆழமாகவும் காட்சிப்படுத்தியிருக்கலாம்.

ராகு கேது திரைப்படம், புராணக் கதையை அழகாகவும் எளிமையாகவும் சொல்லி, ராகு கேதுவின் முக்கியத்துவத்தையும் வழிபாட்டின் தேவையையும் தெளிவுபடுத்துகிறது. சில தொழில்நுட்பக் குறைபாடுகள் இருந்தாலும், புராணக் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம், ஆன்மிகத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை வழங்கும். படக்குழுவினரின் முயற்சி பாராட்டத்தக்கது.

Tags: rahu kethu

Share via: