புஷ்பா 2 - விமர்சனம்

06 Dec 2024

சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் வந்துள்ள படம்.

2021 ஆம் ஆண்டு வெளிவந்த ‘புஷ்பா - த ரைஸ்’ படத்தின் தொடர்ச்சியாக ‘புஷ்பா 2 - தி ரூல்’ படமாக இப்படம் வெளியாகியுள்ளது.

முதல் பாகத்தில் செம்மரம் வெட்டும் கூலித்தொழிலாளியாக இருந்து செம்மரக் கடத்தல் சிண்டிகேட்டின் தலைவராக உயர்ந்த புஷ்பாவின் பயணத்தை, இரண்டாம் பாகம் மேலும் விரிவாகக் கூறுகிறது. செம்மரக் கடத்தலுக்காக போராடும் புஷ்பா, தனது பண பலத்தால் அரசியல் அதிகாரம் பெற்ற அளவுக்கு வளர்கிறார்.

முதல்வரை சந்திக்கும் வாய்ப்பில், தனது மனைவியின் ஆசை நிறைவேற்ற முதல்வருடன் புகைப்படம் எடுக்க முயற்சிக்கும் புஷ்பா, முதல்வரின் மறுப்பை எதிர்கொள்கிறார். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற புஷ்பா தனது செம்மரக் கடத்தல் வியாபாரத்தை சர்வதேச அளவுக்கு விரிவுபடுத்தி, ஆந்திர மாநிலத்தின் முதல்வராக தன்னை மதிக்கும் ஒருவரை அமர்த்த முடிவு செய்கிறார்.  அவரது அந்த ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இயக்குநர் சுகுமார், புஷ்பாவின் அரசியல் பயணத்தை விறுவிறுப்பாக வடிவமைத்துள்ளார். ஜப்பானில் தொடங்கும் சண்டைக் காட்சி மூலம் புஷ்பாவின் சர்வதேச வியாபாரம் மற்றும் மூன்றாம் பாகத்திற்கு உள்ள மையத்தைக் குறிப்பதாக உள்ளது. படத்தில் அல்லு அர்ஜுன் வரும் ஒவ்வொரு காட்சியிலும் ஹீரோயிசம் தாறுமாறாக இருக்கிறது. அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் அந்தக் கால தெலுங்குப் படங்களை ஞாபகப்படுத்தினாலும் ஆட்சி அதிகாரத்தின் பின்னணி எப்படிப்பட்டவர்களின் கையில் உள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.

அல்லு அர்ஜுன் தனது நடிப்பில் பல பரிமாணங்களைக் காட்டியுள்ளார். சண்டைக் காட்சிகள், மனைவி செண்டிமெண்ட், அண்ணன் குடும்ப சென்ட்டிமென்ட் அவற்றோடு ஹீரோயிசத்தை வெளிப்படுத்துவதில் தனித்துத் தெரிகிறார். ராஷ்மிகா மந்தனா, புஷ்பாவின் மனைவியாக தனது பாத்திரத்தில் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பைக் கொடுத்துள்ளார்.

பகத் பாசில், காவல்துறை எஸ்.பி. ஆக, புஷ்பாவை வீழ்த்த முயற்சிக்கிறார். அவரது உளவுத்திறன் மற்றும் வில்லத்தனம், கதையின் முக்கியக் களமாக இருந்தாலும் ஏனோ ஒரு அழுத்தமான முத்திரை பதிக்கவில்லை.  ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி, ராவ் ரமேஷ், சுனில் மற்றும் அனுஷ்யா பரத்வாஜ் ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஒரே ஒரு பாடலுக்கு கிளாமர் நடனம் ஆடியுள்ளார் ஸ்ரீலீலா.

தேவி ஸ்ரீ பிரசாதின் இசை, முதல் பாகத்தின் அளவுக்கு அதிக ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், பின்னணி இசை கதைக்கான உயிரோட்டத்தை உயர்த்துகிறது. மிரோஸ்லா குபா புரோசெக் ஒளிப்பதிவு கதையின் பிரமாண்டத்தை உணர்த்துகிறது.

திரைக்கதையில் சில இடங்களில் லாஜிக்கின் மீறல்கள் காணப்பட்டாலும், குடும்ப செண்டிமெண்ட், அரசியல் நாகடங்கள், புஷ்பாவின் தைரியம் மற்றும் மாஸ் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை திருப்திப்படுத்துகிறது. ஆனால், படம் 3 மணி நேரம் கடந்த படம் என்பது சில சமயங்களில் சற்றே போரடிக்க வைக்கிறது.

புஷ்பா 2 மொத்தத்தில் ஒரு முழுமையான மாஸ் என்டர்டெயின்மென்ட். புஷ்பாவின் கதாபாத்திரம் அவரது ரசிகர்களை மட்டுமல்ல, மொழி கடந்து அனைவரையும் ரசிக்க வைக்கிறது.

Tags: pushpa 2, sukumar, allu arjun, devi sri prasad, rashmika mandana

Share via: