பேமிலி படம் - விமர்சனம்

06 Dec 2024

செல்வகுமார் திருமாறன் இயக்கத்தில், அனீவி இசையமைப்பில், உதய் கார்த்திக், விவேக் பிரசன்னா, பார்த்திபன் குமார், சுபிக்ஷா காயரோகணம் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

திரைப்படம் இயக்குவதற்கான முயற்சியில் இருக்கும்போது ஒரு தயாரிப்பாளரைத் தேடும் இளைஞனின் பயணத்தை மையமாகக் கொண்ட கதை இது.

நாயகன் உதய் கார்த்திக், தனது இயக்குநர் லட்சியத்தை எட்ட தயாரிப்பாளரைத் தேடி அலைவதை மையமாகக் கொண்டு ‘பேமிலி படம்’ உருவாக்கப்பட்டுள்ளது. தனது கனவுகளை மெய்ப்பிக்கும் ஒரு வாய்ப்பை அடைந்தாலும், சில சூழ்ச்சிகளால் அந்த வாய்ப்பை இழக்கும் உதய் கார்த்திக், தனது குடும்பத்தின் ஆதரவுடன் மீண்டும் போராடுவதோடு அவரது லட்சியத்தில் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.

உதய் கார்த்திக் தனது நடிப்பில் சிக்கனமான உணர்வுகளை வெளிப்படுத்தி, லட்சியத்தைத் துரத்தும் இளைஞனாக தன்னை நம்பவைத்திருக்கிறார். வாய்ப்பு கிடைக்கும் போது மகிழ்ச்சி, அதை இழக்கும்போது வருத்தம், மீண்டும் போராடும் குணம் ஆகியவற்றை நிறைவாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

உதய்யின் காதலியாக சுபிக்‌ஷா, சில காட்சிகள் மட்டுமே வந்தாலும், நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகனின் அண்ணனாக விவேக் பிரசன்னா, தம்பிக்கு முழு ஆதரவாக நிற்கும் பாசமான மற்றும் பரிவான வேடத்தில் அசத்தியிருக்கிறார். மற்றொரு அண்ணனாக பார்த்திபன் குமார் தனது நடிப்பின் மூலம் கதையை வலுப்படுத்தியுள்ளார்.

நாயகனின் அம்மாவாக ஸ்ரீஜா ரவி தனது இயல்பான நடிப்பின் மூலம் பார்வையாளர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். நாயகனின் நண்பராக சந்தோஷ், அஜித் ரசிகனாக தனது நகைச்சுவை நேர்த்தியால் படத்துக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.

மெய்யேந்திரனின் ஒளிப்பதிவும், அனீவியின் இசையும், சுதர்சனின் படத்தொகுப்பும் கதையின் ஓட்டத்திற்கு பக்கபலத்தைக் கொடுத்திருக்கின்றன. அஜீஷின் பின்னணி இசை காட்சிகளின் உணர்வுகளை அதிகரிக்க உதவுகிறது.

இயக்குநர் செல்வகுமார் திருமாறன், உதவி இயக்குநர்களின் கனவுகள் மற்றும் போராட்டங்களை சினிமாவாக கொண்டுவரும் பல படங்களில் இருந்து விலகி, குடும்பத்தின் ஆதரவால் வெற்றியை அடைய முடியும் என்ற முக்கியமான செய்தியுடன் ஒரு யதார்த்த படத்தைக் கொடுத்திருக்கிறார்.

குடும்பத்தை மையமாகக் கொண்டுள்ள இப்படம், சீரியல்களின் பாதையில் செல்லாமல், இயல்பான காட்சிகளையும் நகைச்சுவையையும் இணைத்து, ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. திரைக்கதை, குடும்ப செண்டிமெண்ட் மற்றும் கமர்ஷியல் அம்சங்களை சீராகப் பயன்படுத்தி, ஒரு முழுமையான பார்வையாளர்கள் படமாக அமைந்துள்ளது.
‘பேமிலி படம்‘ தமிழ் சினிமாவில் குடும்பங்களை மையமாகக் கொண்டு உருவான தரமான படங்களில் ஒன்றாக இடம் பெறும்.

Tags: family padam

Share via: